விபச்சாரத்துக்கு மன்னிப்பு உண்டா?

விபச்சாரத்துக்கு மன்னிப்பு உண்டா?

கேள்வி: ருவர் விபச்சாரக் குற்றத்தின் விபரீதத்தை உணராமல் இளம் வயதில் விபச்சாரம் செய்து விட்டார். இப்போது அதற்காக மனம் வருந்துகிறார். இப்போது அவர் என்ன செய்ய வேண்டும்? அல்லது மறுமையில் என்ன தண்டனை கிடைக்கும்?

முஹம்மத் ஜஃப்ரீன்

பதி்ல் :

விபச்சாரம் என்பது தண்டனைக்குரிய மாபெரும் குற்றமாகும்.

ஒருவர் பெரும் பாவம் என்று அறியாமல் விபச்சாரம் செய்து விட்டால், பின்னர் அது தவறு என்று அறிந்து மனம் வருந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக இறைவன் அந்தப் பாவத்தை மன்னிப்பான். இறைவனின் கருணையிலிருந்து நாம் நிராசையடைந்து விடக்கூடாது.

அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் ''நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

திருக்குர்ஆன் 4:17, 18

(முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் ''உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்'' எனக் கூறுவீராக! உங்கள் இறைவன் அருள் புரிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 6:54

அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கோரி, திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 16:119

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

திருக்குர்ஆன் 39:53

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் அறியாமையினால் ஒருவர் ஒரு பாவத்தைச் செய்த பிறகு மனம் வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரினால் நிச்சயமாக இறைவன் அவரை மன்னிப்பான் என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

மேலும் விபச்சாரம் செய்தவர்கள் செய்கின்ற நற்காரியங்களின் காரணமாகவும் இறைவன் அவர்களது பாவங்களை மன்னிப்பான்.

صحيح البخاري

3467 – حَدَّثَنَا سَعِيدُ بْنُ تَلِيدٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَيْنَمَا كَلْبٌ يُطِيفُ بِرَكِيَّةٍ، كَادَ يَقْتُلُهُ العَطَشُ، إِذْ رَأَتْهُ بَغِيٌّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ، فَنَزَعَتْ مُوقَهَا فَسَقَتْهُ فَغُفِرَ لَهَا بِهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 3467

எனவே அறியாமையினால் விபச்சாரம் என்ற பெரும்பாவத்தைச செய்தவர்கள் மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கோரினால் நிச்சயமாக இறைவன் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பான்.

صحيح البخاري

1237 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا وَاصِلٌ الأَحْدَبُ، عَنِ المَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَتَانِي آتٍ مِنْ رَبِّي، فَأَخْبَرَنِي – أَوْ قَالَ: بَشَّرَنِي – أَنَّهُ: مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الجَنَّةَ " قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: «وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ»

அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

''எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது 'எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்'  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான், ''அவர் விபச்சாரத்திலோ, திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?'' எனக் கேட்டேன். அவர் விபசாரத்திலோ, திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும் தான்''  என்று பதிலளித்தார்கள்.'

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

நூல் : புகாரி 1237

விபச்சாரக் குற்றம் பெரும் பாவமாக இருந்தாலும் இறைவனின் மன்னிப்பிற்குரிய குற்றம்தான் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன