அத்தியாயம் : 40 அல் முஃமின்

அத்தியாயம் : 40

அல் முஃமின் – நம்பிக்கை கொண்டவர்

மொத்த வசனங்கள் : 85

ந்த அத்தியாயத்தின் 28வது வசனத்தில் முஃமின் என்ற சொல் இடம் பெறுவதால் இந்தப் பெயர் வந்தது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. ஹா, மீம்.2

2. இது மிகைத்தவனும், அறிந்தவனுமாகிய அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதம்.

3.(அவன்) பாவத்தை மன்னிப்பவன்; மன்னிப்புக் கோருவதை ஏற்பவன்; கடுமையாகத் தண்டிப்பவன்; அருளுடையவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. மீளுதல் அவனிடமே உள்ளது.

4. (ஏகஇறைவனை) மறுப்போர் தவிர (மற்றவர்கள்) அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்ய மாட்டார்கள். அவர்கள் நகரங்களில் (சொகுசாக) திரிவது உம்மை ஏமாற்றிட வேண்டாம்.

5. இவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயத்தினரும், அவர்களுக்குப் பின் பல சமுதாயத்தினரும் பொய்யெனக் கருதினர். ஒவ்வொரு சமுதாயமும் தமது தூதர்களைத் தாக்க நினைத்தனர். பொய்யின் மூலம் உண்மையை அழிக்க தர்க்கம் செய்தனர். எனவே அவர்களைப் பிடித்தேன். எனது வேதனை எவ்வாறு அமைந்தது?

6. (ஏகஇறைவனை) மறுப்போர் நரகவாசிகளே என்ற உமது இறைவனின் கட்டளை உறுதியாகி விட்டது.

7. அர்ஷைச்488 சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர். "எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாயாக!'' என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.

8. "எங்கள் இறைவா! அவர்களையும், அவர்களது பெற்றோர்களையும், வாழ்க்கைத் துணைகளையும், அவர்களது சந்ததிகளில் நல்லோரையும் நீ வாக்களித்த நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வாயாக! நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்.''

9. "அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! இன்று தீமைகளிலிருந்து நீ யாரைக் காப்பாற்றினாயோ நீ அவருக்கு அருள் புரிந்து விட்டாய். இதுவே மகத்தான வெற்றி'' (என்றும் பிரார்த்திக்கிறார்கள்.)

10. "நீங்கள் நம்பிக்கை கொள்ள அழைக்கப்பட்டபோது மறுத்த நேரத்தில் உங்கள் மனதுக்குள் இருந்த வெறுப்பை விட (உங்களை) அல்லாஹ் வெறுப்பது மிகப் பெரியது'' என்று (ஏகஇறைவனை) மறுத்தோருக்குக் கூறப்படும்.

11."எங்கள் இறைவா! எங்களை இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய். இரண்டு தடவை உயிர்ப்பித்தாய்.347 எங்கள் குற்றங்களை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். தப்பிக்க வழி ஏதும் உள்ளதா?'' என்று அவர்கள் கேட்பார்கள்.

12."அல்லாஹ் மட்டும் பிரார்த்திக்கப்பட்டால் மறுத்தீர்கள்; அவனுக்கு இணை கற்பிக்கப்பட்டால் அதை நம்பினீர்கள்'' என்பதே இதற்குக் காரணம். உயர்ந்தவனும், பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே அதிகாரம் உரியது.234

13. அவனே தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான். வானத்திலிருந்து507 உணவை உங்களுக்கு இறக்கி வைக்கிறான். திருந்துபவர் தவிர மற்றவர் படிப்பினை பெறுவதில்லை.

14. (ஏகஇறைவனை) மறுப்போர் வெறுத்தபோதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்!

15. அவன் பதவிகளை உயர்த்துபவன். அர்ஷின்488 உரிமையாளன். சந்திக்கும் நாள்1 பற்றி எச்சரிப்பதற்காக தனது அடியார்களில் தான் நாடியவர் மீது தனது உயிரோட்டமான கட்டளைகளை வழங்குகிறான்.

16. அவர்கள் வெளிப்பட்டு வரும் நாளில் அவர்களைப் பற்றிய எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது. இன்று ஆட்சி யாருக்கு? அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே.

17.இன்று ஒவ்வொருவரும் செய்ததற்கு கூலி கொடுக்கப்படும்.265 இன்று எந்த அநியாயமும் இல்லை. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.

