இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்?

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்?

பதில் :

இதுபோன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்க இஸ்லாம் கூறும் பொதுவான ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்வது அவசியம்.

எந்த ஒரு பிரச்சனையானாலும் அதில் நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.

ஒருவன் முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயம் செய்தால் அவன் முஸ்லிம் என்பதற்காக அவனை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை.

இறைமறுப்பாளனாக இருக்கும் ஒருவன் அநீதி இழைக்கப்பட்டால் அவன் இறைமறுப்பாளன் என்பதற்காக அவனுக்கு ஆதரவுக் கரம் நீட்டக்கூடாது என்றும் இஸ்லாம் கூறவில்லை.

பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதும், அநியாயம் செய்தவர் யாராக இருந்தாலும் அவரைக் கண்டிப்பதும் தான் நேர்மையானது.

இது போன்ற விஷயங்களில் இஸ்லாம் நீதத்தைத் தான் பார்க்கச் சொல்கிறதே தவிர மதத்தைப் பார்க்கச் சொல்லவில்லை.

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (2

மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

திருக்குர்ஆன் 5:2

இஸ்லாம் அல்லாத வேறு கொள்கையில் இருப்பவர்கள் விஷயத்தில் நீதம் தவறக் கூடாது என்றும் குர்ஆன் கூறுகின்றது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (8

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 5:8

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8)

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 60:8

ஒரு முஸ்லிமுக்கும், யூதருக்கும் இடையே நிலத் தகராறு ஏற்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் இனத்தைச் சார்ந்தவர் என்பதால் முஸ்லிமுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கவில்லை. ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பையே அளித்தார்கள்.

2417حَدَّثَنَا مُحَمَّدٌ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ شَقِيقٍ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَهُوَ فِيهَا فَاجِرٌ لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ قَالَ فَقَالَ الْأَشْعَثُ فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنْ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَكَ بَيِّنَةٌ قُلْتُ لَا قَالَ فَقَالَ لِلْيَهُودِيِّ احْلِفْ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا إِلَى آخِرِ الْآيَةِ رواه البخاري

எனக்கும், ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்து விடவே நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், இல்லை என்றேன்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, (அப்படியென்றால் நிலம் என்னுடையது தான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை என்று) சத்தியம் செய் என்று கூறினார்கள். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறென்றால் அந்த யூதன் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவானே! என்று கூறினேன். உடனே பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்., எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும், தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ அவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கின்றது.(3:77)

நூல் : புகாரி 2417

இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் நாம் யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற கேள்விக்கு இப்போது வருவோம். அப்படியொரு சூழல் வந்தால் யாரிடம் நியாயம் இருக்கின்றதோ அவர்களை ஆதரிப்போம். அக்கிரமக்காரர்களைப் புறக்கணிப்போம். இந்தியா, பாகிஸ்தான் மட்டுமின்றி எந்த நாடாக இருந்தாலும் இந்த அளவுகோலின் அடிப்படையிலேயே நாம் முடிவெடுப்போம்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை அது பெயரளவில் தான் இஸ்லாமிய நாடாக உள்ளது. அங்கே இஸ்லாமிய ஆட்சி இல்லை. அதை ஆளக்கூடியவர்களிடம் இஸ்லாமும் இல்லை. உலக ஆதாயத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு அமெரிக்காவின் கைகூலிகளாகச் செயல்படுகிறார்கள்.

நாட்டின் நிர்வாகத் துறையில் இந்தியாவை விட மிக மோசமான நிலையிலேயே பாகிஸ்தான் உள்ளது. ஒரு வாதத்துக்காக முஸ்லிம் நாடு என்று வைத்துக் கொண்டாலும் அந்தக் காரணத்துக்காக அதை ஆதரிக்க முடியாது.

ஒருவன் முஸ்லிமாக இருப்பதுடன் அவனுடைய செயல்பாடுகளும், முயற்சிகளும் இஸ்லாத்திற்காக இருந்தால் தான் அவற்றை ஆதரிக்க முடியும். அவனது செயல்பாடுகள் சுயலாபத்திற்காக இருந்தால், அல்லது தேவையற்றதாக இருந்தால் அதற்கு இஸ்லாமியச் சாயத்தைப் பூசி ஆதரிக்க வேண்டியதில்லை.

ஒரு முஸ்லிம் அமெரிக்கக் குடிமகனாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்கக் குடிமகன் என்பதற்காக அமெரிக்காவின் அத்துமீறல்களை ஆதரிக்கக் கூடாது. அமெரிக்கா செய்யும் நல்ல காரியங்களை மட்டும் தான் ஆதரிக்கலாமே தவிர அநியாயத்தை ஆதரிக்க முடியாது.

அந்த அடிப்படையில் இந்தியாவின் நடவடிக்கை அநியாயமாக இருந்தால் அந்த அநியாயத்தை எதிர்க்கும் கடமை முஸ்லிம்களுக்கு உள்ளது.

இந்த விஷயத்தில் அமெரிக்க மக்களில் அதிகமானவர்களிடம் இந்த நேர்மையான பார்வை உண்டு.

இராக் மீது அமெரிக்க ஆக்ரமிப்பு போர் தொடங்கிய போது அது அப்பட்டமான அத்துமீறல் என்பதால் அமெரிக்க மக்கள் இதைக் கண்டித்து  அமெரிக்க நகரங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இவர்களை அமெரிக்க அரசு தேச விரோதிகளாகப் பார்க்கவில்லை.

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் போர் நடந்து நியாய அநியாயங்கள் அடிப்படையில் முடிவெடுக்க முடியாத நிலை இருந்தால் அப்போது நாம் இந்தியாவின் பக்கம் தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தன்னையும், தனது குடும்பத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளான். அந்த அடிப்படையில் பாகிஸ்தான் நமது நாட்டின் மீது படை எடுக்கும்போது நாமும், நமது மக்களும் தான் பாதிக்கப்படுவோம் என்பதால் நமது நாட்டின் பக்கம் தான் நிற்க வேண்டும்.

18.02.2011. 1:57 AM

Leave a Reply