அத்தியாயம் : 35 ஃபாத்திர்

அத்தியாயம் : 35

ஃபாத்திர் – படைப்பவன்

மொத்த வசனங்கள் : 45

ந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஃபாத்திர் என்ற சொல் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. வானங்களையும்,507 பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக161அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

2. மனிதர்களுக்காக அல்லாஹ் திறந்து விட்ட எந்த அருளையும் தடுப்பவன் எவனும் இல்லை. அவன் தடுத்ததை அதற்குப் பின் அனுப்புபவனும் இல்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

3.மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும்,507 பூமியிலிருந்தும் உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர உணவளிக்கும்463(வேறு) படைப்பாளன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எவ்வாறு நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?

4. (முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.

5. மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்) அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

6. ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.

7. நிராகரிப்போருக்கு கடுமையான வேதனை உண்டு. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு மன்னிப்பும், பெரிய கூலியும் உண்டு.

8. யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அவனும் அழகானதாகக் கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம்.81 அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

9. அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைத்து விடுகிறது. இறந்த ஊருக்கு அதைப் பொழிவிக்கிறோம். அதன் மூலம் இறந்த பூமியை உயிர்ப்பிக்கிறோம். மீண்டும் எழுப்புவதும் இவ்வாறே.

10. யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.

11. அல்லாஹ் உங்களை மண்ணாலும்,368&506 பின்னர் விந்துத் துளியாலும் படைத்தான். பின்னர் உங்களை ஜோடிகளாக அமைத்தான். ஒரு பெண் கருவுறுவதும், ஈன்றெடுப்பதும் அவனுக்குத் தெரியாமல் இருப்பதில்லை. ஒருவனுக்கு வாழ்நாள் வழங்கப்படுவதும், அவனது வாழ்நாள் குறைக்கப்படுவதும் பதிவேட்டில்157 இல்லாமல் இல்லை. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

12. இரண்டு கடல்கள் சமமாகாது. இது இனிமையானதும், அடர்த்தி குறைந்ததும், அருந்த ஏற்றதுமாகும். அதுவோ உப்பும், கசப்பும் உடையது. ஒவ்வொன்றிலிருந்தும் பசுமையான மாமிசத்தை உண்ணுகின்றீர்கள்.171 நீங்கள் அணிகின்ற ஆபரணத்தை (அதிலிருந்து) வெளிப்படுத்துகின்றீர்கள். நீங்கள் அவனது அருளைத் தேடவும், நன்றி செலுத்திடவும் அதைக் கிழித்துக் கொண்டு கப்பல்கள் செல்வதைக் காண்கிறீர்.

13. அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன.241 அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.

14. நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில்1 நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

15.மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவைகளற்றவன்; 485 புகழுக்குரியவன்.

16. அவன் நாடினால் உங்களை அழித்து விட்டு புதிய படைப்பைக் கொண்டு வருவான்.

17. இது அல்லாஹ்வுக்குக் கடினமானது அல்ல.

18. ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்.265 கனத்த சுமையுடையவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது. தனிமையில் இருக்கும்போது தமது இறைவனை அஞ்சி, தொழுகையை நிலைநாட்டியோரையே நீர் எச்சரிக்கை செய்வீர். பரிசுத்தமாக நடப்பவர் தமக்காகவே பரிசுத்தமாகிக் கொள்கிறார். அல்லாஹ்விடமே திரும்புதல் உள்ளது.

19, 20, 21. குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும்,303 ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகா.26

22. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

23. நீர் எச்சரிக்கை செய்பவர் தவிர வேறில்லை.

24. நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வராமல் இருந்ததில்லை.

25. அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் (தூதர்களை) பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.105

26. பின்னர் (என்னை) மறுத்தோரைப் பிடித்தேன். எனது பதிலடி எவ்வாறு இருந்தது?

27. அல்லாஹ்வே வானத்திலிருந்து507 தண்ணீரை இறக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட கனிகளை வெளியாக்கினோம். மலைகளில் வெண்மையும், சிவப்பும் மாறுபட்ட நிறங்களைக் கொண்டதுமான பாதைகள் உள்ளன. கருப்பு நிறமுடையவைகளும் உள்ளன.

28. இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால்நடைகளிலும் மாறுபட்ட நிறங்களைக் கொண்டவை உள்ளன. அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

29. அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து தொழுகையை நிலைநாட்டி நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோர் நட்டமில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்க்கின்றனர்.