18. சீக்கிரம் வரவிருக்கும் நாளைப்1 பற்றி அவர்களுக்கு எச்சரிப்பீராக! அப்போது இதயங்கள் தொண்டைக் குழிகளுக்கு வந்து அதை மென்று விழுங்குவோராக அவர்கள் இருப்பார்கள். அநீதி இழைத்தோருக்கு எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை.17

19. கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

20. அல்லாஹ்வே நியாயத் தீர்ப்பு அளிப்பவன். அவனையன்றி அவர்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எது பற்றியும் தீர்ப்பளிக்க மாட்டார்கள். அல்லாஹ் செவியுறுபவன்;488 பார்ப்பவன். 488

21. பூமியில் அவர்கள் பயணித்து தமக்கு முன் இருந்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டாமா? வலிமையிலும், பூமியில் விட்டுச் சென்ற தடயங்களிலும் இவர்களை விட அவர்கள் மிகைத்திருந்தனர். அவர்களது பாவங்கள் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். அவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பவர் யாரும் இருக்கவில்லை.

22. அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அவன் வலிமையுள்ளவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.

23, 24. மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். "பெரும் பொய்யரான சூனியக்காரர்''285 என்று அவர்கள் கூறினர்.26

25.நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மையை அவர் கொண்டு வந்தபோது "இவரை நம்பியோரின் ஆண் மக்களைக் கொன்று விடுங்கள்! அவர்களின் பெண்களை உயிருடன் விட்டு விடுங்கள்!'' எனக் கூறினர். (நம்மை) மறுப்போரின் சூழ்ச்சி தவறிலேயே முடியும்

26. "மூஸாவைக் கொல்வதற்கு என்னை விட்டு விடுங்கள்! அவர் தனது இறைவனை அழைக்கட்டும். உங்கள் மார்க்கத்தை அவர் மாற்றி விடுவார் என்றும், பூமியில் குழப்பத்தைத் தோற்றுவிப்பார் என்றும் அஞ்சுகிறேன்'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

27. "விசாரிக்கப்படும் நாளை1 நம்பாத ஒவ்வொரு அகந்தை கொண்டவனை விட்டும் உங்கள் இறைவனிடமும், எனது இறைவனிடமும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று மூஸா கூறினார்.

28. "என் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறும் ஒரு மனிதரை கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்'' என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரில் தனது நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார்.

29."என் சமுதாயமே! இன்று ஆட்சி உங்களிடமே இருக்கிறது. பூமியில் மிகைத்து இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வேதனை நமக்கு வந்து விடுமானால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவன் யார்?'' (எனவும் அவர் கூறினார்) அதற்கு ஃபிர்அவ்ன் "நான் (சரி) காண்பதையே உங்களுக்குக் காட்டுகிறேன். நேரான வழியைத் தவிர (வேறு எதையும்) நான் உங்களுக்குக் காட்டவில்லை'' என்று கூறினான்.

30, 31. "என் சமுதாயமே! மற்ற சமுதாயத்தினரின் கதியைப் போன்றும், நூஹுடைய சமுதாயம், ஆது சமுதாயம், ஸமூது சமுதாயம் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தோருக்கு ஏற்பட்ட கதியைப் போன்றும் உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன். அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுபவன் இல்லை'' என்று நம்பிக்கை கொண்ட (அந்த) மனிதர் கூறினார்.26

32. என் சமுதாயமே! தீர்ப்புக்காக அழைக்கும் நாளை1 உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்.

33. அந்நாளில் புறங்காட்டி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பவன் இருக்க மாட்டான். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை.

34. முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் "இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்''348 எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித்தான் வழிகெடுக்கிறான்.

35. அவர்கள் தங்களுக்கு எந்தச் சான்றும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும், நம்பிக்கை கொண்டோரிடமும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்துவதாகும். இவ்வாறே பெருமையடித்து அடக்கியாளும் ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

36, 37. "ஹாமானே! எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு! வழிகளை, வானங்களின்507 வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும். அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன்'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. (நேர்)வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது.26

38. "என் சமுதாயமே! என்னைப் பின்பற்றுங்கள்! உங்களுக்கு நேர்வழி காட்டுகிறேன்'' என்று நம்பிக்கை கொண்ட அவர் கூறினார்.

39. "என் சமுதாயமே! இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம்.''

40. யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.

