138. வேதம் கொடுக்கப்பட்ட பெண்ணை மணப்பது

138. வேதம் கொடுக்கப்பட்ட பெண்ணை மணப்பது

வ்வசனம் (திருக்குர்ஆன் 5:5) வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை மணக்கலாம் எனக் கூறுகிறது.

இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.


பொதுவாக யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப்பட்டன. இதை 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6 ஆகிய வசனங்களில் காணலாம்.

இஸ்ரவேலர்களுக்குத்தான் நான் அனுப்பப்பட்டேன் என்று ஈஸா நபி கூறியதாக 3:49, 5:72, 43:59, 61:6 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இஸ்ரவேலர் அல்லாதவர்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ மாறியிருந்தால் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் அனுப்பப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இஸ்ரவேலர் அல்லாத யூத கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக்காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேல் சமுதாயப் பெண்களை மணக்கலாம் என்பதே இதன் பொருளாகும். இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவப் பெண்களை மணக்க அனுமதி இல்லை.

மேலும் விபரத்திற்கு 27, 137 ஆகிய குறிப்புகளையும் காண்க!

Leave a Reply