ஸலாத்துன்னாரிய்யா ஓதலாமா?

ஸலாத்துன்னாரிய்யா ஓதலாமா?

தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் ஸலவாத்துன்னாரியா என்ற ஸலவாத்தை ஓதும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது 4444 தடவை இந்த ஸலவாத்தை ஓதினால் ஏழைகள் பணக்காரர்களாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இது ஓதப்பட்டு வருகிறது. இந்த ஸலவாத்தின் வாசகங்கள் பெரிதாக உள்ளதால் இதை அனைவரும் மனனம் செய்திருப்பதில்லை. மேலும் 4444 தடவை ஒருவர் இதை ஓதினால் இதற்காகப் பல நாட்களை ஒதுக்க வேண்டிவரும். இதனால் ஆலிம்களை அழைத்து அவர்களுக்கு உரிய(?) கட்டணம் கொடுத்து ஓதச் செய்யப்படுகிறது.

இது மார்க்கத்தில் உள்ளதா என்பதை நாம் அறிந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

தவறான கருத்துக்களை உள்ளடக்கியது

ஸலவாதுன்னாரியா எனப்படும் இந்த ஸலவாத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் வந்த சில அறிவீனர்களால் உண்டாக்கப்பட்டதால் இதில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கும் கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன.

இந்த ஸலவாத்துக்குப் பெயர் வைத்தவர்கள் அதில் மட்டும் உண்மையாளர்களாக உள்ளனர். நார் என்றால் நெருப்பு, நரகம் என்று பொருள். ஸலவாதுன்னாரிய்யா என்றால் நரகில் சேர்க்கும் ஸலவாத் என்பது பொருள். இதை ஓதுவதால் நரகம் தான் கிடைக்கும் என்று பொருத்தமாகப் பெயர் வைத்துள்ளனர்.

اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك

அல்லாஹும்ம ஸல்லி ஸலாத்தன் காமிலத்தன், வஸல்லிம் ஸலாமன் தாம்மன், அலா ஸய்யிதினா முஹம்மதின், அல்லதீ தன்ஹல்லு பிஹில் உகத். வதன்ஃபரிஜு பிஹில் குரப். வதுக்லா பிஹில் ஹவாயிஜ். வதுனாலு பிஹிர் ரகாயிபு. வஹுஸ்னுல் ஹவாதிம். வயுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹில் கரீம். வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி ஃபீ குல்லி லம்ஹத்தின் வ நஃபசின் பி அததி குல்லி மஃலூமின் லக்க

இது தான் ஸலவாத்துன்னாரியா என்பது.

இதன் பொருள் வருமாறு:

அல்லாஹ்வே! எங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும், அவருடைய குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் மீதும் ஒவ்வொரு கண் சிமிட்டும் மற்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து எண்ணிக்கை அளவிற்குப் பரிபூரண அருளையும் முழுமையான சாந்தியையும் பொழிவாயாக! அந்த முஹம்மத் எப்படிப்பட்டவரென்றால் அவர் மூலமாகத் தான் சிக்கல்கள் அவிழ்கின்றன. அவர் மூலம் தான் துன்பங்கள் நீங்குகின்றன. அவர் மூலம் தான் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர் மூலம் தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவும் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. அவருடைய திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது.

துன்பங்களை நீக்குபவன் யார்?

மேற்கண்ட நரகத்து ஸலவாத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் தான் சிக்கல் அவிழ்கிறது என்றும், துன்பம் நீங்குகிறது என்றும், தேவை நிறைவேறுகிறது என்றும் கூறப்படுகிறது.

உண்மையில் சிக்கல்கள், துன்பங்கள் ஆகியவற்றை நீக்குவதும், தேவைகளை நிறைவேற்றுவதும் இறைவனுக்கு மட்டுமே உரிய ஆற்றலாகும். இறந்தவர்களுக்கோ, அல்லது நல்லடியார்களுக்கோ இது போன்ற ஆற்றல் இருப்பதாகக் கூறுவது நிரந்தர நரகத்தில் சேர்க்கக் கூடிய இணை கற்பிக்கின்ற காரியமாகும்.

அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். அவனைத் தவிர இந்த ஆற்றல் வேறு யாருக்கும் அணுவின் முனையளவு கூட கிடையாது.

ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான்.

திருக்குர்ஆன் 6:64

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட தமக்கோ, மற்றவர்களுக்கோ எவ்வித உதவியும் செய்ய முடியாது என்பதைத் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:188

நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன் என (முஹம்மதே!) கூறுவீராக! நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 72:20, 21, 22

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 10:107

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களால் துன்பங்களை, சிக்கல்களை நீக்க முடியும் என்று நம்பிய தீயவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வியைப் பாருங்கள்

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து, துன்பத்தைப் போக்கி, உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!

திருக்குர்ஆன் 27:62

நபியவர்களை இறைவனுக்கு நிகராக ஆக்குகின்ற இந்த நரகத்து ஸலவாத்தை நாம் ஓதலாமா?

நாட்டங்களை நிறைவேற்றுபவன் யார்?

மேற்கண்ட நரகத்து ஸலவாத்தில் நபியவர்கள் மூலம் தான் நாட்டங்கள் நிறைவேறுகின்றன என்று வருகிறது. இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கக் கூடிய, இணை கற்பிக்கின்ற வரிகளாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எத்தனையோ நாட்டங்கள் நிறைவேறாமல் போயிருக்கின்றன. நாட்டங்களை நிறைவேற்றக் கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்குமானால் அவர்கள் முதலில் தம்முடைய நாட்டங்களை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், முனாஃபிக்குகளின் தலைவனாகிய அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் என்பவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் அது நிறைவேறாதது மட்டுமல்லாமல் அல்லாஹ், அதை மன்னிக்கவே மாட்டேன் என்று திருமறை வசனத்தையும் அருளினான்.

(முஹம்மதே!) அவர்களுக்காக பாவ மன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 9:80

நபியவர்கள் தம்முடைய சிறிய தந்தையாகிய அபூ தாலிப், ஏகத்துவக் கொள்கையை ஏற்க வேண்டும் என விரும்பினார்கள். அவர்களுடைய மரணத் தருவாயில் அவர்களிடம் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவைக் கூறுமாறு மன்றாடினார்கள். அவர்கள் கலிமாவை மொழியாமல் மரணித்த பிறகும் அல்லாஹ் தடுக்கின்ற வரை பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பேன் என்றார்கள்.

ஆனால் அவர்களின் இந்த மாபெரும் நாட்டத்தை இறைவன் நிறைவேற்றவில்லை. மாறாக, நபிக்கு நாடியதைச் செய்யும் ஆற்றல் கிடையாது என்பதை இது தொடர்பாக இறங்கிய வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 28:56

மேலும் நபியவர்கள் மக்காவில் வாழ்ந்த அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற அனைத்து காஃபிர்களும் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என பேராவல் கொண்டிருந்தார்கள். இதனைப் பின்வரும் வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்.

திருக்குர்ஆன் 26:3

நபியவர்கள் தம்மை அழித்துக் கொள்ளும் அளவிற்கு ஒன்றை விரும்பியும் அந்த நாட்டம் நிறைவேறவில்லை. நாட்டங்களை நிறைவேற்றக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். நபியவர்கள் மூலம் நாட்டங்கள் நிறைவேறுகின்றன என்று இந்த ஸலவாத்தில் வரக்கூடிய வரிகள் நிரந்தர நரகத்தைத் தரக் கூடிய வரிகளே என்பது தெளிவாகிறது.

அழகிய இறுதி முடிவை தருபவன் யார்?

நபியவர்கள் மூலம் தான் அழகிய இறுதி முடிவு நமக்குக் கிடைக்கிறது என ஸலாத்துந் நாரியாவில் வருகிறது. இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற, இணை கற்பிக்கின்ற வரிகளாகும்.

