கடலில் இறந்தவர்களுக்கு கப்ரு எது?

கடலில் இறந்தவர்களுக்கு கப்ரு எது?

கேள்வி: கடலில் பயணம் செய்யும் போது இறந்தவர்களை அடக்கம் செய்யாமலேயே கடலில் போட்டு விடுகின்றனர். இவர்களுக்கு கப்ரு வேதனை எவ்வாறு?

மு.யூசுப் ரஹ்மத்துல்லா சேட், நாகூர்.

பதில்

நீங்கள் கேட்டுள்ள நிலையை அடைந்தவர்கள் மட்டுமல்ல. இன்னும் சிலரது விஷயத்திலும் கூட இந்தச் சந்தேகம் எழுவது இயற்கையே!

உடலை எரித்து சாம்பலாக்கி பல பகுதிகளிலும் தூவிவிடப்பட்டவர்கள், மிருகங்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவற்றுக்கு உணவாகிப் போனவர்கள் ஆகியோருக்கு கப்ரு வேதனை எவ்வாறு?

இவர்களுக்கு கப்ரே கிடையாது எனும் போது கப்ரு வேதனை எவ்வாறு இருக்கும் என்றும் கேட்கலாம்.

அடக்கம் செய்யப்பட்ட இடம் என்பது தான் கப்ரு என்ற சொல்லின் நேரடிப் பொருள் ஆகும். ஆனால் எல்லா இடத்திலும் அவ்வாறு பொருள் கொள்ள முடியாது. குறிப்பாக கப்ரில் வேதனை செய்யப்படுகிறது என்று கூறும் போது கப்ரு என்பதற்கு அடக்கத்தலம் என்ற நேரடிப் பொருள் கொடுக்க முடியாது. மண்ணுக்கு உள்ளே தான் அந்த வேதனை நடக்கின்றது என்று கருதக் கூடாது என்று நாம் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

முஸ்லிம்களானாலும், காஃபிர்களானாலும்  அனைவரும் கப்ருடைய வாழ்வைச் சந்தித்தே தீருவார்கள். காஃபிர்களும் கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள் என்பதைப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன. மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று நாம் கூறினால் பெரும்பலான காஃபிர்கள் அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்ற முடிவுக்கு வரும் நிலை ஏற்படும். ஏனெனில் காஃபிர்களில் பெரும்பாலோர் இறந்தவர்களை மண்ணில் புதைக்காமல் எரித்துச் சாம்பலாக்கி விடுகின்றனர். காஃபிர்களுக்கும் கப்ருடைய வேதனை உண்டு என்ற நபிமொழிக்கு இது முரணாக அமைகின்றது.                                                              

பாவம் செய்த முஸ்லிம்களைக் கப்ரில் வேதனை செய்யும் இறைவன் சில காஃபிர்களுக்கு அத்தகைய வேதனை வழங்க மாட்டான் என்பது இறைவனின் நியதிக்கும், அவனது நியாயத்திற்கும் ஏற்புடையதாக இல்லை.                                                

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

திருக்குர்ஆன் 23:100

அவர்கள் திரும்ப எழுப்பப்படும் வரை திரைமறைவு (வாழ்க்கை) உண்டு என்ற வசனத்தின்படி கப்ருடைய வேதனை என்பது திரைமறைவு வாழ்க்கை என்பது புரிகிறது. மண்ணுக்குள் தான் அது நடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.                          

மேலும் ஒரு கப்ரில் ஸாலிஹான நல்லடியார்களும், மிக மோசமானவர்களும் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்படுகின்றனர். அடக்கம் செய்த இடத்திற்குள்ளேயே வேதனை நடக்கிறது என்று பொருள் கொள்ள இதுவும் தடையாக நிற்கிறது.                                

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 39:42

அனைத்து உயிர்களையும் இறைவன் தன் கைவசம் வைத்துள்ளான் என்பது இந்த வசனத்திலிருந்து தெளிவாகிறது. நமது புலனுணர்வுக்குத் தென்படாத மற்றொரு உலகத்தில் அந்த ஆத்மாக்களுக்கு அவன் வேதனையோ, சுகமோ வழங்குவான் என்று எடுத்துக் கொண்டால் தான் அனைவருக்கும் கப்ரு வாழ்க்கை என்பது மெய்யாகும்.

மண்ணுக்குள் தான் கப்ரு வேதனை என்று எடுத்துக் கொண்டால் முஸ்லிமல்லாதவர்களுக்கு கப்ரு வேதனை இல்லை என்ற விபரீதமான கருத்து வந்து விடும். மேலும் தண்ணீரில் அழுகி கரைந்து போனவர்கள், மீன்களுக்கும் மிருகங்களுக்கும் உணவாகிப் போனவர்களுக்கும் கப்ரு கப்ரு வாழ்க்கை இல்லை என்று ஆகிவிடுகிறது.

கப்ருகளுக்கு நாம் ஸலாம் கூறுவதும், ஜியாரத்துக்குச் செல்வதும், கப்ரில் வேதனை செய்யப்பட்ட இருவரின் அடக்கத் தலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சை மட்டையைப் பிளந்து ஊன்றியதும், அந்த இடத்தில் வேதனை செய்யப்படுகின்றது என்ற கருத்தைத் தருவது போல் அமைந்திருந்தாலும் இதை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் தான் வேதனை செய்யப்படுகின்றது என்று நாம் முடிவு செய்தால் காஃபிர்களும், அடக்கம் செய்யப்படாதவர்களும் அந்த வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்ற கருத்து ஏற்படுகின்றது.

யார் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படுகிறார்களோ அவருடைய கப்ரு வாழ்க்கை அடக்கத் தலத்தில் அமையும். யார் அடக்கம் செய்யப்படாமல் வேறு வகையில் இறுதிப் பயணத்தை அடைகிறார்களோ அவர்களுக்கு இறைவன் தன் வல்லமையினால் ஒரு உலகை உருவாக்கி அதில் அவர்களின் கப்ருடைய வாழ்வை அமைப்பான் என்று புரிந்து கொண்டால் அனைத்து ஆதாரங்களும் பொருந்திப் போகின்றன.    

அல்லது அனைவருக்குமே மண்ணுலகம் அல்லாத மற்றொரு உலகில் கப்ருடைய வாழ்வை இறைவன் அமைக்கலாம். அடக்கத்தலம் அடையாளமாக இருப்பதாலும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதாலும் அடக்கத் தலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சை மட்டைகளை நட்டு வைத்திருக்கலாம் என்று புரிந்து கொண்டாலும் அது குழப்பமில்லாத முடிவாக அமையும். எப்படி வைத்துக் கொண்டாலும் கப்ருடைய வாழ்விலிருந்து எவரும் விலக்குப் பெற முடியாது என்பதில் சந்தேகமில்லை.

அனைவருக்கும் கப்ரு உண்டு என்ற கருத்தை உடைத்து விடாத வகையில் தான் கப்ரு பற்றிய செய்திகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply