உடன் பிறந்த சகோதரர்கள் தமக்குப் பிறந்த ஆண் பெண் குழந்தைகளை மாற்றிக் கொள்ளலாமா?

உடன் பிறந்த சகோதரர்கள் தமக்குப் பிறந்த ஆண் பெண் குழந்தைகளை மாற்றிக் கொள்ளலாமா?

நிஜாம்

ஒருவரின் குழந்தையை இன்னொருவர் எடுத்து வளர்ப்பதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. அண்ணன் தம்பிகள் மட்டுமின்றி அன்னியர்களாக இருந்தாலும் ஒரே சட்டம் தான். குழந்தை இல்லாதவர்கள் அன்பைப் பொழிவதற்கும், தள்ளாத வயதில் தங்களைக் கவனித்துக் கொள்வதற்கும் எந்தக் குழந்தையையும் எடுத்து வளர்க்கலாம்.

ஆனால் உறவினரின் குழந்தையை எடுத்து வளர்த்தாலும், அன்னியரின் குழந்தையை எடுத்து வளர்த்தாலும் அவர்கள் சொந்தப் பிள்ளைகளாக மாட்டார்கள். இது தான் முக்கியமாக கவனிக்க வேண்டியதாகும்.

இது குறித்து நம்முடைய திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாம் விளக்கியதைத் தருகிறோம். அதுவே உங்கள் சந்தேகங்களைப் போக்கும்

317. தத்துப் பிள்ளைகள்

இவ்வசனங்களில் (33:4, 58:2) தத்துப் பிள்ளைகள் சொந்தப் பிள்ளைகளாக முடியாது என்று கூறப்படுகிறது.

இஸ்லாம் போலித்தனமான எல்லாவிதமான உறவுகளையும் நிராகரிக்கிறது. தனது தந்தை இன்னார் என்று தெரிந்திருந்தும் வேறொருவரைத் தனது தந்தை எனக் கூறும் பிள்ளைகள் இருக்கின்றார்கள். யாருக்கோ பிறந்த பிள்ளையைத் தனது பிள்ளை என்று கூறிச் சொந்தம் கொண்டாடுகின்ற தந்தைமார்களும் இருக்கிறார்கள்.

இது வாய் வார்த்தைகளால் மனிதர்கள் செய்து கொள்கின்ற கற்பனை தானே தவிர, ஒருவரது பிள்ளை எந்தக் காரணத்தைக் கொண்டும் இன்னொருவனுக்குப் பிள்ளையாக முடியாது.

ஒரு மனிதன் தனக்குப் பிறக்காத குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் தந்தையாக முடியாது. இது மனிதர்களாகச் சொல்லிக் கொள்கின்ற வார்த்தை என்று கூறி போலித்தனமான எல்லா உறவுகளையும் இஸ்லாம் அடியோடு நிராகரிக்கின்றது.

இரத்த சம்பந்தமான உறவுகள் ஏற்பட வேண்டுமானால் உண்மையிலேயே இரத்த சம்பந்தம் இருக்க வேண்டும். அதுதான் நேர்மையானது; நீதியானது எனவும் இவ்வசனம் (33:4,5) அறிவுரை கூறுகின்றது.

அக்குழந்தை உருவாகுவதற்கு காரணமாக இருந்தவனே அக்குழந்தையின் தந்தையாக இருக்க முடியும். வளர்த்தவரை தந்தை என்று கூறுவது பொய்யாகும்.

ஒரு பிராணியை ஒருவன் வளர்த்தால் அப்பிராணிக்கு அவன் தந்தை என்று கூற முடியுமா? ஒரு செடியை ஒருவன் வளர்ப்பதால் அச்செடிக்கு அவன் தந்தை என்று கூற முடியுமா? தத்தெடுத்து வளர்ப்பவரை தந்தை என்று கூறுவது இது போன்றே அமைந்துள்ளது.

வளர்ப்பவரைப் பொறுப்பாளர் என்று கூறலாம். தந்தை என்று கூறுவது போலி உறவை ஏற்படுத்தும் செயலாகும்.

இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தால் அக்குழந்தைக்கு அவர் தான் தந்தை என்று கருதும் வழக்கம் இருந்தது. வளர்ப்பு மகன் தன்னை எடுத்து வளர்த்தவருக்கு வாரிசாகி வந்தார். பின்பு இஸ்லாம் இதைத் தடை செய்து விட்டது.

صحيح البخاري

4782 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ المُخْتَارِ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ: حَدَّثَنِي سَالِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ زَيْدَ بْنَ حَارِثَةَ، مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا كُنَّا نَدْعُوهُ إِلَّا زَيْدَ بْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ القُرْآنُ»، {ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ} [الأحزاب: 5]

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும் எனும் (33:5ஆவது) குர்ஆன் வசனம் அருளப்படும் வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ஸைத் பின் முஹம்மத் (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.

நூல் : புகாரி 4782

குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் பெண்கள் அக்குழந்தைக்குத் தாயாக முடியாது. அக்குழந்தை திருமணம் முடிக்க தடைசெய்யப்பட்ட நெருங்கிய உறவினராக முடியாது.

எனவே அக்குழந்தை பருவ வயதை அடைந்து விட்டால் ஒரு அந்நியரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கற்றுக் கொடுத்துள்ளதோ அந்த ஒழுங்கு முறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக தன்னால் வளர்க்கப்பட்டவர் பருவ வயதை அடைந்த பின் தனியாக இருப்பது, பர்தா இல்லாமல் அவருக்கு முன்னால் காட்சி தருவது போன்றவை கூடாது. அந்நிய ஆணுடைய அந்தஸ்தையே அவருக்குக் கொடுக்க வேண்டும்.

ஒருவர் குழந்தை இல்லை என்பதற்காக ஆண் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். பின்னர் அவருக்கு அல்லாஹ் ஒரு பெண் குழந்தையைக் கொடுக்கிறான். அந்தப் பெண் குழந்தை பருவமடைந்ததும் அவர் வளர்த்த ஆணுக்கு தனது மகளை மணமுடித்துக் கொடுக்கலாம். ஏனெனில் அந்த ஆண் இவரது மகனில்லை. எனவே இவரது மகளுக்கும் அவன் சகோதரனாக மாட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது.

இது போல் வளர்த்தவர் மரணித்து விட்டால் அவரது சொத்துக்களுக்கு பெற்ற மகன் வாரிசாவது போல் வளர்க்கப்பட்டவன் வாரிசாக முடியாது. ஏனெனில் இவன் அவரது மகன் இல்லை. உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் போன்ற பல உறவினர்கள் இருக்கும் போது யாரோ ஒருவனை வாரிசெனக் கூறுவது அந்த உறவினர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். உறவினர்களைப் பகைக்கும் நிலைமை ஏற்படும்.

வளர்க்கப்பட்டவனுக்கு ஏதேனும் கொடுக்க விரும்பினால் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமல் மரண சாசனம் எழுதலாம். அல்லது உயிருடன் இருக்கும் போதே எதையாவது கொடுக்கலாம்.

24.09.2014. 23:04 PM

Leave a Reply