ஒருவன் மரணிக்கும் போது சுவர்க்கவாசியாக மரணிப்பதும் நரகவாசியாக மரணிப்பதும் இறைவனின் நாட்டமே!

صحيح مسلم

6939 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ عَمَّتِهِ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ دُعِىَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى جَنَازَةِ صَبِىٍّ مِنَ الأَنْصَارِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ طُوبَى لِهَذَا عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ لَمْ يَعْمَلِ السُّوءَ وَلَمْ يُدْرِكْهُ قَالَ « أَوَغَيْرَ ذَلِكَ يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ خَلَقَ لِلْجَنَّةِ أَهْلاً خَلَقَهُمْ لَهَا وَهُمْ فِى أَصْلاَبِ آبَائِهِمْ وَخَلَقَ لِلنَّارِ أَهْلاً خَلَقَهُمْ لَهَا وَهُمْ فِى أَصْلاَبِ آبَائِهِمْ ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 5175

மேலும் நபியவர்கள் மூலம் அழகிய முடிவு ஏற்படுகிறதென்றால் அவர்கள் விரும்பிய அபூ தாலிப், அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற இன்னும் பலர் முஸ்லிம்களாக மரணித்திருக்க வேண்டும். அவர்கள் ஏன் காஃபிர்களாக மரணித்தார்கள்? இதைச் சிந்தித்தாலே மேற்கண்ட வரிகளை ஓதினால் நாம் நிரந்தர நரகத்தைத் தான் சென்றடைவோம் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மழை பொழிவிப்பவன் யார்?

ஸலவாத்துன்னாரிய்யா எனும் நரகத்து ஸலவாத்தில் நபியவர்களின் திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது என்று வருகிறது. இந்த வரிகளும் இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற, நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற வரிகளாகும்.

மழையைப் பொழிவிக்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா?

திருக்குர்ஆன் 56:68, 69, 70

அவர்கள் நம்பிக்கையிழந்த பின் அவனே மழையை இறக்குகிறான். தனது அருளையும் பரவச் செய்கிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 42:28

அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைக்கின்றது. அவன் விரும்பியவாறு அதை வானில் பரவச் செய்கிறான். அதைப் பல துண்டுகளாக ஆக்குகிறான். அதற்கிடையில் மழை வெளியேறுவதைக் காண்கிறீர். தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை சுவைக்கச் செய்யும் போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

திருக்குர்ஆன் 30:48

صحيح البخاري
4777 – حدثني إسحاق، عن جرير، عن أبي حيان، عن أبي زرعة، عن أبي هريرة رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم كان يوما بارزا للناس، إذ أتاه رجل يمشي، فقال: يا رسول الله ما الإيمان؟ قال: «الإيمان أن تؤمن بالله وملائكته، وكتبه، ورسله، ولقائه، وتؤمن بالبعث الآخر» قال: يا رسول الله ما الإسلام؟ قال: «الإسلام أن تعبد الله ولا تشرك به شيئا، وتقيم الصلاة، وتؤتي الزكاة المفروضة، وتصوم رمضان»، قال: يا رسول الله ما الإحسان؟ قال: الإحسان أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه فإنه يراك، قال: يا رسول الله متى الساعة؟ قال: " ما المسئول عنها بأعلم من السائل، ولكن سأحدثك عن أشراطها: إذا ولدت المرأة ربتها، فذاك من أشراطها، وإذا كان الحفاة العراة رءوس الناس، فذاك من أشراطها، في خمس لا يعلمهن إلا الله: (إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام) ثم انصرف الرجل، فقال: «ردوا علي» فأخذوا ليردوا فلم يروا شيئا، فقال: «هذا جبريل جاء ليعلم الناس دينهم»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய முடியாது. நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கி வைக்கின்றான். இன்னும், அவன் கர்ப்பங்கல் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப் போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ் தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன். (எனும் 31:34ஆவது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.)

