அத்தியாயம் : 37 அஸ் ஸாஃப்பாத்

அத்தியாயம் : 37

அஸ் ஸாஃப்பாத் – அணி வகுப்போர்

மொத்த வசனங்கள் : 182

ந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஸ் ஸாஃப்பாத் என்ற சொல் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. அணி அணியாய் நிற்போர் மீது சத்தியமாக! 379

2. கடுமையாக விரட்டுவோர் மீது சத்தியமாக! 379

3. போதனையைக் கூறுவோர் மீது சத்தியமாக! 379

4. உங்கள் இறைவன் ஒருவனே.

5. (அவன்) வானங்கள்,507 பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன்.335

6. முதல் வானத்தை507 நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.

7. கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் பாதுகாப்பாக (அவற்றை ஆக்கினோம்).307

8, 9, 10. (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு சொற்களை) ஒட்டுக் கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காக ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவர்கள் மீது எறியப்படும் பிரகாசமான தீப்பந்தம் அவர்களை விரட்டும்.307அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.26

11. இவர்கள் வலிமையான படைப்பா? அல்லது நாம் படைத்த(மற்ற)வைகளா? என்பதை இவர்களிடம் கேட்பீராக! இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்503&506 நாம் படைத்தோம்.368

12. உண்மையில் (இறைவனின் ஆற்றலை எண்ணி) நீர் ஆச்சரியப்படுகிறீர். இவர்களோ கேலி செய்கின்றனர்.

13. இவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் படிப்பினை பெறுவதில்லை.

14. சான்றை இவர்கள் கண்டபோதும் கேலி செய்கின்றனர்.

15. "இது தெளிவான சூனியம் தவிர வேறில்லை''285 என்று இவர்கள் கூறுகின்றனர்.357

16, 17. "நாங்கள் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது நாங்களும், முந்தைய எங்கள் முன்னோர்களும் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' (என்று கேட்கின்றனர்).26

18. ஆம்! நீங்கள் சிறுமைப்பட்டவர்கள்'' எனக் கூறுவீராக!

19. அது ஒரே ஒரு பெரும் சப்தம் தான். உடனே அவர்கள் காண்பார்கள்.

20. "எங்களுக்குக் கேடு தான்; இது தீர்ப்பு நாள்1'' என அப்போது கூறுவார்கள்.

21. "நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள்1 இதுவே'' (எனக் கூறப்படும்.)

22, 23. அநீதி இழைத்தோரையும், அவர்களுக்குத் துணை நின்றவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி வந்ததையும் ஒன்று திரட்டுங்கள்! அவர்களுக்கு நரகத்தின் பாதையைக் காட்டுங்கள்!26

24. "அவர்கள் விசாரிக்கப்படுபவர்கள்; அவர்களைப் பிடித்து நிறுத்துங்கள்!'' (என்று வானவர்களுக்குக் கூறப்படும்.)

25. "உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள்?'' (என்று கேட்கப்படும்.)

26. அவ்வாறு நடக்காது. இன்று1 அவர்கள் சரணடைந்தவர்கள்.

27. அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.

28. "நீங்களே எங்கள் மீது ஆதிக்கம் செய்வோராக இருந்தீர்கள்'' என்று (சிலர்) கூறுவார்கள்.

29. "இல்லை. நீங்கள் தான் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை'' என்று (மற்றும் சிலர்) பதிலளிப்பார்கள்.

30. உங்கள் மீது எங்களுக்கு எந்த அதிகாரமும் இருந்ததில்லை. மாறாக நீங்களே வழிகெட்ட கூட்டமாக இருந்தீர்கள்.

31. எனவே எங்கள் இறைவனின் கட்டளை எங்களுக்கு எதிராக உறுதியாகி விட்டது. (அதன் பலனை) நாங்கள் அனுபவிக்கிறோம்.

32. "நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நாங்களும் வழிகெட்டவர்களாக இருந்தோம்'' (என்றும் கூறுவார்கள்)

33. அந்நாளில் அவர்கள் வேதனையில் பங்காளிகளாக இருப்பார்கள்.

34. குற்றவாளிகளை இப்படித்தான் நாம் நடத்துவோம்.

35. "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமையடிப்போராக அவர்கள் இருந்தனர்.

