அத்தியாயம் : 4 அன்னிஸா

அத்தியாயம் : 4 

அன்னிஸா – பெண்கள்

மொத்த வசனங்கள் : 176

பெண்களின் சொத்துரிமை, குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, போன்ற பல சட்டங்கள் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதால் இது 'பெண்கள்' எனும் பெயர் பெற்றது.


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த368 உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து504 ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.368 எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

2. அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்து விடுங்கள்! (அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள்! அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்துச் சாப்பிடாதீர்கள்! இது மிகப் பெரிய குற்றமாக உள்ளது.

3. அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்!106(மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.

4. பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை108 கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

5. அல்லாஹ் உங்களை நிர்வாகிகளாக்கியுள்ள சொத்துக்களை (அதன் உரிமையாளரான) விபரம் அறியாதோரிடம் கொடுக்காதீர்கள்! அதில் அவர்களுக்கு உணவு அளியுங்கள்! உடையும் வழங்குங்கள்! அவர்களிடம் அழகான சொல்லைக் கூறுங்கள்!

6. அனாதைகளைச் சோதித்துப் பாருங்கள்! அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் தகுதியையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் கொடுத்து விடுங்கள்! வீண் விரயமாகவும், அவர்கள் பெரியவர்களாகி விடுவர் எனப் பயந்தும் அவசரமாக அதைச் சாப்பிட்டு விடாதீர்கள்! செல்வந்தராக இருப்பவர் (அநாதைச் சொத்தைத் தொடாமல்) தன்மானம் காக்கட்டும். ஏழையாக இருப்பவர் (பராமரிப்பதற்குரிய பிரதிபலன் என்ற அடிப்படையில்) நியாயமாகச் சாப்பிடலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் வழங்கும்போது அவர்கள் விஷயத்தில் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.

7. குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை.

8. பங்கிடும்போது உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்து விட்டால் அதில் அவர்களுக்கும் வழங்குங்கள்! அவர்களுக்கு நல்ல சொல்லையே கூறுங்கள்!

9. தமக்குப் பின் பலவீனர்களான சந்ததிகளை விட்டுச் செல்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் எவ்வாறு அவர்கள் விஷயத்தில் அஞ்சுவார்களோ அவ்வாறு (அனாதைகளின் விஷயத்தில்) அஞ்சிக் கொள்ளட்டும். அல்லாஹ்வை அஞ்சட்டும்! நேர்மையான சொல்லையே அவர்கள் கூறட்டும்.

10. அனாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்போர் தமது வயிறுகளில் நெருப்பையே உண்(டு நிரப்பு)கின்றனர். நரகில் அவர்கள் எரிவார்கள்.

11. "இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.109 அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. அவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோரிலும் பிள்ளைகளிலும் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

12. உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து110 அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனத்துக்கும், கடனுக்கும் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்).111 இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

13. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

14. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

15. உங்கள் பெண்கள் வெட்கக்கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள்!112 அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை113 வீடுகளில் அவர்களைத் தடுத்து வையுங்கள்!

16. உங்களில் வெட்கக்கேடானதைச் செய்த அவ்விருவரையும் துன்புறுத்துங்கள்!113 அவர்கள் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி விட்டால் அவர்களை விட்டு விடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

17. அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

18. தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் "நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏகஇறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை.384 அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

19. நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.403 அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

20. ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து,66 இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?

21. உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?

22. உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர.114 இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்.

23. உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்). இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர.114 அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

24. உங்கள் அடிமைப் பெண்களைத்107 தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை108 கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

25. நம்பிக்கை கொண்ட, கணவனில்லாத பெண்களை மணக்க உங்களில் (பொருள்) வசதி இல்லாதவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!) உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் நன்கறிபவன். நீங்களும், அவர்களும் ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பவர்களே. அவர்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதியுடன் மணந்து கொள்ளுங்கள்! கள்ளக் கணவர்களை ஏற்படுத்தாதவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கற்பொழுக்கமுடையோராகவும் உள்ள அடிமைப் பெண்களுக்கு மணக் கொடைகளை108நியாயமான முறையில் வழங்கி விடுங்கள்! அவர்கள் மணமுடிக்கப்பட்ட பின் வெட்கக்கேடானதைச் செய்தால் கணவனில்லாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி அவர்களுக்கு உண்டு.115 இது உங்களில் விபச்சாரத்தை அஞ்சுவோருக்குரியது! நீங்கள் பொறுமையை மேற்கொள்வது உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

