அத்தியாயம் : 59
அல் ஹஷ்ர் – வெளியேற்றம்
மொத்த வசனங்கள் : 24
இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனம், யூதர்கள் நாடு கடத்தப்பட்டது பற்றிக் கூறுவதால் வெளியேற்றம் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1.வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
2. அவனே வேதமுடையோரில்27 உள்ள (ஏகஇறைவனை) மறுப்போரை அவர்களது இல்லங்களிலிருந்து முதல் வெளியேற்றமாக வெளியேற்றினான். அவர்கள் வெளியேறுவார்கள் என நீங்கள் எண்ணவில்லை. தமது கோட்டைகள் அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காக்கும் என அவர்கள் நினைத்தனர். அவர்கள் எண்ணிப் பார்த்திராத வழியில் அவர்களை அல்லாஹ் அணுகினான்.61 அவர்களது உள்ளங்களில் அச்சத்தை விதைத்தான். தமது கைகளாலும், நம்பிக்கை கொண்டோரின் கைகளாலும் தமது வீடுகளை நாசமாக்கினார்கள். அறிவுடையோரே படிப்பினை பெறுங்கள்!
3. அவர்கள் வெளியேறுவதை அல்லாஹ் விதித்திருக்காவிட்டால் அவர்களை இவ்வுலகில் தண்டித்திருப்பான். மறுமையிலும் அவர்களுக்கு நரகின் வேதனை இருக்கிறது.
4. அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போராக இருந்ததே இதற்குக் காரணம். யார் அல்லாஹ்வைப் பகைக்கிறாரோ (அவரை) அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
5. நீங்கள் (அவர்களுடைய) பேரீச்சை மரங்களை வெட்டியதும், அதன் வேர்களுடன் வெட்டாது விட்டதும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நடந்தது. குற்றம் புரிந்தோரை அவன் இழிவுபடுத்துவான்.
6. அவர்களிடமிருந்து எதைத் தனது தூதர் கைப்பற்றுமாறு அல்லாஹ் செய்தானோ அதற்காக நீங்கள் குதிரையையோ, ஒட்டகத்தையோ ஓட்டிச் செல்லவில்லை. மாறாக அல்லாஹ், தான் நாடியவர் மீது தனது தூதர்களைச் சாட்டுகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
7.பல்வேறு ஊராரிடமிருந்து எதை தனது தூதர் கைப்பற்றுமாறு அல்லாஹ் செய்தானோ அது அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும், உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிக்கும்206 உரியது. உங்களில் செல்வந்தர்களிடையே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக (இவ்வாறு பங்கிடுகிறான்).195 இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
8. தமது வீடுகளையும், சொத்துக்களையும் விட்டு வெளியேற்றப்பட்ட ஹிஜ்ரத்460 செய்த ஏழைகளுக்கும் (உரியது). அவர்கள் அல்லாஹ்விடமிருந்து அருளையும், திருப்தியையும் எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவுகின்றனர். அவர்களே உண்மையாளர்கள்.
9.அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத்460 செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.
10. அவர்களுக்குப் பின் வந்தோர் "எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுகின்றனர்.
11. (முஹம்மதே!) நயவஞ்சகரை நீர் அறியவில்லையா? "நீங்கள் வெளியேற்றப்பட்டால் உங்களுடன் நாங்களும் வெளியேறுவோம். உங்கள் விஷயத்தில் எவருக்கும் எப்போதும் கட்டுப்பட மாட்டோம். உங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் உங்களுக்கு உதவுவோம்'' என்று வேதமுடையோரில்27 உள்ள (ஏகஇறைவனை) மறுக்கும் தங்கள் உடன்பிறப்புகளிடம் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
12. அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுடன் இவர்கள் வெளியேறவே மாட்டார்கள். அவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் அவர்களுக்கு உதவவும் மாட்டார்கள். இவர்கள் அவர்களுக்கு உதவினாலும் புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
13. அவர்களது உள்ளங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றியே அதிக பயம் இருக்கிறது. அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
14. அரண் அமைக்கப்பட்ட ஊர்களிலிருந்தோ, சுவர்களுக்குப் பின்னாலிருந்தோ தவிர அவர்கள் ஒன்று சேர்ந்து உங்களிடம் போரிட மாட்டார்கள். அவர்களுக்கிடையே பகைமை கடுமையானது. அவர்கள் ஒன்று திரண்டுள்ளதாக நீர் கருதுவீர். அவர்களின் உள்ளங்களோ சிதறிக் கிடக்கின்றன. அவர்கள் விளங்காத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
15. அவர்களுக்குச் சற்று முன் சென்ற சமுதாயத்தினர் போன்றே (அவர்கள் உள்ளனர்). அவர்கள் தமது காரியத்தின் விளைவை அனுபவித்தனர். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
16. "(ஏகஇறைவனை) மறுத்து விடு'' என்று மனிதனிடம் கூறி, அவன் மறுத்த பின் "நான் உன்னை விட்டு விலகியவன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்'' எனக் கூறிய ஷைத்தானைப் போன்றவர்கள்.
17. நரகத்தில் நிரந்தரமாக இருப்பதே இருவரின் முடிவாக ஆகிவிட்டது. அநீதி இழைத்தோருக்கு இதுவே தண்டனை.
18.நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! மறுமைக்காக தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
19. அல்லாஹ்வை மறந்தோரைப் போல் ஆகி விடாதீர்கள்! அவர்களையே அவர்களுக்கு அவன் மறக்கச் செய்து விட்டான். அவர்களே குற்றவாளிகள்.
20. நரகவாசிகளும், சொர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள். சொர்க்கவாசிகளே வெற்றி பெற்றோர்.
21. இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.
22.அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.
23.அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) பேரரசன்; தூயவன்.10 நிம்மதியளிப்பவன்; அடைக்கலம் தருபவன்; கண்காணிப்பவன்; மிகைத்தவன்; ஆதிக்கம் செலுத்துபவன்; பெருமைக்குரியவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.10
24. அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன்; உருவாக்குபவன்; வடிவமைப்பவன்; அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.