36. "பைத்தியக்காரக்468 கவிஞருக்காக நாங்கள் எங்கள் கடவுள்களை விட்டு விடுவோமா?'' என்று கேட்கின்றனர்.

37. அவ்வாறில்லை! அவர் உண்மையையே கொண்டு வந்துள்ளார். தூதர்களை உண்மைப்படுத்துகிறார்.

38. நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிப்பவர்கள்.

39. நீங்கள் செய்து கொண்டிருந்ததற்கே தவிர (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.

40. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர.

41, 42, 43. இனிமையான சொர்க்கச் சோலைகளில் அவர்களுக்கு அறியப்பட்ட உணவும், கனிகளும் உண்டு. அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்.26

44. கட்டில்களில் ஒருவரையொருவர் எதிர் நோக்குவார்கள்.

45. மது ஊற்றிலிருந்து (நிரப்பப்பட்ட) குவளைகள் அவர்களைச் சுற்றி வரும்.

46. அது வெண்மையானதும், அருந்துவோருக்கு இன்பம் அளிப்பதுமாகும்.

47. அதில் எந்தக் கேடும் இல்லை. அவர்கள் மதி மயக்கப்படவும் மாட்டார்கள்.

48, 49. அவர்களுடன் தாழ்ந்த பார்வையுடைய கண்ணழகிகள்8 மறைத்து வைக்கப்பட்ட முட்டைகளைப் போல் இருப்பார்கள்.26

50. அவர்களில் ஒருவர் மற்றவரை விசாரித்துக் கொள்வார்கள்.

51, 52, 53. "எனக்கு ஒரு நண்பன் இருந்தான். நீயும் (மறுமையை) நம்புவோரில் ஒருவனா? நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது நாம் கூலி கொடுக்கப்படுவோமா?'' என்று (என்னிடம் கேட்டான்) என அவர்களில் ஒருவர் கூறுவார்.26

54. நீங்கள் (அவனை) எட்டிப் பார்க்கிறீர்களா என்று (இறைவன்) கேட்பான்.

55. அவர் எட்டிப் பார்க்கும்போது அவனை நரகின் மத்தியில் காண்பார்.

56. "அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னைக் குழியில் தள்ள முயன்றாய்'' என்று அவர் (நரகவாசியிடம்) கூறுவார்.

57. எனது இறைவனின் அருட்கொடை இல்லாதிருந்தால் (நரகத்திற்கு) கொண்டு வரப்பட்டோரில் நானும் ஆகியிருப்பேன்.

58, 59. நமது முதல் மரணத்தைத் தவிர, நாம் மரணிப்போர் இல்லையோ? நாம் தண்டிக்கப்படுவோரும் இல்லையோ? (என்றும் அவனிடம் கேட்பார்.)26

60. இதுவே மகத்தான வெற்றி.

61. செயல்படுவோர் இது போன்றதற்காகவே செயல்படட்டும்.

62. இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா?

63. அதை அநீதி இழைத்தோருக்குச் சோதனையாக நாம் ஆக்கினோம்.

64. அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம்.

65. அதனுடைய பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றது.

66. அவர்கள் அதிலிருந்து சாப்பிடுவர். அதிலிருந்து வயிறுகளை நிரப்புவர்.

67. கொதிக்க வைக்கப்பட்ட பானமும் இதற்கு மேல் அவர்களுக்கு உண்டு.

68. மேலும் அவர்கள் மீளுமிடம் நரகமே.

69. அவர்கள் தமது முன்னோர்களை வழிகெட்டவர்களாகவே கண்டனர்.

70. அவர்களின் அடிச்சுவடுகளிலேயே இவர்களும் இழுக்கப்படுகின்றனர்.

71. முன்னோர்களில் அதிகமானோர் இவர்களுக்கு முன் வழிகெட்டிருந்தனர்.

72. அவர்களிடம் எச்சரிப்போரை அனுப்பினோம்.

73, 74. "தேர்வு செய்யப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர எச்சரிக்கப்பட்டோரின் முடிவு எவ்வாறு அமைந்தது'' என்று கவனிப்பீராக!26

75. நூஹ் நம்மிடம் பிரார்த்தித்தார். நாம் ஏற்றுக் கொள்வோரில் சிறந்தவராவோம்.

76. அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.

77. அவரது சந்ததிகளையே எஞ்சியோராக ஆக்கினோம்.

