56. ஹஜ்ஜின் மூன்று வகை

56. ஹஜ்ஜின் மூன்று வகை

வ்வசனம் (2:196) தமத்துவ் என்ற வகையில் ஹஜ் செய்பவர் பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. தமத்துவ் வகை ஹஜ் என்றால் என்ன? அது அல்லாத வேறு வகை ஹஜ் உண்டா என்ற விபரம் இவ்வசனத்திலோ, திருக்குர்ஆனின் வேறு வசனங்களிலோ கூறப்படவில்லை. ஆனாலும் ஹதீஸ்களில் இதற்கான விளக்கம் கிடைக்கிறது. திருக்குர்ஆனின் சில வசனங்களின் சரியான பொருளை அறிந்திட ஹதீஸ் எனும் நபிவழி அவசியம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


அதுகுறித்த விபரம் இதுதான்:

1. ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுவதாக முடிவு செய்து அதை நிறைவேற்றுதல்.

2. ஹஜ்ஜுடன் உம்ரா எனும் கடமையையும் சேர்த்து ஒரே இஹ்ராமில் நிறைவேற்றுதல் மற்றொரு வகை.

3. முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றியவுடன் இஹ்ராமில் இருந்து விடுபட்ட நிலையில் மக்காவில் தங்கியிருந்து, ஹஜ்ஜுடைய நேரம் வந்ததும் மறுபடியும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுதல்.

இந்த மூன்றாவது வகையே தமத்துவ் எனப்படும்.

உம்ராவுக்கும், ஹஜ்ஜுக்கும் இடைப்பட்ட காலத்தில் உள்ளூர்வாசிகள் செய்யும் எல்லாக் காரியத்தையும் மூன்றாவது வகையான ஹஜ்ஜை நிறைவேற்றுபவர் செய்யலாம். இதன் காரணமாக இந்த வகை ஹஜ் செய்பவர் ஒரு பிராணியைப் பலியிட வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது.

தமத்துவ் என்ற ஹஜ் பற்றி திருக்குர்ஆன் பொதுவாகக் கூறினாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை விளக்கி விட்டார்கள்.

திருக்குர்ஆனைச் சரியாகப் புரிந்து கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியம் என்பதை இதிலிருந்து அறியலாம்.

திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய

18, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!

Leave a Reply