முஸ்லிம் நாடுகள் தமக்குள் ஏன் சண்டையிட்டுக் கொள்கின்றன?

முஸ்லிம் நாடுகள் தமக்குள் ஏன் சண்டையிட்டுக் கொள்கின்றன?

கேள்வி: இஸ்லாத்தில் மனித நேயம் இருக்கின்றது சரி. அது நடைமுறையில் இருக்கின்றதா? அப்படி இருந்தால் ஏன் இஸ்லாமிய நாடுகள் தங்களுக்குள் சண்டையிடுகின்றன. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியது தானே என்று நண்பர் ஒருவர் வினவுகிறார். மேலும், உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள் என்றார்.

– ஏ.ஆர். சைபுல்லாஹ், யு.ஏ.இ.

பதில்: இந்தக் கேள்விக்குரிய சரியான விடை நம்மைத் திருத்திக் கொள்வது தான்.

இஸ்லாமிய நாடுகளின் சண்டைகளை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் நம்மிடையே பூரணமான சகோதரத்துவத்தைக் கடைப்பிடித்தால், ஒருவருக்கொருவர் உதவுவதில் மற்றவர்களை விட முன்னணியில் நாம் இருந்தால் அந்த நாடுகளின் நடவடிக்கைக்கும், இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று நாம் கூறுவதை அவர்கள் நம்புவார்கள்.

எனவே முஸ்லிம் சமுதாயம் இது போன்ற கேள்விகளிலிருந்து 'மற்றவர்கள் நம்மை எந்த அளவுக்குக் கவனிக்கிறார்கள்? நம்மிடம் எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இது நம்மவருக்குக் கூற வேண்டிய செய்தியாகும்.

முஸ்லிம்கள் என இன்று உலகில் வாழ்பவர்களில் தொன்னூறு சதவிகிதம் பேர் பல்வேறு மதங்களை ஆய்வு செய்து, இஸ்லாம் சரியான வாழ்க்கை நெறி என்று உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர்.

மாறாக தமது பெற்றோர் முஸ்லிம்களாக இருந்ததால் தம்மையும் முஸ்லிம்களில் சேர்த்துக் கொண்டவர்கள். இஸ்லாத்தின் அடிப்படை என்ன என்பதை அறியாதவர்கள் கூட இத்தகையோரில் உள்ளனர்.

அதாவது இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு ஏற்காதவர்களே பெரும்பாலான முஸ்லிம்களாகவுள்ளதால் தான் அந்த நண்பர் சுட்டிக்காட்டுகிற நிலைமை இருக்கிறது. அதிலும் முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களின் நிலைமை இதை விட மோசமாகவுள்ளது.

அவர்களில் பலர் பெயரளவுக்குத் தான் முஸ்லிம்களே தவிர முழுக்க முழுக்க மேற்கத்தியக் கலாச்சாரத்தின் அடிமைகளாவே அவர்கள் உள்ளனர். எனவே தான் நாடு பிடிப்பதற்கும், இன்னபிற நோக்கத்திற்கும் அண்டை நாடுகளுடன் சண்டையிட்டு வருகின்றனர் என்பதை நண்பருக்கு விளக்குங்கள்!

முஸ்லிம்களை முஸ்லிம்களாக வாழச் செய்ய இன்னும் கடுமையாக நாம் உழைத்தால் இது போன்ற கேள்விகளை யாரும் கேட்க முடியாமல் செய்யலாம்.

(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)