நூல்: புகாரி 4777

மேற்கண்ட இறை வசனங்களும், ஹதீஸ்களும் மழையைப் பொழியச் செய்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. எனவே நபியவர்களின் திருமுகத்தின் மூலமே மழை பொழிகிறது என்று நரகத்து ஸலவாத்தில் வரக்கூடிய இந்த வாசகங்களை நாம் ஓதினால் நாம் செல்லுமிடம் நரகம் தான்.

صحيح البخاري

3445 – حدثنا الحميدي، حدثنا سفيان، قال: سمعت الزهري، يقول: أخبرني عبيد الله بن عبد الله، عن ابن عباس، سمع عمر رضي الله عنه، يقول على المنبر: سمعت النبي صلى الله عليه وسلم يقول: «لا تطروني، كما أطرت النصارى ابن مريم، فإنما أنا عبده، فقولوا عبد الله، ورسوله»

கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3445

அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்லாஹ் ஒரு வடிகாலைத் தந்துள்ளான். அது தான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக் கூடிய ஸலவாத்.

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!

திருக்குர்ஆன் 33:56

மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித் தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.

صحيح البخاري

4797 – حدثني سعيد بن يحيى بن سعيد، حدثنا أبي، حدثنا مسعر، عن الحكم، عن ابن أبي ليلى، عن كعب بن عجرة رضي الله عنه، قيل: يا رسول الله، أما السلام عليك فقد عرفناه، فكيف الصلاة عليك؟ قال: " قولوا: اللهم صل على محمد، وعلى آل محمد، كما صليت على آل إبراهيم، إنك حميد مجيد ، اللهم بارك على محمد، وعلى آل محمد، كما باركت على آل إبراهيم، إنك حميد مجيد "

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)

நூல்: புகாரி 4797

எங்கள் தொழுகையில் நாங்கள் எவ்வாறு ஸலவாத் சொல்வது? என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்ததாக முஸ்னத் அஹ்மதில் ஹதீஸ் (16455) இடம் பெற்றுள்ளது.

தொழுகை அல்லாத சமயங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ ஸல்லல்லாஹு அலா முஹம்மது வ ஸல்லம் என்றோ கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

(பார்க்க: நஸயீ 2728)

صحيح مسلم ـ

875 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِىُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ حَيْوَةَ وَسَعِيدِ بْنِ أَبِى أَيُّوبَ وَغَيْرِهِمَا عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَىَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِىَ الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِى الْجَنَّةِ لاَ تَنْبَغِى إِلاَّ لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِىَ الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ ».

முஅத்தினின் பாங்கை நீங்கள் செவியுறும் போது, அவர் சொல்வது போன்றே நீங்களும் சொல்லுங்கள். பிறகு நீங்கள் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில் நிச்சயமாக என் மீது யார் ஸலவாத் சொல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து தடவை அருள் செய்கின்றான். பிறகு எனக்காக வஸீலாவைக் கேளுங்கள். நிச்சயமாக அது சுவனத்தில் உள்ள தகுதியாகும் (அல்லது வீடாகும்). அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கே தவிர வேறு யாருக்கும் அது கிடைக்காது. (அதை அடையும்) அடியாராக நான் ஆக வேண்டும் என்று ஆதரவு வைக்கின்றேன். யார் எனக்காக அந்த வஸீலா வேண்டி பிரார்த்திக்கின்றாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை ஏற்பட்டு விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ்(ரலி)

நூல்: முஸ்லிம்

பாங்கு சொல்லப்படும் போது அதற்குப் பதில் கூறி, அதன் இறுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும், அவர்களுக்காக வஸீலா வேண்டிப் பிரார்த்தனையும் செய்பவருக்கு மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் உறுதியாகி விட்டது என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலவாத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் ஸலாத்துந் நாரிய்யாவை இனியும் ஓதலாமா?

Leave a Reply