78. பின் வருவோரிடம் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

79. அகிலத்தாரில் நூஹ் மீது ஸலாம்159 உண்டாகும்!

80. நல்லோருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.

81. அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியாராக இருந்தார்.

82. பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.

83. அவரது வழித் தோன்றலில் உள்ளவரே இப்ராஹீம்.

84. அவர் தமது இறைவனிடம் தூய உள்ளத்துடன் வந்ததை நினைவூட்டுவீராக!

85. "எதை வணங்குகிறீர்கள்?'' என்று தமது தந்தையிடமும், தமது சமூகத்தாரிடமும் கூறியதை நினைவூட்டுவீராக!

86. அல்லாஹ்வையன்றி கற்பனை செய்யப்பட்ட கடவுள்களையா நாடுகிறீர்கள்?

87. அகிலத்தின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன? (என்று கேட்டார்.)

88. பின்னர் நட்சத்திரங்களைக் கவனமாகப் பார்த்தார்.

89. "நான் நோயாளி'' எனக் கூறினார்.336

90. அவரை விட்டு விட்டு அவர்கள் சென்றனர்.

91, 92. அவர்களின் கடவுள்களிடம் சென்று "சாப்பிட மாட்டீர்களா? ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்? உங்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்.26

93. பின்னர் அவற்றிடம் (நெருங்கிச்) சென்று பலமாக அடித்தார். 473

94. அவர்கள் அவரை நோக்கி விரைந்து வந்தனர்.

95, 96. நீங்கள் செதுக்கிக் கொண்டதை வணங்குகிறீர்களா? அல்லாஹ்வே உங்களையும், நீங்கள் செய்தவற்றையும் படைத்தான் என்றார்.26

97. இவருக்காக ஒரு கட்டடத்தைக் கட்டி இவரை நெருப்பில் போடுங்கள்! என்று அவர்கள் கூறினர்.

98. அவருக்கு எதிராகச் சதி செய்ய நினைத்தனர். அவர்களைத் தாழ்ந்தோராக்கி விட்டோம்.

99. "நான் என் இறைவனிடம் செல்கிறேன். அவன் எனக்கு வழிகாட்டுவான்'' என்றார்.

100. என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)

101. அவருக்கு சகிப்புத் தன்மை மிக்க ஆண் குழந்தை (இஸ்மாயீல்) பற்றி நற்செய்தி கூறினோம்.

102. அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்தபோது "என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல்455 கனவில்122 கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று (இப்ராஹீம்) கேட்டார். "என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார்.

103, 104, 105. இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்தியபோது, "இப்ராஹீமே! அக்கனவை122 நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம்.26

106. இது தான் மகத்தான சோதனை.

107. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.

108. பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

109. இப்ராஹீமின் மீது ஸலாம்159 உண்டாகும்!

110. நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

111. அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.

112. நபியும், நல்லவருமான இஸ்ஹாக்கைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறினோம்.

113. அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் பாக்கியம் செய்தோம். அவ்விருவரின் வழித்தோன்றல்களில் நல்லோரும் உள்ளனர். தெளிவாக தமக்கே தீங்கிழைத்தோரும் உள்ளனர்.

114. மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் அருள் புரிந்தோம்.

115. அவ்விருவரையும், அவர்களது சமூகத்தாரையும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.

116. அவர்களுக்கு உதவினோம். எனவே அவர்களே வெற்றி பெற்றனர்.

117. அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை வழங்கினோம்.

118. அவ்விருவருக்கும் நேரான வழியைக் காட்டினோம்.

119. பின்வருவோரில் அவ்விருவரின் புகழை நிலைக்கச் செய்தோம்.

120. மூஸாவின் மீதும், ஹாரூன் மீதும் ஸலாம்159 உண்டாகும்!

121. நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்.

122. அவ்விருவரும் நம்பிக்கை கொண்ட நமது அடியார்கள்.

123. இல்யாஸும் தூதர்களில் ஒருவர்.

124, 125, 126, 127. "அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு 'பஅல்' எனும் சிலையைப் பிரார்த்திக்கிறீர்களா? என்று தமது சமூகத்தாரிடம் அவர் கூறியபோது அவரை அவர்கள் பொய்யரெனக் கருதினர். அவர்கள் (நம்மிடம்) கொண்டு வரப்படுவார்கள்.26

128. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர.

129. பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

130. இல்யாஸீன் மீது ஸலாம்159 உண்டாகும்!

131. நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.

132. அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.

133. லூத்தும் தூதர்களில் ஒருவர்.

134, 135. அவரையும், (அழிவோருடன்) தங்கி விட்ட கிழவியைத் தவிர, அவரது குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றியதை நினைவூட்டுவீராக!26

136. பின்னர் மற்றவர்களை அடியோடு அழித்தோம்.

137, 138. காலை நேரத்திலும், இரவிலும் அவர்களைக் கடந்து செல்கிறீர்கள். விளங்க மாட்டீர்களா?26

139. யூனுஸ் தூதர்களில் ஒருவர்.

140, 141. நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடியபோது, அவர்கள் (கப்பலில் இருந்து யாரை வெளியேற்றுவது என்று) சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார்.26

142. இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.395

143, 144. அவர் (நம்மை) துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.26

145. அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்.

146. அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம்.

147. அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக452 அனுப்பினோம்.

148. அவர்கள் நம்பிக்கை கொண்டனர். குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு வசதிகளை அளித்தோம்.

149. "உமது இறைவனுக்குப் பெண் குழந்தைகள்! இவர்களுக்கு ஆண் குழந்தைகளா?'' என்று இவர்களிடம் கேட்பீராக!

150. வானவர்களை நாம் பெண்களாகப் படைக்கும்போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?

151, 152. கவனத்தில் கொள்க! அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் என்று அவர்கள் இட்டுக்கட்டியே கூறுகின்றனர். அவர்கள் பொய் கூறுபவர்கள்.26

153. ஆண் மக்களை விட அவன் பெண் மக்களைத் தேர்வு செய்து விட்டானா?

154. உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?

155. சிந்திக்க மாட்டீர்களா?

156. அல்லது உங்களுக்குத் தெளிவான சான்று உள்ளதா?

157. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் வேதத்தைக் கொண்டு வாருங்கள்!

158. ஜின்களுக்கும், அவனுக்குமிடையே வம்சாவளி உறவை அவர்கள் கற்பனை செய்து விட்டனர். தாம் (இறைவன் முன்) நிறுத்தப்படுவோம் என்பதை ஜின்கள் அறிந்து வைத்துள்ளன.

159. அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.10

160. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர.

161, 162, 163. நீங்களும், நீங்கள் வணங்குபவைகளும் நரகத்தில் எரியவிருப்பவனைத் தவிர (மற்றவர்களை) வழிகெடுக்க முடியாது.26

164, 165, 166. எங்களில் யாராக இருந்தாலும் அவருக்கு குறிப்பிட்ட இடம் உண்டு. நாங்கள் அணிவகுத்து நிற்பவர்கள். நாங்கள் துதிப்பவர்கள்.279 (என்று வானவர்கள் கூறுவார்கள்)26

167, 168 169. முன்னோர் வழியாக எங்களுக்கு அறிவுரை கிடைத்திருக்குமானால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களாக ஆகியிருப்போம் என்று அவர்கள் (இணைகற்பிப்போர்) கூறிக் கொண்டு இருந்தார்கள்.26

170. இப்போது அதை மறுக்கின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள்.

171. நமது அடியார்களான தூதர்களுக்கு நமது கட்டளை முந்தி விட்டது.

172. அவர்களே உதவி செய்யப்படுவார்கள்.

173. நமது படையினரே வெல்பவர்கள்.

174. குறிப்பிட்ட காலம் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக!

175. அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பீராக! அவர்களும் பின்னர் பார்ப்பார்கள்.

176. நம்முடைய வேதனையையா அவசரமாகத் தேடுகின்றனர்?

177. அது அவர்களின் முற்றத்தில் இறங்கி விட்டால் எச்சரிக்கப்பட்டோரின் காலைப் பொழுது கெட்டதாக ஆகி விடும்.

178. குறிப்பிட்ட நேரம் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக!

179. பார்த்துக் கொண்டிருப்பீராக! அவர்களும் பின்னர் பார்ப்பார்கள்.

180. கண்ணியத்தின் அதிபதியாகிய உமது இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன்.10

181. தூதர்கள் மீது ஸலாம்159 உண்டாகும்!

182. அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

 

Leave a Reply