அத்தியாயம் : 45 அல் ஜாஸியா

அத்தியாயம் : 45

அல் ஜாஸியா – மண்டியிட்டோர்

மொத்த வசனங்கள் : 37

ந்த அத்தியாயத்தின் 28வது வசனத்தில் ஒவ்வொரு சமுதாயமும் மண்டியிட்டவர்களாக இறைவன் முன் நிறுத்தப்படுவதைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. ஹா, மீம்.2

2. (இது,) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதம்.

3. நம்பிக்கை கொள்வோருக்கு வானங்களிலும்,507 பூமியிலும் பல சான்றுகள் உள்ளன.

4. உங்களைப் படைத்திருப்பதிலும், ஏனைய உயிரினத்தைப் பரவச் செய்திருப்பதிலும் உறுதியாக நம்பும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.

5. இரவு பகல் மாறிமாறி வருவதிலும், வானிலிருந்து507 அல்லாஹ் (மழைச்) செல்வத்தை இறக்கியதிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் (அதற்கு) உயிரூட்டுவதிலும், காற்றுகளைத் திருப்பி விடுவதிலும் விளங்கும் சமுதாயத்துக்குப் பல சான்றுகள் உள்ளன.

6. (முஹம்மதே!) இவை அல்லாஹ்வின் வசனங்கள். இதை உண்மையுடன் உமக்குக் கூறுகிறோம். அல்லாஹ்வுக்கும், அவனது வசனங்களுக்கும் பிறகு வேறு எந்தச் செய்தியைத்தான் அவர்கள் நம்புவார்கள்?

7. இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவிக்கும் கேடு தான்.

8. தன் மீது கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களைச் செவியுறுகிறான். பின்னர் அதைக் கேட்காதவனைப் போல் அகந்தை கொண்டவனாகப் பிடிவாதம் பிடிக்கிறான். துன்புறுத்தும் வேதனையை அவனுக்கு எச்சரிப்பீராக!

9. நமது வசனங்களில் எதையேனும் அவன் அறிந்தால் அதைக் கேலியாக எடுத்துக் கொள்கிறான். அவர்களுக்கே இழிவு தரும் வேதனை உள்ளது.

10. அவர்களுக்குப் பின்னே நரகம் உள்ளது. அவர்கள் செய்தவையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் உருவாக்கிக் கொண்ட பாதுகாவலர்களும் அவர்களுக்குச் சிறிதும் உதவ மாட்டார்கள். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.

11. இதுவே நேர்வழி. தமது இறைவனின் வசனங்களை மறுத்தோருக்குக் கடும் துன்புறுத்தும் வேதனை உண்டு.

12. கப்பல்கள் அவனது கட்டளைப்படி செல்வதற்காகவும், நீங்கள் அவனது அருளைத் தேடவும், நன்றி செலுத்திடவும் கடலை அல்லாஹ்வே உங்களுக்குப் பயன்படச் செய்தான்.

13. வானங்களில்507 உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தையும் அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

14. அல்லாஹ்வின் வேதனைகளை நம்பாதோரை மன்னித்து விடுமாறு நம்பிக்கை கொண்டோருக்குக் கூறுவீராக! ஏனெனில் சமுதாயத்தினர் செய்து கொண்டிருந்ததற்கு அவன் கூலி கொடுக்க இருக்கிறான்.

15. யாரேனும் நல்லறம் செய்தால் அது அவருக்கே நல்லது. யாரேனும் தீமை செய்தால் அது அவருக்கே எதிரானது. பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

16. இஸ்ராயீலின் மக்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும்,164 நபி எனும் தகுதியையும் அளித்தோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். அகிலத்தாரை விட அவர்களைச் சிறப்பித்திருந்தோம்.16

17. இம்மார்க்கம் பற்றி பல சான்றுகளையும் அவர்களுக்கு வழங்கினோம். அவர்களுக்கு அறிவு வந்த பின்னரே அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமை காரணமாக முரண்பட்டனர். உமது இறைவன் கியாமத் நாளில்1 அவர்கள் முரண்பட்டதில் தீர்ப்பளிப்பான்.

18. (முஹம்மதே!) பின்னர் இம்மார்க்கத்தில் உம்மை ஒரு வழிமுறையில் அமைத்தோம். எனவே அதைப் பின்பற்றுவீராக! அறியாதோரின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்!

19. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் சிறிதும் உம்மைக் காப்பாற்ற மாட்டார்கள். அநீதி இழைத்தோர் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். (தன்னை) அஞ்சியோருக்கு அல்லாஹ் பொறுப்பாளன்.

20. இவை மனிதர்களுக்குத் தெளிவான சான்றுகள். உறுதியாக நம்பும் சமுதாயத்திற்கு நேர்வழியும், அருளுமாகும்.

21. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைப் போல் இவர்களையும் ஆக்குவோம் என்று குற்றம் புரிந்தோர் நினைக்கிறார்களா? இவர்கள் வாழ்வதும், மரணிப்பதும் சமமானதே. இவர்கள் அளிக்கும் தீர்ப்பு மிகவும் கெட்டது.

22. வானங்களையும்,507 பூமியையும் தக்க காரணத்துடனே அல்லாஹ் படைத்தான். ஒவ்வொருவரும், தாம் செய்ததற்குக் கூலி கொடுக்கப்படுவார்கள்.265 அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

23. தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழிகெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழிகாட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

24. "நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு இல்லை. வாழ்கிறோம்; மரணிக்கிறோம்; காலத்தைத் தவிர வேறு எதுவும் எங்களை அழிப்பதில்லை'' எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு இது பற்றி எந்த அறிவும் இல்லை. அவர்கள் ஊகம் செய்வோர் தவிர வேறில்லை.

25. நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் முன்னோர்களைக் கொண்டு வாருங்கள்'' என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களது சான்றாக இருப்பதில்லை.

26. "அல்லாஹ்வே உங்களை வாழச் செய்கிறான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்கிறான். பின்னர் சந்தேகம் சிறிதும் இல்லாத கியாமத் நாளில்1 உங்களை ஒன்று சேர்ப்பான்'' என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

27. வானங்கள்507 மற்றும் பூமியின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. யுகமுடிவு1 ஏற்படும் நாள்! அந்நாளில் தான் வீணர்கள் நட்டமடைவார்கள்.

28. ஒவ்வொரு சமுதாயத்தையும் மண்டியிட்டவர்களாக நீர் காண்பீர்! ஒவ்வொரு சமுதாயமும் தனது (பதிவுப்) புத்தகத்தை நோக்கி அழைக்கப்படும். நீங்கள் செய்து கொண்டிருந்ததற்கு இன்று கூலி கொடுக்கப்படுவீர்கள்.

29. இதுவே நமது புத்தகம். உங்களுக்கு எதிராக இது உண்மையைப் பேசுகிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் பதிவு செய்வோராக இருந்தோம் என்று கூறப்படும்.

30. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை அவர்களது இறைவன் தனது அருளில் நுழைப்பான். இதுவே தெளிவான வெற்றி.

31. (ஏகஇறைவனை) மறுப்போரிடம் "எனது வசனங்கள் உங்களுக்குக் கூறப்படவில்லையா? அகந்தை கொண்டீர்கள்! குற்றம் புரிந்த கூட்டமாக இருந்தீர்கள்'' (எனக் கூறப்படும்).

32. "அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது; அந்த நேரத்தில்1 எந்தச் சந்தேகமும் இல்லை'' என்று கூறப்பட்டால் "யுகமுடிவு நேரம்1 என்றால் என்ன என்று அறிய மாட்டோம். நாங்கள் ஊகம் செய்வோர் தவிர வேறு இல்லை. நாங்கள் உறுதியாக நம்புவோர் அல்லர்'' என்று கூறினீர்கள்.

33. அவர்கள் செய்த தீமைகள் அவர்களுக்கு வெளிச்சமாகும். அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது அவர்களைச் சுற்றி வளைக்கும்.

34. "இந்த நாளின்1 சந்திப்பை நீங்கள் மறந்தது போல் இன்று நாமும் உங்களை மறப்போம்.6உங்கள் தங்குமிடம் நரகமாகும். உங்களுக்கு உதவுவோர் இல்லை'' எனக் கூறப்படும்.

35. நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களைக் கேலியாகக் கருதியதும், இவ்வுலக வாழ்வு உங்களை மயக்கியதுமே இதற்குக் காரணம். இன்று அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள். அவர்கள் (உலகுக்கு மீண்டும் அனுப்பப்பட்டு வணக்கங்கள் செய்ய) வற்புறுத்தப்பட மாட்டார்கள்.

36. வானங்களின்507 இறைவனும், பூமியின் இறைவனுமான அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

37. வானங்களிலும்,507 பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

 

Leave a Reply