26. உங்களுக்குத் தெளிவுபடுத்திடவும், உங்களுக்கு முன் சென்றோரின் வழிமுறைகளை உங்களுக்குக் காட்டிடவும், உங்களை மன்னிக்கவும் அல்லாஹ் விரும்புகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

27. அல்லாஹ் உங்களை மன்னிக்க விரும்புகிறான். மனோ இச்சைகளைப் பின்பற்றுபவர்களோ முழுமையாக நீங்கள் பாதை மாற வேண்டும் என்று விரும்புகின்றனர்.

28. அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.68

29. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! உங்களுக்கிடையே திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர. உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

30. வரம்பு மீறியும், அநீதி இழைத்தும் இதைச் செய்பவரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே உள்ளது.

31. உங்களுக்குத் தடை செய்யப்பட்ட பெரும் பாவங்களை விட்டு நீங்கள் விலகிக் கொண்டால் உங்கள் தவறுகளை அழித்து விடுவோம். உங்களை மதிப்புமிக்க இடத்தில் நுழையச் செய்வோம்.

32. சிலரை விட சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

33. பெற்றோர்களும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை ஏற்படுத்தியுள்ளோம். நீங்கள் (திருமண) உடன்படிக்கை எடுத்தோருக்கும் அவர்களது பங்கைக் கொடுத்து விடுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

34. சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்!66 அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

35. அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

36. அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும்,206 உங்கள் அடிமைகளுக்கும்107 நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

37. (தாமும்) கஞ்சத்தனம் செய்து, மக்களையும் கஞ்சத்தனம் செய்யத் தூண்டி, தமக்கு அல்லாஹ் அளித்துள்ள அருளை மறைக்கும் மறுப்பாளர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

38. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.

39. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி தமக்கு அல்லாஹ் வழங்கியதை (நல்வழியில்) செலவிட்டால் அவர்களுக்கு என்ன (கேடு) ஏற்பட்டு விடும்? அல்லாஹ் அவர்களை அறிந்தவனாக இருக்கிறான்.

40. அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.

41. (முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும்போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?

42. (ஏகஇறைவனை) மறுத்து, இத்தூதருக்கு மாறுசெய்தோர் "தம்மைப் பூமி விழுங்கி விடாதா?'' என்று அந்நாளில்1 விரும்புவார்கள். அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.

43. நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும்போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!116 குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர.494 நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால்363 தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாதபோது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்!117 அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

44. வேதம் எனும் நற்பேறு அளிக்கப்பட்டோரை27 நீர் அறியவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்குகின்றனர். நீங்கள் வழிதவற வேண்டும் என்று விரும்புகின்றனர்.

45. உங்கள் பகைவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்; அல்லாஹ் உதவி செய்யப் போதுமானவன்.

46. யூதர்களில் சிலர், வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர். "செவியுற்றோம்; மாறுசெய்தோம்; (நாங்கள் கூறுவது) உமக்குச் சரியாகக் கேட்காமல் போகட்டும்'' எனவும் 'ராஇனா' எனவும் கூறுகின்றனர். இம்மார்க்கத்தைக் குறைவுபடுத்திட தமது நாவுகளால் (வார்த்தைகளை) மாற்றிக் கூறுகின்றனர். "செவியுற்றோம். கட்டுப்பட்டோம். செவிமடுப்பீராக! உன்ளுர்னா (எங்களைக் கவனிப்பீராக)'' என்று அவர்கள் கூறியிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும்.29 எனினும் (தன்னை) அவர்கள் மறுப்பதால் அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான்.6 அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

47. வேதம் வழங்கப்பட்டோரே!27 முகங்களைச் சிதைத்து அதைப் பிடரிகளைப் போல் நாம் மாற்றுவதற்கு முன்னால், அல்லது சனிக்கிழமைக்காரர்களை நாம் சபித்தது6 போல் சபிப்பதற்கு முன்னால்23 நாம் அருளியதை நம்புங்கள்! அது உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்துகிறது. அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்படுவதாக உள்ளது.

48. தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.490 அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

49. தம்மைத் தாமே பரிசுத்தவான்கள் எனக் கருதிக் கொள்வோரை நீர் அறியவில்லையா? மாறாக, தான் நாடியோரை அல்லாஹ்வே பரிசுத்தமாக்குகிறான். (அவர்கள்) அணுவளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

50. "அவர்கள் அல்லாஹ்வின் மீது எப்படி இட்டுக்கட்டுகிறார்கள்!" என்பதைக் கவனிப்பீராக! பகிரங்கமான பாவத்தில் (அவர்களை நரகில் தள்ள) இதுவே போதுமானது.

51. வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை27 நீர் அறியவில்லையா? அவர்கள் சிலைகளையும், தீய சக்திகளையும் நம்புகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்போரைப் பற்றி "இவர்கள் நம்பிக்கை கொண்டோரை விட நேர்வழியில் உள்ளவர்கள்'' எனக் கூறுகின்றனர்.

52. அவர்களைத்தான் அல்லாஹ் சபித்து விட்டான். அல்லாஹ் சபித்தவனுக்குஉதவுபவனை நீர் காணவே முடியாது.

53. அவர்களுக்கு அதிகாரத்தில் ஏதேனும் பங்கு உள்ளதா? அப்படி இருந்திருந்தால் அற்பமான பொருளைக் கூட மக்களுக்குக் கொடுக்க மாட்டார்கள்.

54. அல்லாஹ் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? இப்ராஹீமின் குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும்67கொடுத்தோம். அவர்களுக்கு மகத்தான ஆட்சியையும் வழங்கினோம்.

55. இவரை (முஹம்மதை) நம்பியோரும் அவர்களில் உள்ளனர். இவரை விட்டுத் தடுப்போரும் அவர்களில் உள்ளனர். பற்றி எரியும் நரகமே (அவர்களுக்கு) போதுமானது.

56. நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக119 வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

57. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும்8 உள்ளனர். மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.

58. அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும்போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும்,488 பார்ப்பவனாகவும்488 இருக்கிறான்.

59. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்!120 இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

60. (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும்4 நம்புவதாகக் கூறிக் கொள்வோரை நீர் அறியவில்லையா? அவர்கள் தீய சக்திகளிடம் தீர்ப்புக் கோர விரும்புகின்றனர். அதை மறுக்குமாறு அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தனர். (உண்மைக்கு) மிகவும் தூரமாக உள்ள வழிகேட்டில் அவர்களைத் தள்ள ஷைத்தான் விரும்புகிறான்.

61. "அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர்.

62. அவர்கள் செய்த வினை காரணமாக அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் என்னவாகும்? பின்னர் அவர்கள் உம்மிடம் வந்து "நன்மையையும், ஒற்றுமையையுமே நாடுகிறோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகின்றனர்.

63. அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிவான். எனவே அவர்களை அலட்சியம் செய்வீராக! அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக! அவர்களுக்காக கருத்தாழமிக்க சொல்லை அவர்களின் உள்ளங்களில் (பதியுமாறு) கூறுவீராக!

64. அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்புவதில்லை. (முஹம்மதே) அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்த நேரத்தில் உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் தேடி, அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால்121 மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அல்லாஹ்வை அவர்கள் காண்பார்கள்.

65. (முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.234

66. "உங்களையே கொன்று விடுங்கள்! அல்லது உங்கள் ஊர்களிலிருந்து வெளியேறுங்கள்!'' என்று அவர்களுக்கு நாம் கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) அதை நிறைவேற்றியிருக்க மாட்டார்கள். தமக்கு அறிவுரை கூறப்பட்டவாறு அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், அதிக உறுதியைக் காட்டுவதாகவும் இருந்திருக்கும்.

