அத்தியாயம் : 33 அல் அஹ்ஸாப்

அத்தியாயம் : 33

அல் அஹ்ஸாப் – கூட்டுப் படையினர்

மொத்த வசனங்கள் : 73

ல்வேறு எதிரிகள் கூட்டாகப் படைதிரட்டி தாக்க வந்த நிகழ்ச்சி பற்றியும், அப்போது இறைவன் புறத்திலிருந்து கிடைத்த பேருதவி பற்றியும் 9வது வசனம் முதல் 27வது வசனம் வரை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. நபியே! அல்லாஹ்வை அஞ்சுவீராக! (ஏகஇறைவனை) மறுப்போருக்கும், நயவஞ்சகர்களுக்கும் கட்டுப்படாதீர்! அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

2. (முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

3. அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

4. எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை502 அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை.316 உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை.317 இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்.

5. அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

6. நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.322 நம்பிக்கை கொண்டோரையும், ஹிஜ்ரத்460 செய்தோரையும் விட உறவினர்களே ஒருவருக்கு மற்றவர் முன்னுரிமை பெற்றவர்.385 நீங்களாக உங்கள் நண்பர்களுக்கு உபகாரம் செய்தாலே தவிர. இது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது. இது பதிவேட்டில்157 எழுதப்பட்டதாக இருக்கிறது.

7, 8. நபிமார்களிடம் (குறிப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடமும் அவர்களது உறுதிமொழியை95 நாம் எடுத்ததை நினைவூட்டுவீராக! உண்மையாளர்களை அவர்களது உண்மை பற்றி விசாரிப்பதற்காக அவர்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்தோம். (தன்னை) மறுப்போருக்கு அவன் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளான்.26

9. நம்பிக்கை கொண்டோரே! உங்களிடம் கூட்டுப் படையினர் வந்தபோது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்! அவர்களுக்கு எதிராகக் காற்றையும், நீங்கள் காணாத படையினரையும் அனுப்பினோம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவனாக488இருக்கிறான்.

10, 11. அவர்கள் உங்கள் மேற்புறத்திலிருந்தும், உங்கள் கீழ்ப்புறத்திலிருந்தும் வந்தபோது, பார்வைகள் நிலை குத்தி, இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து, அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவிதமான எண்ணங்களைக் கொண்டபோது, அங்கு தான் நம்பிக்கை கொண்டோர் சோதிக்கப்பட்டனர்.484 அவர்கள் கடுமையாக ஆட்டுவிக்கப்பட்டார்கள்.26

12. "அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏமாற்றும் வாக்குறுதியையே அளித்தனர்'' என்று நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும் கூறியபோதும் (சோதிக்கப்பட்டனர்).

13. "யஸ்ரிப் (மதீனா)வாசிகளே! உங்களால் (எதிர்த்து) நிற்க முடியாது. எனவே திரும்பிச் செல்லுங்கள்!'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறியபோதும் (சோதிக்கப்பட்டனர்). பாதுகாப்பானவையாக இருந்தும் "எங்கள் வீடுகள் பாதுகாப்பற்றவையாக உள்ளன'' எனக் கூறி நபியிடம் அவர்களில் ஒரு பிரிவினர் அனுமதி கோரினார்கள். அவர்கள் வெருண்டோடுவதைத் தவிர வேறெதனையும் விரும்பவில்லை.

14. அவர்களுக்கு எதிராக அதன் பல பாகங்களிலிருந்தும் படையெடுக்கப்பட்டு பின்னர் குழப்பம் விளைவிக்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டிருந்தால் அதைச் செய்திருப்பார்கள். சிறிதளவே தவிர இதில் தாமதிக்க மாட்டார்கள்.

15. புறங்காட்டி ஓடுவதில்லை என்று முன்னர் அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்திருந்தனர். அல்லாஹ்விடம் எடுத்த உறுதிமொழி விசாரிக்கப்படுவதாக இருக்கிறது.

16. "நீங்கள் வெருண்டு ஓடினால் வெருண்டோடுவது மரணத்தையோ, கொல்லப்படுவதையோ தடுக்காது. அப்போது குறைவாகவே நீங்கள் சுகவாழ்வளிக்கப்படுவீர்கள்'' என்று கூறுவீராக!

17. "அல்லாஹ் உங்களுக்குத் தீங்கை நாடினால் அவனிடமிருந்து உங்களைக் காப்பவன் யார்?'' அல்லது உங்களுக்கு அருளை நாடினால் (அதைத் தடுப்பவன் யார்) என்று கேட்பீராக! அல்லாஹ்வையன்றி பொறுப்பாளனையோ, உதவியாளனையோ அவர்கள் காண மாட்டார்கள்.

18. உங்களில் தடை செய்வோரையும், "எங்களிடம் வந்து விடுங்கள்!'' என்று தமது சகோதரர்களுக்குக் கூறியோரையும் அல்லாஹ் அறிவான். அவர்கள் குறைவாகவே தவிர போர்க்களத்திற்கு வர மாட்டார்கள்.

19. உங்களுக்கு எதிராக அவர்கள் கஞ்சத்தனம் செய்கின்றனர். அச்சம் வரும்போது மரண (பய)த்தினால் மூர்ச்சை அடைந்தவனைப் போல் கண்கள் சுழல அவர்கள் உம்மைப் பார்ப்பதை நீர் காண்பீர். பயம் தெளிந்ததும் (போரில் கிடைத்த) பொருட்களில் பேராசை கொண்டு கூர்மையான நாவுகளால் உங்களைத் துன்புறுத்துகின்றனர். அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்களின் செயல்களை அல்லாஹ் அழித்து விட்டான். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே இருக்கிறது.

20. கூட்டுப் படையினர் இன்னும் செல்லவில்லை என்று நினைக்கின்றனர். கூட்டுப் படையினர் வந்து விட்டால் கிராமப்புறத்தாருடன் இருந்து கொண்டு உங்களைப் பற்றிய செய்திகளை விசாரித்துக் கொண்டிருக்கவே விரும்புவார்கள். உங்களுடன் அவர்கள் இருந்திருந்தாலும் குறைவாகவே தவிர போரிட்டிருக்க மாட்டார்கள்.

21. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.318

22. நம்பிக்கை கொண்டோர் கூட்டுப் படையினரைக் கண்டபோது "இதுவே அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும், அவனது தூதரும் உண்மையே சொன்னார்கள்'' என்று கூறினர். நம்பிக்கையையும், கட்டுப்படுதலையும் தவிர வேறெதனையும் அவர்களுக்கு (இது) அதிகமாக்கவில்லை.

23. அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் நம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். தமது இலட்சியத்தை அடைந்தவரும் அவர்களில் உள்ளனர். (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றவில்லை.

24. உண்மையாளர்களுக்கு அவர்களது உண்மையின் காரணமாக அல்லாஹ் பரிசளிப்பான். நாடினால் நயவஞ்சகர்களைத் தண்டிப்பான். அல்லது அவர்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

25. (தன்னை) மறுப்போரை எந்த நன்மையையும் அடையாமல் அவர்களது கோபத்துடனேயே அல்லாஹ் திருப்பி அனுப்பினான். நம்பிக்கை கொண்டோருக்காக போரிட அல்லாஹ் போதுமானவன். அல்லாஹ் வலிமை மிக்கவனாகவும், மிகைத்தவனாகவும் இருக்கிறான்.

26. வேதமுடையோரில்27 அவர்களுக்கு உதவி செய்தோரை அவர்களின் கோட்டைகளிலிருந்து இறக்கினான். அவர்களின் உள்ளங்களில் அச்சத்தைப் போட்டான். ஒரு கூட்டத்தைக் கொன்றீர்கள்! மறு கூட்டத்தைச் சிறைப் பிடித்தீர்கள்.

27. அவர்களது பூமிக்கும், வீடுகளுக்கும், அவர்களது செல்வங்களுக்கும், நீங்கள் கால் வைக்காத பூமிக்கும் உங்களை வாரிசாக்கினான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.

28. "இவ்வுலக வாழ்வையும், இதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்பினால் வாருங்கள்! உங்களுக்கு வசதியளித்து அழகிய முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன்'' என்று நபியே (முஹம்மதே!) உமது மனைவியரிடம் கூறுவீராக!

29. நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வாழ்வையும் விரும்பினால் உங்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைத் தயாரித்துள்ளான்.

30. நபியின் மனைவியரே! உங்களில் யாரேனும் தெளிவான வெட்கக்கேடானதைச் செய்தால் அவருக்கு இரு மடங்கு வேதனை அளிக்கப்படும்.500 அது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே இருக்கிறது.

31. (நபியின் மனைவியரான) உங்களில் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நல்லறம் செய்பவருக்கு அவரது கூலியை இரண்டு தடவை வழங்குவோம். அவருக்கு மதிப்புமிக்க உணவையும் தயாரித்துள்ளோம்.500

32. நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர்.500 நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

33. உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்!500 தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஜகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

34. உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும்67நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.

35. முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

36. அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.

37. யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் "உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்'' என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்டபோது (விவாகரத்துச் செய்தபோது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.319

38, 39. அல்லாஹ் அவருக்காகச் செய்த ஏற்பாட்டில் நபியின் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வை அஞ்சி, அவனைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாது அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்ன முன் சென்றோரிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. அல்லாஹ் கணக்கெடுக்கப் போதுமானவன்.26

40. முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை.320 மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களின் முத்திரையாகவும்187 இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

41. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்!

42. அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்!

43. இருள்களிலிருந்து303 ஒளிக்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக, அவனே உங்களுக்கு அருள் புரிகிறான். அவனுடைய வானவர்கள் உங்களுக்காக அருளைத் தேடுகின்றனர். அவன் நம்பிக்கை கொண்டோரிடம் நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

44. அவனை அவர்கள் சந்திக்கும்488 நாளில் அவர்களின் காணிக்கை ஸலாம்159 என்பதாகும். அவர்களுக்காக மரியாதைக்குரிய கூலியையும் அவன் தயாரித்துள்ளான்.

45, 46. நபியே (முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும், ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்.26

47. "நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ்விடமிருந்து பெரிய அருட்கொடை உள்ளது'' என்று அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

48. (ஏகஇறைவனை) மறுப்போருக்கும், நயவஞ்சகருக்கும் கட்டுப்படாதீர்! அவர்களின் தொல்லைகளை அலட்சியப்படுத்துவீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

49. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து66 விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை.69 அவர்களுக்கு வாழ்க்கை வசதி அளியுங்கள்.74 அழகிய முறையில் அவர்களை விட்டு விடுங்கள்!

50. நபியே! (முஹம்மதே!) உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக்108கொடுத்து விட்டீரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும்,107 உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத்460 செய்தோரையும் உமக்கு (மணமுடிக்க) நாம் அனுமதித்துள்ளோம். நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணக்க விரும்பினால் (அனுமதித்துள்ளோம்) உமக்குச் சங்கடம் ஏற்படக் கூடாது என்பதற்காக நம்பிக்கை கொண்டோருக்கு இல்லாமல் உமக்கு மட்டும் சிறப்பான சட்டமாகும்.378 (மற்றவர்களுக்கு) அவர்களின் மனைவியர் மற்றும் அடிமைகள் குறித்து ஏற்படுத்தியுள்ளதை அறிவோம். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

51. (முஹம்மதே!) அவர்களில் நீர் விரும்பியவரை ஒதுக்கி விடலாம். விரும்பியவரை உம்முடன் வைத்துக் கொள்ளலாம். நீர் ஒதுக்கியோரில் யாரை விரும்புகிறீரோ (அவரை மீண்டும் சேர்த்துக் கொள்வதில்) உம் மீது குற்றம் இல்லை. அவர்களின் கண்கள் குளிரவும், அவர்கள் கவலைப்படாமல் இருக்கவும், நீர் அவர்களுக்கு எதைக் கொடுக்கிறீரோ அதில் அவர்கள் அனைவரும் திருப்தியடையவும் இது ஏற்றது. உங்கள் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், சகிப்புத்தன்மை உடையவனாகவும் இருக்கிறான்.

52. அடிமைப் பெண்கள் தவிர107 வேறு பெண்கள் இதன் பிறகு உமக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தபோதும் சரியே. (அவர்களை விவாகரத்துச் செய்து விட்டு) அவர்களுக்குப் பகரமாக வேறு மனைவியரை மாற்றுவதும் கூடாது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

53. நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்!500 இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.322

54. எதையேனும் நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிபவனாக இருக்கிறான்.

55. அவர்களின் தந்தையர், அவர்களின் புதல்வர்கள், அவர்களின் சகோதரர்கள், அவர்களது சகோதரர்களின் புதல்வர்கள், அவர்களது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், அவர்களின் அடிமைகள்107 விஷயத்தில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவனாக488 இருக்கிறான்.

56. அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும்159 கூறுங்கள்!324

57. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் தொந்தரவு செய்வோரை இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான்.6 அவர்களுக்கு இழிவு தரும் வேதனையையும் தயாரித்துள்ளான்.

58. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.

59. நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக!472 அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.''300அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

60. நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும், மதீனாவில் பொய்களைப் பரப்புவோரும் விலகிக் கொள்ளாவிட்டால் (முஹம்மதே!) உம்மை அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வைப்போம். பின்னர் இங்கே குறைவாகவே உமக்கருகில் குடியிருப்பார்கள்.185

61.அவர்கள் சபிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் பிடிக்கப்பட்டு கொன்றொழிக்கப்படுவார்கள்.

62. முன் சென்றோர் விஷயத்தில் இதுவே அல்லாஹ்வின் நடைமுறையாக இருந்தது. அல்லாஹ்வின் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காண மாட்டீர்.

63.(முஹம்மதே!) யுகமுடிவு நேரம்1 பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். "அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது'' எனக் கூறுவீராக! யுகமுடிவு நேரம்1 சமீபத்தில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?

64. (ஏகஇறைவனை) மறுப்போரை அல்லாஹ் சபித்து விட்டான்.6 அவர்களுக்கு நரகத்தையும் தயாரித்துள்ளான்.

65. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். எந்தப் பொறுப்பாளனையோ, உதவியாளனையோ காண மாட்டார்கள்.

66. அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில்6 "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள்.

67. "எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள்.

68. "எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' (எனவும் கூறுவார்கள்.)

69. நம்பிக்கை கொண்டோரே! மூஸாவுக்குத் தொந்தரவு கொடுத்தோர் போல் ஆகி விடாதீர்கள்! அவர்கள் கூறியதிலிருந்து அவரை அல்லாஹ் நீக்கினான். அல்லாஹ்விடம் அவர் தகுதியுடையவராக இருந்தார்.394

70. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!

71. அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.

72. வானங்களுக்கும்,507 பூமிக்கும், மலைகளுக்கும் அமானிதத்தை446 நாம் முன்வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான்.

73. நயவஞ்சகர்களான ஆண்களையும், பெண்களையும், இணை கற்பிக்கும் ஆண்களையும், பெண்களையும் அல்லாஹ் தண்டிப்பதற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

 

Leave a Reply