அத்தியாயம் : 39 அஸ்ஸுமர்

அத்தியாயம் : 39

அஸ்ஸுமர் – கூட்டங்கள்

மொத்த வசனங்கள் : 75

ல்லோர் சொர்க்கத்துக்கும், தீயோர் நரகத்துக்கும் கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள் என்று 71, 73 ஆகிய வசனங்கள் கூறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. (இது) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதம்.

2. (முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உம்மிடம் நாம் அருளியுள்ளோம். எனவே வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை வணங்குவீராக!

3. கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் "அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை''213 (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

4. அல்லாஹ் மகனை ஏற்படுத்த நினைத்திருந்தால், தான் படைத்தவற்றில் தான் நாடியதை எடுத்துக் கொண்டிருப்பான். அவன் தூயவன்.10 அவனே அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்.

5. தக்க காரணத்துடனேயே வானங்களையும்,507 பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலகட்டம் வரை ஓடும்.241கவனத்தில் கொள்க! அவனே மிகைத்தவன்; மன்னிப்பவன்.

6. உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான்.368 பின்னர் அவரிலிருந்து504 அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில்303 உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?

7. நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்தால் அல்லாஹ் உங்களை விட்டும் தேவைகளற்றவன்.485அவன் தனது அடியார்களிடம் மறுப்பைப் பொருந்திக் கொள்ள மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக் கொள்வான். ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்.265 பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.

8. மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும்போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான். அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுப்பதற்காக அவனுக்கு இணைகற்பிக்கிறான். "உனது (இறை)மறுப்பில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்! நீ நரகவாசிகளைச் சேர்ந்தவன்'' எனக் கூறுவீராக!

9. இரவு நேரங்களில் ஸஜ்தாச் செய்தவராகவும், நின்றவராகவும், மறுமையைப் பயந்து தனது இறைவனின் அருளை எதிர்பார்த்தவராகவும் வணங்கிக் கொண்டிருப்பவரா? (அல்லது அவ்வாறு இல்லாதவரா?) அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.

10. நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

11, 12. "வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை நான் வணங்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவனாக வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்'' எனக் கூறுவீராக!

13. "என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளின்1 வேதனைக்கு அஞ்சுகிறேன்'' என்றும் கூறுவீராக!

14, 15. உளத்தூய்மையுடன் எனது வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனையே வணங்குவேன்; அவனையன்றி நீங்கள் நாடியதை வணங்குங்கள்'' எனக் கூறுவீராக! "கியாமத் நாளில்1 தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் நட்டத்தை ஏற்படுத்தியோரே உண்மையில் நட்டமடைந்தவர்கள். கவனத்தில் கொள்க! இதுவே தெளிவான நட்டம்'' எனக் கூறுவீராக!26

16. அவர்களுக்கு மேற்புறம் நெருப்பினாலான தட்டுக்கள் இருக்கும். கீழ்ப்புறமும் தட்டுக்கள் இருக்கும். இதன் மூலம் அல்லாஹ் தனது அடியார்களை அச்சுறுத்துகிறான். என் அடியார்களே! எனக்கு அஞ்சுங்கள்!

17. யார் தீய சக்திகளை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அல்லாஹ்வை நோக்கித் திரும்புகிறாரோ அவர்களுக்கு நற்செய்தி உள்ளது. எனவே எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

18. அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள்.

19. யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா?

20. மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான்.

21. அல்லாஹ் வானத்திலிருந்து507 நீரை இறக்கி அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் அறியவில்லையா? பின்னர் அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர் அது காய்ந்து, மஞ்சள் நிறமாக ஆவதைக் காண்கிறீர். பின்னர் அதைச் சருகுகளாக ஆக்குகிறான். அறிவுடையோருக்கு இதில் அறிவுரை உள்ளது.

22. யாருடைய உள்ளத்தை இஸ்லாத்திற்காக அல்லாஹ் விரிவடையச் செய்து விட்டானோ அவரா (வழிகெட்டவர்)? அவர் தமது இறைவனிடமிருந்து (கிடைத்த) ஒளியில் இருக்கிறார். இறைவனை நினைப்பதை விட்டு உள்ளங்கள் இறுகிப் போனவர்களுக்குக் கேடு தான். அவர்களே தெளிவான வழிகேட்டில் இருப்பவர்கள்.

23. அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்த வேதமாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர்வழி காட்டுகிறான். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழிகாட்டுபவன் இல்லை.

24. யார் தமது முகத்தை கியாமத் நாளின்1 தீய வேதனையிலிருந்து காத்துக் கொள்கிறாரோ அவரா (நரகில் நுழைவார்)? "நீங்கள் செய்ததைச் சுவையுங்கள்!''265 என்று அநீதி இழைத்தோருக்குக் கூறப்படும்.

25. அவர்களுக்கு முன் சென்றோரும் (இறைச் செய்திகளைப்) பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் உணராத வகையில் அவர்களுக்கு வேதனை வந்தது.

26. அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் அல்லாஹ் இழிவைச் சுவைக்கச் செய்தான். மறுமையின் வேதனை தான் மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?

27. அவர்கள் படிப்பினை பெறுவதற்காக இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் கூறியுள்ளோம்.

28. அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு489 மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.) 227

29. ஒரு (அடிமை) மனிதனை அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். அவனுக்கு உரிமையாளர்களாக மாறுபட்ட கருத்துடைய பல பங்காளிகள் உள்ளனர். இன்னொரு மனிதனையும் உதாரணமாகக் கூறுகிறான். அவன் ஒரு மனிதனுக்கு மட்டுமே உடையவன். இவ்விருவரும் உதாரணத்தால் சமமானவர்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

30. (முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.

31. பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் கியாமத் நாளில்1 வழக்குரைப்பீர்கள்.

32. அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து, தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யெனக் கருதியவனை விட அநீதி இழைத்தவன் யார்? (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நரகத்தில் ஒதுங்குமிடம் இல்லையா?

33. உண்மையைக் கொண்டு வந்தவரும், அதை உண்மைப்படுத்துபவருமே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

34. அவர்கள் விரும்பியவை அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. நன்மை செய்வோருக்கு இதுவே கூலி.

35. அவர்கள் செய்த தீமைகளை அவர்களை விட்டும் அல்லாஹ் நீக்குவான். அவர்கள் செய்து வந்த நன்மைக்காக அவர்களுக்கு அவர்களின் கூலியைக் கொடுப்பான்.

36. தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? அவனல்லாதோரைப் பற்றி அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை.

37. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை வழிகெடுப்பவன் இல்லை. அல்லாஹ் மிகைத்தவனாகவும், தண்டிப்பவனாகவும் இல்லையா?

38. "வானங்களையும்,507 பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். "அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!'' என்று கேட்பீராக! "அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுப்பவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்'' என்று கூறுவீராக!

39, 40. "என் சமுதாயமே! உங்கள் வழியிலேயே செயல்படுங்கள்! நானும் செயல்படுகிறேன். யாருக்கு இழிவு தரும் வேதனை கிடைக்கும்? யார் மீது நிலையான வேதனை இறங்கும்? என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள்'' என்று கூறுவீராக!26

41. மனிதர்களுக்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை நாம் உமக்கு அருளினோம். நேர்வழி பெற்றவர் தமக்காகவே நேர்வழி பெறுகிறார். வழிகெடுபவர் தமக்கு எதிராகவே வழிகெடுகிறார். (முஹம்மதே!) நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர். 81

42. உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

43. "அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை17 அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உரிமையற்றவர்களாகவும், விளங்காதவர்களாகவும் இருந்தாலுமா?'' என்று கேட்பீராக!

44. "பரிந்துரைகள்17 அனைத்தும் அல்லாஹ்வுக்கே'' என்று கூறுவீராக! வானங்கள்507 மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

45. அல்லாஹ் மட்டும் குறிப்பிடப்படும்போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் குறிப்பிடப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

46."அல்லாஹ்வே! வானங்களையும்,507 பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனே! உனது அடியார்கள் முரண்பட்ட விஷயத்தில் நீயே அவர்களிடையே தீர்ப்பு வழங்குவாய்'' என்று கூறுவீராக!

47. அநீதி இழைத்தோருக்கு பூமியில் உள்ளவை அனைத்தும், அத்துடன் அது போன்ற இன்னொரு மடங்கும் இருக்குமானால் கியாமத் நாளில்1 தீய வேதனைக்கு ஈடாகக் கொடுப்பார்கள். அவர்கள் எண்ணிப் பார்க்காதவை அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளிப்படும்.

48.அவர்கள் செய்த தீயவை அவர்களுக்கு வெளிப்படும்.265 அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.

