வாழ்த்துச் சொல்வது கூடாது என்று சொன்ன பீஜே நியூஸ் 7 சேனலில் வாழ்த்துக்கள் என்று சொன்னது ஏன்?

வாழ்த்துச் சொல்வது கூடாது என்று சொன்ன பீஜே நியூஸ் 7 சேனலில் வாழ்த்துக்கள் என்று சொன்னது ஏன்?

பதில் :

பீஜேயாகட்டும்! தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற அறிஞர்களாகட்டும்! அவர்களின் மார்க்க ஆய்வில் தவறு உள்ளது என்று ஆதாரத்துடன் யார் சுட்டிக் காட்டினாலும் அதை ஏற்று பகிரங்கமாக அறிவித்து விடுவார்கள். இதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன.

வாழ்த்து என்று சொல்லக் கூடாது என்பதுதான் ஆரம்பத்தில் பீஜேயின் நிலைபாடாக இருந்தது. அந்த நிலைபாட்டில் அவர் இருக்கும் வரை யாருக்கும் வாழ்த்து என்று சொன்னதில்லை.

வாழ்த்து என்று சொல்ல ஆதாரம் உள்ளது என்று எடுத்துக் காட்டப்பட்ட உடன் தனது கருத்தை மாற்றி ஆன்லைன்பீஜே டாட் காம் இணையதளத்தில் 2011 ஆம் ஆண்டு பீஜே விளக்கம் அளித்து விட்டார்.

வாழ்த்துக்கள் என்ற வாசகத்தை துஆ என்ற அடிப்படையில் சொல்லலாமே! இன்னும் பல ஹதீஸ்களில் வாழ்த்துக்கள் சொன்னதாக செய்திகள் வந்துள்ளதே! அதை நபிகளார் கண்டிக்காமல் ஆமோதித்துள்ளார்களே! சுவனத்திலும் ஸலாத்துடன், வாழ்த்துக்களும் சொல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளதே! அப்படியானால் அனுமதிக்கப்பட்ட அடிப்படையில் துஆ என்ற கோணத்தில் வாழ்த்துக்கள் சொல்வது சரிதானே! என சில சகோதரர்கள் தக்க சான்றுகளுடன் பீஜேவிற்கு சுட்டிக்காட்டினர்.

அதை ஏற்றுக் கொண்டு ஏற்கனவே வெளியிட்ட ஆக்கத்தை கீழ்க்கண்டவாறு பீஜே மாற்றி கடந்த 15-9-2011 அன்று வெளியிட்டார்.

அந்த ஆக்கத்தில் வாழ்த்துக்கள் சொல்வது குறித்து பீஜே எழுதியதன் சாராம்சம் இதுதான்.

ஆன்லைன் பீஜேவில் திருத்தி வெளியிடப்பட்ட செய்தியின் முக்கிய பகுதி:

ஈத் முபாரக் சொல்லலாமா?

(பெருநாள் வாழ்த்து என்று சொல்வது ஆசி வழங்குவது போல் உள்ளது என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் இந்த ஆக்கத்தில் தெரிவித்திருந்தோம். ஆனால் ஸலாம் உண்டாகட்டும் என்று நாம் கூறும் போது ஆசி வழங்குகிறேன் என்று யாரும் கருதுவது இல்லை. ஸலாம் உண்டாக துஆச் செய்கிறேன் என்று தான் இதைப் புரிந்து கொள்கிறோம். அது போல் பெருநாள் வாழ்த்து என்றால் பெருநாள் தினத்தில் நன்றாக வாழ துஆச் செய்கிறேன் என்று தானே பொருள் கொள்ள வேண்டும் என்று சிலர் நமக்கு சுட்டிக் காட்டினார்கள். தக்க காரணங்களுடன் இவர்களின் விமர்சனம் இருந்ததால் இதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். எனவே அதற்கேற்ப இந்த ஆக்கம் 15-9-2011 அன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது)

வாழ்த்து என்ற சொல் இரண்டு அர்த்தங்கள் கொள்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.

நீங்கள் நன்றாக வாழுங்கள் என்று ஆசி வழங்குவது ஒரு அர்த்தம்.