30. ஏனெனில் அவர்களின் கூலிகளை அவன் முழுமையாக அளிப்பான். தனது அருட்கொடைகளில் அவர்களுக்கு இன்னும் அதிகமாகவும் அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன்.6

31. (முஹம்மதே!) வேதத்திலிருந்து நாம் உமக்கு அறிவித்திருப்பதே உண்மையானது. அது தனக்கு முன் சென்றதை4 உண்மைப்படுத்துகிறது. அல்லாஹ் தனது அடியார்களை நன்கறிந்தவன்; பார்ப்பவன். 488

32. பின்னர் நமது அடியார்களில் நாம் தேர்வு செய்து கொண்டோரை வேதத்துக்கு வாரிசுகளாக்கினோம். அவர்களில் தமக்குத் தாமே தீங்கிழைத்தோரும் உள்ளனர். அவர்களில் நடுநிலையானவர்களும் உள்ளனர். அவர்களில் நன்மையை நோக்கி அல்லாஹ்வின் கட்டளைப்படி விரைந்து செல்வோரும் உள்ளனர். இதுவே பேரருள்.

33. நிலையான சொர்க்கச் சோலைகளில் அவர்கள் நுழைவார்கள். அங்கே தங்கக் காப்புகளும், முத்துக்களும் அணிவிக்கப்படுவார்கள். அங்கே அவர்களின் ஆடை பட்டாகும்.

34. "எங்களை விட்டும் கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். எங்கள் இறைவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன்''6 என்றும் கூறுவார்கள்.

35. "அவன் தனது அருளால் எங்களை நிலையான உலகில் தங்க வைத்தான். இங்கே எங்களுக்குச் சிரமமும் ஏற்படாது. களைப்பும் ஏற்படாது'' (என்றும் கூறுவார்கள்.)

36. (நம்மை) மறுத்தோருக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்படாது. அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. (நம்மை) மறுக்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே வேதனை அளிப்போம்.

37. "எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி (இனிமேல்) நல்லறங்களைச் செய்கிறோம்'' என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். "படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா? எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை'' (என்று கூறப்படும்)

38. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ள மறைவானவற்றை அல்லாஹ் அறிபவன். உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்.

39. அவனே உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக46 ஆக்கினான். யாரேனும் (ஏகஇறைவனை) மறுத்தால் அவரது மறுப்பு அவருக்கே எதிரானது. மறுப்போருக்கு அவர்களின் மறுப்பு அவர்களின் இறைவனிடம் கோபத்தைத் தவிர அதிகமாக்காது. மறுப்போருக்கு அவர்களின் மறுப்பு, நட்டத்தைத் தவிர அதிகமாக்காது.

40. "அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன? என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது507 அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!" என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.

41. வானங்களும்,507 பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது.328 அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

42, 43. தங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்தால் எந்த ஒரு சமுதாயத்தையும் விட தாங்கள் நேர்வழி பெற்றோராக ஆவோம் என அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தார்கள். அவர்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்தபோது அது அவர்களுக்கு வெறுப்பையும், பூமியில் பெருமையடிப்பதையும், கெட்ட சூழ்ச்சியையும் தவிர (வேறு எதையும்) அதிகமாக்கவில்லை. கெட்ட சூழ்ச்சி அதைச் செய்தோரையே சூழ்ந்து கொள்ளும். முன்னோர்களின் கதியைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அல்லாஹ்வின் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் காணமாட்டீர்! அல்லாஹ்வின் நடைமுறையில் எந்தத் திருப்பத்தையும் காணமாட்டீர்.26

44. அவர்கள் பூமியில் பயணம் செய்து தமக்கு முன் சென்றோரின் முடிவு எவ்வாறு அமைந்தது என்று பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களை விட கடும் வலிமை பெற்று இருந்தனர். வானங்களிலும்,507 பூமியிலும் அல்லாஹ்வை எதுவும் வெற்றி கொள்ள முடியாது. அவன் அறிந்தவனாகவும், ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான்.

45. மனிதர்களை அவர்கள் செய்தவற்றுக்காக அல்லாஹ் பிடிப்பதாக இருந்தால் பூமியின் மேல் எந்த உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். மாறாகக் குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளான். அவர்களின் அவகாசம் வரும்போது அல்லாஹ் தனது அடியார்களைப் பார்ப்பவனாக488 இருக்கிறான்.

 

Leave a Reply