நபியின் பெற்றோர் குறித்த அறியாமை வாதத்திற்கு பதில்!

நபியின் பெற்றோர் குறித்த அறியாமை வாதத்திற்கு பதில்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோர் சொர்க்கம் செல்வார்கள் என்ற கருத்தில் ஒருவர் வாதிடும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

அந்த வீடியோ:

இதில் பேசுபவர் என்ன வாதிடுகிறார் என்றால் திருக்குர்ஆனின் 17:24 வசனத்தில், கீழ்க்கண்டவாறு அல்லாஹ் நபிக்குக் கூறுகிறான் :

சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!  என்று கேட்பீராக.

நபியவர்கள் தமது பெற்றோருக்காக துஆ செய்யுமாறு அல்லாஹ் கூறுவதால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்று தெரிகிறது.

இவ்வசனத்தின் அடிப்படையில் நபியின் பெற்றோர் சொர்க்கம் செல்வார்கள் என்பது தெரிகிறது.

நபியின் பெற்றோருக்கு நரகம் என்று வரும் ஹதீஸ்கள் இவ்வசனத்துக்கு முரணாக உள்ளது. குர்ஆனின் கருத்துப்படி நபியின் பெற்றோர் சொர்க்கவாசிகளே என்பது இவரது வாதம்.

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கக் கூடாது என்பதை இவர் இந்த வீடியோவில் ஏற்றுக் கொள்கிறார்.

இவர் கூறுவது போல் குர்ஆனில் இருந்தால் இவரது வாதம் ஏற்கத்தக்கது தான். குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்ற அடிப்படை சரியானது தான்.

ஆனால் இவர் குர்ஆனை தனக்கு விருப்பமான கருத்துக்கு ஏற்ப வளைத்துள்ளதால் இப்படி ஒரு வாதத்தை வைத்துள்ளார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது தாயும், தந்தையும் பற்றி ஹதீஸ்களில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை முதலில் பார்ப்போம்.

இது பற்றிய ஹதீஸ்கள் என்ன என்பதை அறிந்து கொள்வதுடன் தமது பெற்றோரை நரகவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதில் தான் அவர்களின் சிறப்பும் கொள்கைத் தெளிவும் மிளிர்கிறது என்பதை மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலில் பீஜே அவர்கள் பின்வருமாறு விளக்கியுள்ளார்.

صحيح مسلم

521 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ أَبِى قَالَ « فِى النَّارِ ». فَلَمَّا قَفَّى دَعَاهُ فَقَالَ « إِنَّ أَبِى وَأَبَاكَ فِى النَّارِ »

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் தந்தை எங்கே இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகத்தில் என்றார்கள். அவர் கவலையுடன் திரும்பிச் சென்றார். அவரை மீண்டும் அழைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் தந்தையும், உன் தந்தையும் நரகத்தில் தான் இருப்பார்கள் என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

கேள்வி கேட்டவரின் தந்தை ஒரு கடவுளை நம்பாமல் சிலைகளைக் கடவுளாக கருதி வணங்கி வந்த நிலையிலேயே மரணித்து விட்டார். அவர் நரகத்தில் தான் இருப்பார் என்று தயக்கமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளிக்கிறார்கள். யாருடைய மனமும் புண்படக் கூடாது என்பதற்காக எந்த விதமான சமரசமும் அவர்கள் செய்யவில்லை.

ஆனால் வந்தவர் தனது தந்தை பற்றித்தான் கேள்வி கேட்டார். நபிகள் நாயகத்தின் தந்தை பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. வேறு யாரும் இத்தகைய கேள்விகளைக் கேட்கவில்லை. ஆனாலும் வலிய வந்து தமது தந்தையும் நரகத்தில் தான் இருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

இது அவர்களின் மாசு மருவற்ற நேர்மைக்கும், கொள்கைப் பிடிப்புக்கும் எடுத்துக் காட்டாக உள்ளது.

கேள்வி கேட்டவரின் தந்தை எவ்வாறு பல தெய்வ நம்பிக்கையுடையவரோ, அது போல் தான் நபிகள் நாயகத்தின் தந்தையும் இருந்தார். பல தெய்வ நம்பிக்கையுடையோரை இறைவன் நரகத்தில் தள்ளுவான் என்ற விதியில் எனது தந்தை என்பதற்காக எந்த விதிவிலக்கும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.

தந்தையைப் பற்றி மட்டுமின்றி தமது தாயாரைப் பற்றியும் இவ்வாறே அறிவிப்புச் செய்தார்கள்.

صحيح مسلم

2303 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ – وَاللَّفْظُ لِيَحْيَى – قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ عَنْ يَزِيدَ – يَعْنِى ابْنَ كَيْسَانَ – عَنْ أَبِى حَازِمٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « اسْتَأْذَنْتُ رَبِّى أَنْ أَسْتَغْفِرَ لأُمِّى فَلَمْ يَأْذَنْ لِى وَاسْتَأْذَنْتُهُ أَنْ أَزُورَ قَبْرَهَا فَأَذِنَ لِى ».

என் தாயாரின் பாவங்களை மன்னிப்பு கேட்டு பிரார்த்திக்க இறைவனிடம் நான் அனுமதி கேட்டேன். அவன் மறுத்து விட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் தந்தையைப் போலவே தாயாரும் பல தெய்வ நம்பிக்கையுடையவராகவே இருந்து மரணித்திருந்தார். நபிகள் நாயகத்தின் தாயார் என்பதற்காக எவ்வித விதிவிலக்கும் அளிக்கப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

ஆன்மிகத் தலைவர்கள் மற்றவர்களுக்கு விலக்கு அளிக்கிறார்களோ இல்லையோ தங்களுக்கு விலக்கு அளித்துக் கொள்வார்கள். எதைப் போதித்தார்களோ அதற்கு மாற்றமாக நடப்பார்கள். யரேனும் கேள்வி எழுப்பினால் நாங்கள் தனிப் பிறவிகள் என்பார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் இந்தக் கொள்கையை நான் மீறினாலும் எனக்குக் கிடைப்பது நரகமே என்று தெளிவான வார்த்தைகளால் பிரகடனம் செய்தார்கள்.

  • மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலில் இருந்து

நபியின் பெற்றோர் குறித்த மேற்கண்ட ஹதீஸ்கள் தான் குர்ஆனுக்கு முரணானவை என்று இந்த வீடியோக்காரர் வாதிடுகிறார்.

இவரது வாதப்பட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற அத்தனை நபித்தோழர்களின் பெற்றோர்கள் குறித்து இந்த வாதத்தை இவர் எடுத்து வைப்பாரா?

நபிகள் நாயகத்துக்கு முன் மரணித்த நபித்தோழர்களின் பெற்றோர்கள் அனைவரும் சொர்க்கவாசிகள் என்று இவர் வாதிடுவாரா?

அப்படி வாதிட மாட்டார் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கொள்கையில் தமது பெற்றோருக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துக் கொண்டார்கள் என்று ஆகும். அல்லாஹ்வின் தூதர் ஒருக்காலும் கொண்ட கொள்கையில் சமரசம் செய்து கொண்டதே இல்லை என்பது தான் உண்மை. அதற்கு அவர்களுக்கு அதிகாரமும் இல்லை.

இந்த வீடியோக்காரர் சுட்டிக்காட்டும் வசனங்கள் கூறுவது என்ன?

என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி சீ எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக! என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 17:23,24

இவ்வசனம் நபிகள் நாயகத்துக்கான கட்டளை அல்ல. பொதுவாக மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என்று தான் இவ்வசனம் கூறுகிறது.

மனிதர்கள் தமது பெற்றோர் விஷயத்தில் நடந்து கொள்ள வேண்டிய பொதுவான வழிமுறை இதுவாகும்.

பெற்றோர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து இருந்தால் அவர்களுக்கு மன்னிப்பு கேட்கக் கூடாது என்ற சட்டம் இந்தப் பொது விதியில் இருந்து விலக்கு பெறுகிறது.

மேற்கண்ட வசனம் நபிக்குப் பொருந்தாது என்பது மேற்கண்ட வசனத்தில் இருந்தே தெரிகிறது.

சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல்

என்ற வாசகம் சொல்வது என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது அவர்களை பெற்றோர்கள் பராமரித்து இருந்தால் தான் இது அவர்களுக்குப் பொருந்தும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாய் வயிற்றில் இருந்த போதே தந்தை மரணித்து விட்டார்கள். நபியவர்களை அவர்களின் தந்தையால் அவர்கள் பராமரிக்கப்படவே இல்லை.

அப்படி இருக்கும் போது என் தாயும் தந்தையும் என்னைப் பராமரித்தது போல் என்று நபி அவர்கள் பொய்யான பிரார்த்தனை செய்தார்களா?

இதை இந்த வீடியோக்காரர் சிந்தித்துப் பார்த்து இருந்தால் இது மனிதர்களுக்கான பொதுவான கட்டளை என்று அறிந்திருப்பார்.

அடுத்து மேலே எடுத்துக்காட்டப்பட்ட வசனத்தில்

அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி சீ எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!

என்று கூறப்படுகிறது.

இவ்வசனம் அருளப்படும் போது நபியின் பெற்றோரில் ஒருவரோ, இருவருமோ உயிருடன் இல்லை என்று தெரியும் போது அவர்கள் உயிருடன் உம்மிடம் இருந்தால் என்று அல்லாஹ் கூறுவானா?

இவ்வாசகத்தில் இருந்து இது நபிக்குப் பொருந்தாது என்று இவர் அறிய வேண்டாமா?

இது எப்படிப் பொருந்தாதோ அது போல் தான் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த பெற்றோருக்கும் பொருந்தாது என்று விளங்க வேண்டாமா?

குர்ஆனை நுனிப்புல் மேயும் போக்கு மிகவும் ஆபத்தானது என்பதை அவருக்கு நாம் சொல்லிக் கொள்கிறோம்.

அடுத்து சாலிஹான குழந்தைகள் பெற்றோருக்கு செய்யும் துஆ ஏற்கப்படும் என்று நபிகள் கூறியதையும் எடுத்துக் காட்டுகிறார்.

ஆனால் இவரே இப்ராஹீம் நபியின் தந்தைக்கு இப்ராஹீம் நபி கேட்ட துஆவை அல்லாஹ் ஏற்கவில்லை என்றும் கூறுகிறார்.

அப்படியானால் இப்ராஹீம் நபி சாலிஹான குழந்தை இல்லையா?

சாலிஹான குழந்தையாக இருந்தாலும் ஈமான் இல்லாத பெற்றோருக்குச் செய்யும் துஆ ஏற்கப்படாது என்பதை விளங்கிக் கொண்டே மனமுரண்டாக இவர் வாதம் செய்கிறார். தனக்குத் தானே முரண்படுகிறார்.

நபியின் பெற்றோர், நபி அனுப்பப்படாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும் என்ற கேள்வி எழும். இது குறித்து ஏற்கனவே நமது ஆன்லைன் பீஜே இணையதளத்தில் வெளியிடப்பட்ட பதிவை காணவும்:

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

02.03.2016. 13:02 PM

Leave a Reply