49.மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமானால் நம்மை அழைக்கிறான். பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால் "எனது அறிவால் இது எனக்குத் தரப்பட்டது'' எனக் கூறுகிறான். அவ்வாறல்ல! அது ஒரு சோதனை!484 எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

50.அவர்களுக்கு முன் சென்றோரும் இதையே கூறினர். அவர்கள் உழைத்தது அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.

51. அவர்கள் செய்த தீவினைகள் அவர்களைப் பிடித்தன. இவர்கள் செய்த தீவினைகள், இவர்களில் அநீதி இழைத்தோரைப் பிடிக்கும்.265 இவர்கள் வெல்வோராக இல்லை.

52. தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாகவும், அளவோடும் அல்லாஹ் வழங்குகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.345

53.தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! 471 பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

54.உங்களுக்கு வேதனை வந்து, உங்களுக்கு உதவி செய்யப்படாத நிலை வருவதற்கு முன் உங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டு அவனிடமே திரும்புங்கள்!

55, 56, 57, 58. நீங்கள் அறியாத நிலையில் திடீரென்று உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னரும், "அல்லாஹ்வின் கடமையில் நான் குறை வைத்ததற்காக எனக்குக் கேடு தான்; நான் கேலி செய்தவனாகி விட்டேனே'' என்று எவரும் கூறுவதற்கு முன்னரும், "அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருந்தால் (அவனை) அஞ்சுவோரில் ஆகியிருப்பேனே'' என்று கூறுவதற்கு முன்னரும், வேதனையைக் காணும் நேரத்தில் "திரும்புதல் எனக்கு இருந்தால் நல்லோரில் ஆகியிருப்பேனே'' என்று கூறுவதற்கு முன்னரும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட அழகானதைப் பின்பற்றுங்கள்!26

59. "மாறாக, உன்னிடம் எனது வசனங்கள் வந்தன. அவற்றை நீ பொய்யெனக் கருதினாய். ஆணவம் கொண்டாய். (என்னை) மறுப்பவனாக இருந்தாய்'' (எனக் கூறப்படும்.)

60. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோரின் முகங்களைக் கியாமத் நாளில்1கருப்பாக காண்பீர்! ஆணவம் கொண்டோருக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா?

61. (தன்னை) அஞ்சியோரை வெற்றி பெறச் செய்து அல்லாஹ் காப்பாற்றுவான். அவர்களுக்குத் தீங்கு ஏற்படாது. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

62. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். அவன் ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளன்.

63. வானங்கள்507 மற்றும் பூமியின் திறவுகோல்கள் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் வசனங்களை மறுப்பவர்களே நட்டமடைந்தவர்கள்.

64. அறியாதவர்களே! அல்லாஹ் அல்லாததை நான் வணங்க வேண்டுமென்றா எனக்குக் கட்டளையிடுகிறீர்கள் எனக் கேட்பீராக!

65, 66. "நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்;498 நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.26

67. அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில்1 பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள்488 அடங்கும். வானங்கள்507 அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும்.225&453 அவன் தூயவன்.10 அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.

68. ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும்,507 பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள்.346

69. பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்)வைக்கப்படும். நபிமார்களும், சாட்சிகளும் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

70. ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்தவை முழுமையாக வழங்கப்படும். அவர்கள் செய்வதை அவன் நன்கு அறிந்தவன்.

71. (ஏகஇறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். "உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா? இந்த நாளை1நீங்கள் சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா?'' என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் 'ஆம்' என்பார்கள். எனினும் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு வேதனை என்ற கட்டளை உறுதியாகி விட்டது.

72. "நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள்!'' என்று கூறப்படும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.

73. தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். முடிவில் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் "உங்கள் மீது ஸலாம்159 உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்! நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்!'' என அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்.

74. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவன் தனது வாக்குறுதியை எங்களுக்கு உண்மைப்படுத்தி விட்டான். சொர்க்கத்தில் நாங்கள் விரும்பியவாறு தங்கிட, இப்பூமியை எங்களுக்கு உடமையாக்கினான். உழைத்தோரின் கூலி நல்லதாகவே இருக்கிறது என்று அவர்கள் கூறுவார்கள்.

75. வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, அர்ஷைச்488 சுற்றி வருவதை நீர் காண்பீர். அவர்களுக்கு இடையே நியாயத் தீர்ப்பு வழங்கப்படும். "அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறப்படும்.

 

Leave a Reply