67. அப்போது நாம் மகத்தான கூலியையும் அவர்களுக்கு வழங்கியிருப்போம்.

68. அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.

69. அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும், நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

70. இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள். அறிந்து கொள்ள அல்லாஹ் போதுமானவன்.

71. நம்பிக்கை கொண்டோரே! எச்சரிக்கையுடன் இருங்கள்! தனித்தனிக் குழுக்களாகப் புறப்படுங்கள்! அல்லது அனைவரும் சேர்ந்து புறப்படுங்கள்!

72. (போருக்குச் செல்லாது) தங்கி விடுபவனும் உங்களில் இருக்கிறான். உங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் "நான் அவர்களுடன் பங்கெடுக்காததால் அல்லாஹ் எனக்கு அருள் புரிந்து விட்டான்'' என்று அவன் கூறுகிறான்.

73. அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஏதேனும் அருள் கிடைத்தால் "நானும் அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா? மகத்தான வெற்றி பெற்றிருப்பேனே'' என்று உங்களுடன் தனக்கு (இதற்கு முன்) நட்பே இல்லாதது போல் அவன் கூறுவான்.

74. இவ்வுலக வாழ்வை விற்று மறுமையை வாங்குவோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்! யாரேனும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டாலோ, வெற்றி பெற்றாலோ அவர்களுக்கு மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவோம்.53

75. "எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும், சிறுவர்களுக்காகவும்359 அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?53

76. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்போர் தீய சக்திகளின் பாதையில் போரிடுகின்றனர். எனவே ஷைத்தானின் கூட்டாளிகளுக்கு எதிராகப் போரிடுங்கள்! ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.

77. "உங்கள் கைகளை (போர் செய்யாமல்) தடுத்துக் கொள்ளுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஜகாத் கொடுங்கள்!'' என்று கூறப்பட்டோரை நீர் அறியவில்லையா? அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டபோது அவர்களில் ஒரு சாரார் அல்லாஹ்வுக்கு அஞ்சுவது போல் அல்லது அதை விடக் கடுமையாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றனர். "எங்கள் இறைவா! எங்களுக்கு ஏன் போர் செய்வதைக் கடமையாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்கு அவகாசம் தந்திருக்கக் கூடாதா'' எனவும் கூறுகின்றனர். "இவ்வுலகின் வசதி குறைவு தான். (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமையே சிறந்தது. அணுவளவும் நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்'' எனக் கூறுவீராக!

78. "நீங்கள் எங்கே இருந்தபோதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே. அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' என்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் "இது உம்மால் தான் ஏற்பட்டது'' என்று கூறுகின்றனர். "அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! இந்தச் சமுதாயத்திற்கு என்ன நேர்ந்தது? எந்தச் செய்தியையும் புரிந்து கொள்ள அவர்கள் முயற்சிப்பதில்லையே!

79. (முஹம்மதே!) உமக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்விடமிருந்து ஏற்பட்டது. உமக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அது உம்மால் ஏற்பட்டது. உம்மை மனித குலத்துக்குத் தூதராக அனுப்பியுள்ளோம்.187 அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.

80. இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.

81. "கட்டுப்படுகிறோம்'' என அவர்கள் கூறுகின்றனர். (முஹம்மதே!) உம்மிடமிருந்து அவர்கள் வெளியேறிய உடன் அவர்களில் ஒரு பகுதியினர், தாம் கூறியதற்கு மாறாக இரவில் சதி செய்கின்றனர். அவர்கள் இரவில் செய்கின்ற சதியை அல்லாஹ் பதிவு செய்கிறான். எனவே அவர்களைப் புறக்கணிப்பீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

82. அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.123

83. பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதைப் பரப்புகின்றனர்.124 அதை இத்தூதரிடமும், (முஹம்மதிடமும்) தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் அருளும், அவனது அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஷைத்தானைப் பின்பற்றியிருப்பீர்கள்.

