74. விவாகரத்துக்குப் பின் ஜீவனாம்சம் உண்டா?

74. விவாகரத்துக்குப் பின் ஜீவனாம்சம் உண்டா?

வ்வசனங்களில் (2:236, 2:241, 33:49, 65:6,7) விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு அழகிய முறையில் வாழ்க்கை வசதிகள் அளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இவ்வசனத்திற்கு அதிகமான அறிஞர்கள் தவறான விளக்கம் கொடுத்துள்ளதை நாம் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும்.


விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும். இது இத்தா எனப்படுகிறது. இந்த மூன்று மாத காலத்திற்கு உரிய செலவுத் தொகையைக் கொடுப்பதைத்தான் இவ்வசனம் கூறுகிறது என்று அந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் இவ்வாறு விளக்கம் கொடுப்பதற்கு திருக்குர்ஆன் 65:6 வசனத்தை சான்றாகக் கொள்கின்றனர். இவ்வசனத்தில் விவாகரத்து செய்யப்படும்போது கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை செலவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. எனவே இத்தா காலத்துக்கு மட்டும் தான் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இவர்களின் இந்த வாதம் முற்றிலும் தவறாகும். கணவனது கருவை அவள் சுமந்திருப்பதால் அவளுக்கு மேலதிகமாக அவன் செய்ய வேண்டிய செலவைத்தான் 65:6 வசனம் கூறுகிறது.

65:6 வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைக் கவனித்திருந்தால் இவ்வாறு விளக்கம் சொல்லியிருக்க மாட்டார்கள்.

இத்தா காலத்திற்கான செலவுத் தொகையைத் தான் இவ்வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான் என்றால் இத்தா காலத்தில் என்று சொல்லியிருக்கலாம். இறைவன் அவ்வாறு கூறாமல் அழகிய முறையில் வழங்க வேண்டும் எனவும், நியாயமான முறையில் வழங்க வேண்டும் எனவும் கூறுகிறான்.

ஒரு பெண்ணுடன் வாழ்ந்து, அவளது இளமையை அனுபவித்து விட்டு மூன்று மாதம் செலவுக்குப் பணம் கொடுப்பது அழகிய முறையாகவோ, நியாயமான முறையாகவோ இருக்காது.

தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இப்படி நேர்ந்தால் எது நியாயமானதாகப் படுகிறதோ அது தான் நியாயமானது.

திருக்குர்ஆன் 2:236 வசனத்தில் வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்பவும், ஏழை தனது வசதிக்கேற்பவும் பாதுகாப்புத் தொகை கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

விவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவனாக இருந்தால் அவனது வசதிக்கேற்ப கோடிகளைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பெண் வீட்டாரிடமிருந்து கணவன் வீட்டார் வாங்கிய வரதட்சணையை மட்டும் தான் விவாகரத்துக்குப் பின் ஜமாஅத்தினர் பெற்றுத் தருகிறார்கள். விவாகரத்து செய்யாமல் அவர்கள் இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் வரதட்சணையைக் திருப்பிக் கொடுப்பது அவசியமாகும்.

எனவே வரதட்சணையைத் திரும்பப் பெற்றுக் கொடுப்பதற்கும், விவாகரத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. விவாகரத்துச் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு போதுமான ஜீவனாம்சம் பெற்றுக் கொடுப்பது ஜமாஅத்துகள் மீது கடமையாகும்.

முஸ்லிம் சமுதாயம் இந்த இறைக்கட்டளையை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் தான் பலவிதமான விமர்சனங்களைச் சந்திக்கின்றது. இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்துக்கு இது பயன்படுத்தப்படுகிறது. மாதந்தோறும் வழங்கும் போலி ஜீவனாம்சத்தை முஸ்லிம்கள் மீதும் திணிக்க முயற்சிக்கப்படுகிறது.

எனவே ஜமாஅத்தினர் இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லையும் கவனித்து அல்லாஹ்வுக்கு அஞ்சி பெண்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.

நமது நாட்டில் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தை முஸ்லிம்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுப்பப்படுகின்றது.

முஸ்லிம்களுக்கு உள்ள தனி ஷரீஅத் சட்டத்தை நீக்கிவிட்டு பொதுச் சட்டத்தின் கீழ் அவர்களையும் கொண்டுவர வேண்டும் என்ற பிரச்சாரமும் இதை ஒட்டி செய்யப்படுகின்றது.

விவாகரத்துக்குப் பின் மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை. பெண்களுக்கு அநீதி இழைப்பதற்காக அல்ல. மாறாக அவர்களுக்கு நன்மை செய்யவும், இதை விடச் சிறந்த ஏற்பாட்டைச் செய்யவுமே இதை நிராகரிக்கின்றது.

மாதாமாதம் ஜீவனாம்சம் பெறுவதற்காக அதில் பாதியளவு வழக்கிற்குச் செலவிடப்படுகிறது. இச்சுமையைப் பெண் சுமக்கிறாள்.

கள்ளக் கணக்குக் காட்டி ஜீவனாம்சம் கொடுப்பதிலிருந்து பெரும்பாலான கணவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். அல்லது அற்பமான தொகையைக் கொடுத்து ஏமாற்றுகின்றனர்.

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ள நாடுகளில் அப்பெண் மறுமணம் செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் ஜீவனாம்சம் கொடுக்கப்படுகின்றது. மறுமணம் செய்து விட்டால் முந்தைய கணவன் ஜீவனாம்சம் கொடுக்கத் தேவையில்லை என்று இந்த நாடுகளிலுள்ள சட்டம் கூறுகின்றது.

எனவே, மாதாந்தோறும் முறையாக ஜீவனாம்சம் கிடைத்து வந்தால் அந்தப் பெண் மறுமணம் செய்ய மாட்டாள். ஏனெனில் மறுமணம் செய்தால் ஜீவனாம்சம் பெறமுடியாது. ஜீவனாம்சத்தின் மூலம் பொருளாதாரப் பிரச்சினை ஓரளவு தீர்ந்து விட்டாலும், அவளது உணர்வுகளுக்கு இதில் தீர்வு ஏதுமில்லை. சிலர் தவறான நடத்தையில் ஈடுபட இது தூண்டும்.

இந்தக் காரணத்துக்காகத் தான் போலி ஜீவனாம்சத்தை முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர்.

விவாகரத்து செய்யப்பட்டால் அந்த நேரத்தில் கணவனின் வசதிக்குத் தக்கவாறு ஒரே நேரத்தில் போதுமான இழப்பீட்டைப் பெற்றுக் கொடுப்பதுதான் உண்மையான ஜீவனாம்சமாகும்.

விவாகரத்து தொடர்பாக மேலும் அறிய 66, 69, 70, 386, 402, 424 ஆகிய குறிப்புகளைக் காண்க!

Leave a Reply