41. என் சமுதாயமே! எனக்கென்ன? நான் உங்களை வெற்றிக்கு அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகிற்கு அழைக்கிறீர்கள்.

42. "நான் அல்லாஹ்வை மறுத்து எனக்கு அறிவில்லாத ஒன்றை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வேண்டும்'' என்று என்னை அழைக்கிறீர்கள். நானோ மிகைத்தவனாகிய மன்னிப்பவனிடம் உங்களை அழைக்கிறேன்.

43. என்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும், மறுமையிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.

44.நான் உங்களுக்குக் கூறுவதைப் பின்னர் உணர்வீர்கள்! எனது காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன். 488 (என்றும் அவர் கூறினார்)

45. எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது.

46. காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள்.349 யுகமுடிவு நேரம்1 வரும்போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்)

47.நரகத்தில் அவர்கள் தர்க்கம் செய்து கொள்ளும்போது "உங்களைத் தானே நாங்கள் பின்பற்றிக் கொண்டிருந்தோம். எனவே நரகத்திலிருந்து சிறிதளவை எங்களை விட்டும் தடுப்பவர்களாக இருக்கிறீர்களா?'' என்று பலவீனர்கள் பெருமையடித்தோரை நோக்கிக் கேட்பார்கள்.

48. "நாம் அனைவருமே இதில் தானே இருக்கிறோம். அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பு அளித்து விட்டானே'' என்று பெருமையடித்தோர் கூறுவார்கள்.

49."உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! இவ்வேதனையை ஒரே ஒரு நாள் அவன் இலேசாக்குவான்'' என்று நரகத்தில் கிடப்போர் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள்.

50."உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா?'' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ''ஆம்'' என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏகஇறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்.

51.நமது தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டோருக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் சாட்சிகள் முன்வரும் நாளிலும்1 நாம் உதவுவோம்.

52. அந்நாளில்1 அநீதி இழைத்தோருக்கு அவர்களின் சமாளிப்புகள் பயன் தராது. அவர்களுக்குச் சாபம் உள்ளது. அவர்களுக்குத் தீய தங்குமிடமும் உண்டு.

53. மூஸாவுக்கு நேர்வழியைக் கொடுத்தோம். அவ்வேதத்தை இஸ்ராயீலின் மக்களுக்கு உடமையாக்கினோம்.

54. அது நேர்வழி காட்டுவதும், அறிவுடையோருக்குப் படிப்பினையுமாகும்.

55. (முஹம்மதே!) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை. உமது பாவத்துக்கு மன்னிப்புக் கேட்பீராக! உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் போற்றிப் புகழ்வீராக!

56. தங்களுக்குச் சான்று கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோரின் உள்ளங்களில் பெருமை தவிர வேறில்லை. அதற்கு அவர்கள் தகுதி படைத்தோர் இல்லை. அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; 488 பார்ப்பவன்488.

57. வானங்களையும்,507 பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை368 விடப் பெரியது. எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

58. குருடரும், பார்வையுள்ளவரும் சமமாக மாட்டார்கள். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரும், தீமை செய்தவரும் (சமமாக மாட்டார்கள்). குறைவாகவே நீங்கள் படிப்பினை பெறுகின்றீர்கள்.

59. யுகமுடிவு நேரம்1 வந்தே தீரும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும் மனிதர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

60. "என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்;49 எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.

61. நீங்கள் அமைதி பெறுவதற்காக இரவையும், பார்க்கும் நிலையில் பகலையும் அல்லாஹ்வே ஏற்படுத்தினான். அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன்; எனினும் மனிதர்களில் அதிகமானோர் நன்றி செலுத்துவதில்லை.

62. அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எவ்வாறு நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?

63. அல்லாஹ்வின் வசனங்களை மறுத்தோரும் இப்படித்தான் திசை திருப்பப்பட்டனர்.

64.அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு நிலையானதாகவும், வானத்தை507 முகடாகவும் அமைத்தான்.288 உங்களுக்கு வடிவம் தந்தான். உங்கள் வடிவங்களை அழகுற அமைத்தான். தூய்மையானவற்றை உங்களுக்கு வழங்கினான். அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.