84. (முஹம்மதே!) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவீராக!53 உம்மைத் தவிர (யாருக்கும்) நீர் பொறுப்பாக்கப்பட மாட்டீர். நம்பிக்கை கொண்டோருக்கு ஆர்வமூட்டுவீராக! (தன்னை) மறுப்போரின் தாக்குதலை அல்லாஹ் தடுப்பான். தாக்குவதில் அல்லாஹ் வல்லவன்; தண்டிப்பதிலும் அவன் கடுமையானவன்.

85. அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

86. உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

87. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எந்தச் சந்தேகமுமில்லாத கியாமத் நாளில்1 உங்களை அவன் ஒன்று திரட்டுவான். அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?

88. நயவஞ்சகர்கள் பற்றி (முடிவு செய்வதில்) இரண்டு கூட்டத்தினராக ஏன் ஆகி விட்டீர்கள்? அவர்கள் செய்தவற்றின் காரணமாக அல்லாஹ் அவர்களை வீழ்த்தி விட்டான். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்ட நாடுகிறீர்களா? அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு எந்த வழியையும் நீர் காணமாட்டீர்!

89. "அவர்கள் (ஏகஇறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும், நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக89 ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்!53 அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!

90. உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

91. வேறு சிலரையும் காண்பீர்கள். அவர்கள் உங்களிடமும் அபயம் பெற்று, தமது சமுதாயத்தினரிடமும் அபயம் பெறுவதை விரும்புகின்றனர். கலகம் செய்ய அவர்கள் அழைக்கப்படும் போதெல்லாம் அதில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் உங்களை விட்டு விலகிக் கொள்ளாமலும், உங்களிடம் சமாதானத்துக்கு வராமலும், தமது கைகளைக் கட்டுக்குள் வைக்காமலும் இருந்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்டவுடன் கொல்லுங்கள்! அவர்களுக்கு எதிராக (போரிட) தெளிவான சான்றை ஏற்படுத்தியுள்ளோம்.53

92. நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு இழப்பீடு ஒப்படைக்கப்பட வேண்டும். அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவர், உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கி,209 நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) அல்லாஹ்வின் மன்னிப்பாகும். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

93. நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான்.6அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

94. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஸலாம்159 கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக "நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

95, 96. நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் போரிடுவோருக்கு, போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.26

97. தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்165போது, "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?'' என்று கேட்பார்கள். "நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்'' என்று இவர்கள் கூறுவார்கள். "அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத்460 செய்திருக்கக் கூடாதா?'' என்று (வானவர்கள்) கேட்பார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.

98. ஆண்களில் பலவீனமானவர்களையும், பெண்களையும், சிறுவர்களையும் தவிர. எந்தத் தந்திரம் செய்வதற்கும் அவர்களுக்கு இயலாது. எந்த வழியையும் அறிய மாட்டார்கள்.

99. அல்லாஹ் அவர்களது பிழைகளைப் பொறுப்பான். அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

100. அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்பவர் பூமியில் அதிகமான புகலிடங்களையும், வசதிகளையும் பெற்றுக் கொள்வார். அல்லாஹ்வை நோக்கியும், அவனது தூதரை நோக்கியும் ஹிஜ்ரத்460 செய்து தன் வீட்டை விட்டு புறப்பட்டுச் செல்பவருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்குரிய கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

101. நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும்போது (ஏகஇறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது125 உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏகஇறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.

102. (முஹம்மதே!) நீர் அவர்களுடன் (போர்க்களத்தில்) இருந்து அவர்களுக்கு நீர் தொழுகையை நடத்தினால்126 அவர்களில் ஒரு பகுதியினர் உம்மோடு (தொழுகையில்) நிற்கட்டும். தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். ஸஜ்தாச் செய்ததும் அவர்கள் உங்களுக்குப் பின்னால் செல்லட்டும். தொழாத மற்ற கூட்டம் வந்து உம்முடன் தொழட்டும். எச்சரிக்கையுடன் தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். உங்கள் ஆயுதங்களையும், தளவாடங்களையும் விட்டு நீங்கள் கவனமற்று இருப்பதையும், அப்போது திடீரென உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும் (ஏகஇறைவனை) மறுப்போர் விரும்புகின்றனர். மழையின் காரணமாகவோ, நீங்கள் நோயாளிகளாக இருப்பதாலோ உங்களுக்குத் தொல்லையாக இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைப்பது குற்றமில்லை. (அதே சமயத்தில்) எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள்! (தன்னை) மறுப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனையை அல்லாஹ் தயாரித்துள்ளான்.