நீங்கள் நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன் என்பது இன்னொரு அர்த்தம்.

நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன் என்ற பொருளில் இதைக் கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆச் செய்யும் பொதுவான அனுமதியில் இது அடங்கும்.

ஆசி வழங்குதல் என்ற பொருள் கொள்பவர்கள் வாழ்த்துகிறேன் என்ற சொல்லைக் கூற முடியாது. வாழ்த்துகிறேன் என்று ஒருவர் கூறுவதால் அவர் வாழ்ந்து விடுவார் என்று கருதுவதை ஏற்க முடியாது. அப்படி நம்ப முடியாது. நம்பக் கூடாது.

ஒரு முஸ்லிமுக்காக துஆச் செய்யலாம் என்ற பொது அனுமதியின் அடிப்படையில் பெருநாள் தினத்திலும் துஆச் செய்யலாம். இந்தப் பொருளை மனதில் கொண்டு வாழ்த்துக்கள் என்றோ வாழ்த்துகிறேன் என்றோ கூறலாம்.

ஆனால் இது பித்அத்தாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஹதீஸ்களில் நபிகளார் முன்னிலையில் வாழ்த்துக்கள் சொன்னதாக வரும் செய்தி:

صحيح البخاري رقم فتح الباري (5/ 125)

4172 – حَدَّثَنِي أَحْمَدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا} [الفتح: 1]. قَالَ: الحُدَيْبِيَةُ قَالَ أَصْحَابُهُ: هَنِيئًا مَرِيئًا، فَمَا لَنَا؟ فَأَنْزَلَ اللَّهُ: {لِيُدْخِلَ المُؤْمِنِينَ وَالمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ} [الفتح: 5] قَالَ شُعْبَةُ: فَقَدِمْتُ الكُوفَةَ، فَحَدَّثْتُ بِهَذَا كُلِّهِ عَنْ قَتَادَةَ، ثُمَّ رَجَعْتُ فَذَكَرْتُ لَهُ فَقَالَ أَمَّا: {إِنَّا فَتَحْنَا لَكَ} [الفتح: 1]. فَعَنْ أَنَسٍ وَأَمَّا هَنِيئًا مَرِيئًا، فَعَنْ عِكْرِمَةَ

4172. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நிச்சயமாக நாம் உங்களுக்கு ஒரு வெளிப்படையான வெற்றியினை அளித்துள்ளோம் என்னும் (திருக்குர்ஆன் 48:01) வசனம் ஹுதைபிய்யா (சமாதான ஒப்பந்தத்தைக் குறிக்கக் கூடியது) ஆகும் என்று கூறினேன். (அப்போது) நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்! (நபியவர்களே!) தங்களுக்கு இனிய வாழ்த்துகள். (தங்கள் பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்துவிட்டதாக அந்த வசனத்தின் தொடர்ச்சியில் கூறுகிறானேஇ அந்த வெற்றியினால்) எங்களுக்கு என்ன (பயன்) என்று கேட்டனர். அப்போது இறைவிசுவாசிகளான ஆண்களையும் பெண்களையும் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வதற்காகவே (இவ்வாறு நாம் வெற்றியளித்தோம்); அந்த சொர்க்கங்களுக்குக் கீழே நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் என்னும் (திருக்குர்ஆன் 48:05) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

நூல் : புகாரி 4172

أُولَٰئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا

அவர்கள் சகித்துக் கொண்ட காரணத்தால் அவர்களுக்கு மாளிகை வழங்கப்படும். ஸலாமுடன் வாழ்த்துக் கூறி அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 25:75

மேற்கண்ட செய்திகளின் அடிப்படையில் பிரார்த்தனை என்ற ரீதியில் வாழ்த்துக்கள் என்று சொல்வது தவறில்லை.

மர்ஹபா (புகாரி 53, 87, 7266, மற்றும் அஹ்லன் வ சஹ்லன் என்ற வாசகங்களைப் பயன்படுத்தி வாழ்த்துக்கள் சொன்னதாக பல ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

25.04.2016. 2:28 AM

Leave a Reply