ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக்காதது ஏன்?

ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக்காதது ஏன்?

கேள்வி: நவீன ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக்காத நீங்கள், உங்கள் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி மதரஸாக்களுக்கு அனுப்புவது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளிவரும் தலித் வாய்ஸ் என்ற இதழில் ஒரு வாசகர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு எவ்வாறு விடையளிப்பது?

சாஜிதா ஹுஸைன், சென்னை.

பதில்:

என்ன தான் படித்தாலும் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பதை அனுபவப் பூர்வமாக முஸ்லிம்கள் விளங்கியுள்ளனர்.

இதன் காரணமாகவே படிப்புக்கு ஆர்வம் ஊட்டுவதில்லை. உயர் கல்வி கற்பதற்கு இட ஒதுக்கீடும் முஸ்லிம்களுக்கு இல்லாததால் பணம் கொடுத்துத் தான் இடம் பிடிக்கும் நிலை உள்ளது. இது போன்ற காரணங்களால் தான் முஸ்லிம்கள் நவீன கல்வியில் ஆர்வம் காட்டுவதில்லை.

அந்த நிலையும் சமீபகாலமாக மாறி வருவதைக் காண்கிறோம்.

வெள்ளையர்களை வெறுக்கிறோம் என்ற பெயரில் தேச பக்தி முற்றிப்போய் ஆங்கிலக் கல்வி படிக்கக் கூடாது என்று அன்றைய முஸ்லிம் அறிஞர்கள் அன்று அறிவுரை கூறினார்கள். அதை ஏற்று முஸ்லிம்கள் படிப்பை நிறுத்தினார்கள். காயிதே மில்லத் போன்றவர்களே படிப்பை பாதியில் விட்டனர்.

வெள்ளையர் காலத்தில் இட ஒதுக்கீடு இருந்தும் தேசப்பற்றின் காரணமாக முஸ்லிம்கள் கல்வியைப் புறக்கணித்தனர். ஆனால் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு வெள்ளையர்கள் அளித்து வந்த இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது.

முன்னோர்கள் தேசப்பற்றின் காரணமாக கல்வியைக் கற்காததால் அதன் முக்கியத்துவம் தெரியாத சமுதாயமாக இன்றைய முஸ்லிம்கள் உள்ளனர்.

(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)