103. நீங்கள் தொழுகையை முடித்ததும் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினையுங்கள்! நீங்கள் அச்சமற்ற நிலையை அடைந்தால் தொழுகையை (முழுமையாக) நிலைநாட்டுங்கள்!127 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.479

104. அக்கூட்டத்தை விரட்டிச் செல்வதில் தளர்வடையாதீர்கள்! நீங்கள் துன்புற்றால் (கவலைப்படாதீர்கள். ஏனெனில்) நீங்கள் துன்புற்றது போல் அவர்களும் துன்புறுகின்றனர். அவர்கள் எதிர்பார்க்காத (சொர்க்கத்)தை நீங்கள் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

105. (முஹம்மதே!) அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம்.128மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகிவிடாதீர்!

106. அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக!493 அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

107. தமக்குத் தாமே துரோகம் செய்வோருக்காக நீர் வாதிடாதீர்! துரோகம் செய்யும் பாவியை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

108. அவர்கள் மக்களிடம் மறைத்திடலாம். அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. இறைவனுக்குப் பிடிக்காத பேச்சுக்களை இரவில் பேசி அவர்கள் சதி செய்தபோது அவன் அவர்களுடன் இருந்தான்.49 அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவனாக இருக்கிறான்.

109. நீங்கள் இவ்வுலக வாழ்க்கையில் அவர்களுக்காக வாதிடுகிறீர்கள். கியாமத் நாளில்1அவர்களுக்காக அல்லாஹ்விடம் வாதிடுபவன் யார்? அல்லது அவர்களுக்காகப் பொறுப்பேற்பவன் யார்?

110. யாரேனும் தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார்.

111. பாவம் செய்பவர் தமக்கு எதிராகவே அதைச் செய்கிறார்.265 அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

112. தவறையோ, பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான்.

113. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளும், அன்பும் உம் மீது இல்லாதிருந்தால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மை வழிகெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழிகெடுத்துக் கொள்கின்றனர். அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உமக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது.

114. தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவோம்.

115. நேர்வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) மாறுசெய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது.

116. தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.490 இதற்குக் கீழ்நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.

117. அவர்கள் அவனை விட்டு விட்டு பெண்(தெய்வங்)களையே அழைக்கின்றனர். (உண்மையில்) மூர்க்கத்தனம் கொண்ட ஷைத்தானைத் தவிர (யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை.

118, 119. அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான்.6 "உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்; அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' என்று அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நட்டமடைந்து விட்டான்.26

120. அவர்களுக்கு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான்.

121. அவர்கள் தங்குமிடம் நரகம். அதிலிருந்து தப்பிக்கும் வழியை அவர்கள் காணமாட்டார்கள்.

122. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?

123. உங்கள் ஆசைப்படியோ, வேதமுடையோரின்27 ஆசைப்படியோ (மறுமையில் தீர்ப்பு) இருக்காது. தீய காரியம் செய்தவன் அதற்காகத் தண்டிக்கப்படுவான். அல்லாஹ்வையன்றி தனக்கு உதவுபவனையோ, பொறுப்பாளனையோ அவன் காணமாட்டான்.

124. ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

125. தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.

126. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் முழுமையாக அறிபவனாக இருக்கிறான்.

127. பெண்கள் பற்றி அவர்கள் (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். "அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான்'' எனக் கூறுவீராக! அநாதைப் பெண்களுக்கு கடமையாக்கப்பட்டதைக்108 கொடுக்காமல் அவர்களை மணந்து கொள்ள நீங்கள் விரும்பியது பற்றியும், பலவீனமானவர்களான சிறுவர்கள் பற்றியும், அனாதைகளை நீங்கள் நியாயமாக நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் இவ்வேதத்தில் (ஏற்கனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது.129 நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிபவனாக இருக்கிறான்.

128. தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

129. மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, இன்னொருத்தியை அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

130. அவ்விருவரும் பிரிந்து விட்டால் அவர்களில் ஒவ்வொருவரையும் அல்லாஹ் தனது அருளால் தன்னிறைவு பெறச் செய்வான். அல்லாஹ் ஞானமிக்கவனாகவும், தாராளமானவனாகவும் இருக்கிறான்.

131. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரையும்,27 உங்களையும் வலியுறுத்தியுள்ளோம். நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்தால் வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவைகளற்றவனாகவும்,485 புகழப்பட்டவனாகவும் இருக்கிறான்.

132. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. பொறுப்பேற்க அல்லாஹ் போதுமானவன்.

133. மனிதர்களே! அவன் நாடினால் உங்களை அழித்து விட்டு வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அல்லாஹ் இதற்கு ஆற்றலுடையவனாக இருக்கிறான்.

134. யாரேனும் இவ்வுலகின் பயனை விரும்பினால் இவ்வுலகின் பயனும், மறுமையின் பயனும் அல்லாஹ்விடமே உள்ளன. அல்லாஹ் செவியுறுபவனாகவும்,488 பார்ப்பவனாகவும்488இருக்கிறான்.

135. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

136. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும், தனது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும்4 நம்புங்கள்! அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், இறுதி நாளையும்1 ஏற்க மறுப்பவர் தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.

137. நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏகஇறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை.490 அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை.

138. "நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக!

139. நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏகஇறைவனை) மறுப்போரை அவர்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர்.89 கண்ணியத்தை அவர்களிடம் தேடுகிறார்களா? கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.

140. அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான்.131 நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

141. அவர்கள் உங்களைக் கவனித்துக் கொண்டே உள்ளனர். உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து ஒரு வெற்றி கிடைத்தால் "உங்களுடன் நாங்கள் இருக்கவில்லையா?'' என்று கூறுகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்போருக்கு ஏதேனும் வெற்றி கிடைத்தால், "நாங்கள் உங்களுக்கு உதவி செய்து, நம்பிக்கை கொண்டோர் உங்களை (வெற்றி கொள்வதை) விட்டும் தடுக்கவில்லையா?'' என்று (அவர்களிடம்) கூறுகின்றனர். கியாமத் நாளில்1 அல்லாஹ் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான். நம்பிக்கை கொண்டோருக்கு எதிரான வழியை (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.

142. நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்6. அவர்கள் தொழுகையில் நிற்கும்போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.

143. அவர்களுடனும் இல்லாமல், இவர்களுடனும் இல்லாமல் இதற்கிடையே தடுமாறிக் கொண்டுள்ளனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு எந்த வழியையும் நீர் காணமாட்டீர்!

144. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏகஇறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?

145. நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர்.

146. மன்னிப்புக் கேட்டுத் திருந்தி, அல்லாஹ்வைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உளத்தூய்மையுடன் உரித்தாக்கியோரைத் தவிர. அவர்கள் நம்பிக்கை கொண்டோருடன் இருப்பார்கள். நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவான்.

147. நீங்கள் நம்பிக்கை கொண்டு நன்றி செலுத்தினால் உங்களை அல்லாஹ் ஏன் தண்டிக்கப்போகிறான்? அல்லாஹ் நன்றி செலுத்துபவனாகவும்,6 அறிந்தவனாகவும் இருக்கிறான்.

148. அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும்,488 அறிந்தவனாகவும் இருக்கிறான்.

149. நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அதை மறைத்துக் கொண்டாலும், (பிறர் செய்யும்) தீமையை மன்னித்தாலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான்.