65. அவனே (என்றும்) உயிருடன் இருப்பவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எனவே வணக்கத்தைத் தூய எண்ணத்துடன் அவனுக்கே உரித்தாக்கி அவனையே அழையுங்கள்! அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

66. என் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகள் என்னிடம் வந்தபோது அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறீர்களோ அவர்களை வணங்குவதை விட்டும் நான் தடுக்கப்பட்டு விட்டேன். மேலும் அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்க கட்டளையிடப்பட்டுள்ளேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

67.அவனே உங்களை மண்ணிலிருந்தும்,368 பின்னர் விந்துத் துளியிலிருந்தும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையிலிருந்தும் படைத்தான்.365&506 பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியேற்றுகிறான். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். பின்னர் முதியோராக ஆகின்றீர்கள். குறிப்பிட்ட காலக்கெடுவை நீங்கள் அடைகின்றீர்கள். இதற்கு முன்பே கைப்பற்றப்படுவோரும் உங்களில் உள்ளனர். நீங்கள் விளங்குவதற்காக (இதைக் கூறுகிறான்)

68. அவனே உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். ஒரு காரியத்தை அவன் முடிவெடுத்து விட்டால் 'ஆகு' எனக் கூறுவான். உடனே அது ஆகி விடும்.506

69. அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா?

70. அவர்கள் வேதத்தையும், எதனுடன் நமது தூதர்களை அனுப்பினோமோ அதையும் பொய்யெனக் கருதுகின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள்.352

71, 72. அப்போது அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளும், சங்கிலிகளும் இருக்கும். அவர்கள் கொதிக்கும் நீரில் அழுத்தப்படுவார்கள். பின்னர் நெருப்பில் எரிக்கப்படுவார்கள்.26

73, 74. அல்லாஹ்வையன்றி நீங்கள் இணை கற்பித்தவை எங்கே என்று பின்னர் அவர்களிடம் கேட்கப்படும். "எங்களை விட்டும் மறைந்து விட்டன. இல்லை! இதற்கு முன் எதையும் நாங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கவில்லை'' என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வாறே (தன்னை) மறுப்போரை அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான்.26

75. நீங்கள் பூமியில் நியாயமின்றி பெருமிதம் கொண்டதும், இறுமாப்பு கொண்டதுமே இதற்குக் காரணம்.

76. நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். ஆணவம் கொண்டோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.

77. (முஹம்மதே!) பொறுப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை. எனவே அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு நாம் காட்டினால் அல்லது உம்மை நாம் மரணிக்கச் செய்தால் நம்மிடமே அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்.

78. உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் அனுமதியின்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை.269 எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும்போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நட்டமடைவார்கள்.

79. நீங்கள் ஏறிச் செல்வதற்காக உங்களுக்குக் கால்நடைகளை அல்லாஹ்வே உருவாக்கினான். அவற்றிலிருந்து உண்ணுகிறீர்கள். 171

80. அவற்றில் உங்களுக்கு (வேறு) பயன்களும் உள்ளன. உங்கள் உள்ளங்களில் உள்ள தேவையை அவற்றின் மீது (ஏறிச் சென்று) அடைந்து கொள்கிறீர்கள். அவற்றின் மீதும், கப்பல்கள் மீதும் சுமக்கப்படுகிறீர்கள்.

81.அவன் உங்களுக்குத் தனது அத்தாட்சிகளைக் காட்டுகிறான். அல்லாஹ்வின் எந்தச் சான்றுகளை நிராகரிக்கிறீர்கள்?

82. அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தமக்கு முன் சென்றோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டாமா? இவர்களை விட அவர்கள் அதிக எண்ணிக்கை கொண்டோராகவும், வலிமை மிக்கோராகவும், பூமியில் நினைவுத் தடயங்களை அதிகம் விட்டுச் சென்றோராகவும் இருந்தனர். அவர்கள் செய்தது அவர்களைக் காப்பாற்றவில்லை.

83.அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது தம்மிடம் உள்ள கல்வியின் காரணமாக பெருமிதம் கொண்டனர். அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

84.அவர்கள் நமது வேதனையைப் பார்த்தபோது "அல்லாஹ்வை மட்டும் நம்பினோம். நாங்கள் எதை இணையாகக் கருதினோமோ அதை மறுத்து விட்டோம்'' என்றனர்.

85. நமது வேதனையைப் பார்த்தபோது அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயன் தரவில்லை. சென்று விட்ட தனது அடியார்களிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அப்போது (நம்மை) மறுத்தோர் நட்டமடைந்தார்கள்.

 

Leave a Reply