77. அலங்காரப் பெட்டியும் புனிதத் தன்மையும்

77. அலங்காரப் பெட்டியும் புனிதத் தன்மையும்

வ்வசனத்தில் (2:248) இறைவன் புறத்திலிருந்து ஒரு அலங்காரப் பெட்டி இறங்கியதாகவும், அதில் நபிமார்கள் பயன்படுத்திய பொருட்கள் இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இவ்வசனத்தைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாத சிலர், மகான்கள் பயன்படுத்திய பொருட்களைப் பாதுகாக்கலாம்; அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் மனநிறைவு ஏற்படும் என்று நினைக்கின்றனர்.


சிலரை மகான்கள் என்று இவர்களாக எவ்விதச் சான்றுமில்லாமல் முடிவு செய்து கொண்டு அவர்கள் பயன்படுத்திய செருப்பு, அவர்கள் உட்கார்ந்த இடம் என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி வருகின்றனர்.

(ஒருவரை மகான் என்று நாம் முடிவு செய்ய இயலுமா என்பதை அறிய 215வது குறிப்பை வாசிக்கவும்.)

கவனமாகச் சிந்தித்தால் இவ்வசனம் அவர்களுக்கு எதிரான கருத்தையே தருகிறது. மூஸா நபி, ஹாரூன் நபி ஆகியோரின் குடும்பத்தார் விட்டுச் சென்றதை அவர்களின் சமுதாயத்து நல்லடியார்கள் பாதுகாத்து வைக்கவில்லை. அதனால்தான் வானத்திலிருந்து வானவர்கள் அதைக் கொண்டு வந்தனர். நபிமார்கள் விட்டுச் சென்ற பொருட்களைப் பாதுகாத்து வைப்பது தேவையற்றது என்பது தான் இதிலிருந்து தெரிகிறது.

தாலூத்தை இறைவன் மன்னராக நியமித்தபோது தம்மை விட தகுதிக் குறைவானவருக்கு எப்படி அதிகாரம் கிடைக்கலாம் என அம்மக்கள் ஆட்சேபித்தனர்; சந்தேகப்பட்டனர். தாலூத்தை இறைவன் தான் நியமித்தான் என்பதற்குச் சான்றாகவே வானிலிருந்து அலங்காரப் பெட்டி வந்தது. சான்றாக அது வந்ததால் மனநிறைவுடன் அவரது தலைமையை ஏற்றனர். படை திரண்டு சென்றனர்.

அந்தப் பெட்டியைப் புனிதப்படுத்த வேண்டும் என்பதற்காக அதை இறைவன் இறக்கவில்லை. இந்தப் பெட்டியைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றும் இறைவன் கட்டளையிடவில்லை.

எப்பொருளையும் புனிதப்படுத்தும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளது. ஸபா, மர்வா போன்றவற்றை அவன் புனிதப்படுத்தியதால், உஹது மலையை நாம் புனிதமாக்கி விட முடியாது.

எனவே எதையாவது புனிதப் பொருள் என யாரேனும் கூறுவார்களானால் அதற்கான திருக்குர்ஆன், நபிமொழிச் சான்றுகளை அவர்கள் முன்வைக்க வேண்டும்.

Leave a Reply