150, 151. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, "சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்'' எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி132 இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்களே உண்மையாக (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.26

152. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பி அவர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டாதோருக்கு அவர்களது கூலிகளை அவன் பின்னர் வழங்குவான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

153. (முஹம்மதே!) "வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும்''152 என்று வேதமுடையோர்27 உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மூஸாவிடம் கேட்டுள்ளனர். "அல்லாஹ்வைக் கண்முன்னே எங்களுக்குக் காட்டு'' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடிமுழக்கம் அவர்களைத் தாக்கியது.21 பின்னர் தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பு, காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தார்கள்.19அதை மன்னித்தோம். மூஸாவுக்குத் தெளிவான சான்றை அளித்தோம்.

154. அவர்களிடம் உடன்படிக்கை எடுப்பதற்காக தூர் மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தினோம்.22 "பணிந்து, வாசல் வழியாக நுழையுங்கள்!'' என்று அவர்களிடம் கூறினோம். "சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்!''23 என்றும் அவர்களிடம் கூறினோம். அவர்களிடம் உறுதியான உடன்படிக்கை எடுத்தோம்.

155. அவர்கள் தமது உடன்படிக்கையை முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும், எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன என்று கூறியதாலும், (இதற்கும்) மேலாக அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும் அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.

156, 157. அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ்92 எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது.456 இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.26

158. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.133

159. வேதமுடையோரில்27 ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.134 கியாமத் நாளில்1 அவர்களுக்கு சாட்சியாக அவர் இருப்பார்.

160, 161. யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.26

162. எனினும் அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும்நம்புகின்றனர். தொழுகையை நிலைநாட்டி, ஜகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும்1 நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்.

163. நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச்செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச்செய்தி அறிவித்தோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப், (அவரது) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம். தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம்.

164. (முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.488

165. தூதர்களை அனுப்பிய பின்னர் அல்லாஹ்வைக் குறை கூற மனிதர்களுக்கு எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதற்காக நற்செய்தி கூறி, எச்சரிக்கும் தூதர்களை (அவன் அனுப்பினான்.) அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

166. எனினும் (முஹம்மதே!) அல்லாஹ் உமக்கு அருளியதற்கு அவனே சாட்சியாக இருக்கிறான். தனது விளக்கத்துடன் அதை அவன் அருளினான். வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.

167. (ஏகஇறைவனை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்போர், (உண்மைக்கு வெகு) தூரமான வழிகேட்டில் வீழ்ந்து விட்டனர்.

168, 169. (தன்னை) மறுத்து அநீதி இழைத்தோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை.490நரகத்தின் பாதைக்கே தவிர (வேறு) வழிகாட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.26

170. மனிதர்களே! இத்தூதர் (முஹம்மத்) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மையைக் கொண்டு வந்துள்ளார். எனவே நம்பிக்கை கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்தால் வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

171. வேதமுடையோரே!27 உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ்92அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார்.90 எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்!459 விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன்.10 வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

172. மஸீஹும்,92 நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள்.459 அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.

173. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு (இறைவன்) முழுமையாக வழங்குவான். தனது அருளை அதிகமாக அளிப்பான். (அடிமைத் தனத்திலிருந்து) விலகிப் பெருமையடிப்போரைத் துன்புறுத்தும் வகையில் தண்டிப்பான். அல்லாஹ்வையன்றி தங்களுக்கு உதவுபவனையோ, பொறுப்பாளனையோ அவர்கள் காணமாட்டார்கள்.

174. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குத் தக்க சான்று வந்துள்ளது. உங்களிடம் தெளிவான ஒளியையும் அருளியுள்ளோம்.

175. அல்லாஹ்வை நம்பி அவனைப் பற்றிப் பிடித்துக் கொண்டோரைத் தனது அன்பிலும், அருளிலும் அவன் நுழையச் செய்வான். அவர்களுக்கு தன்னை நோக்கி நேரான வழியையும் காட்டுவான்.

176. "கலாலா பற்றி (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர்.110 "அல்லாஹ் இது குறித்து தீர்ப்பளிக்கிறான்'' எனக் கூறுவீராக! பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும்போது அவனுக்கு ஒரு சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. (அவள் இறக்கும்போது) அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு.109 நீங்கள் வழிதவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன்.

 

Leave a Reply