ஜம்வு தொழுகைக்கு ஒரு இகாமத்தா? இரு இகாமத்தா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்துள்ளார்கள். அவர்கள் முஸ்தலிஃபாவில் மக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை ஒரு பாங்கும் இரண்டு இகாமத்தும் கூறித் தொழுதார்கள் என்ற கருத்தில் ஹதீஸ் உள்ளது. இதற்கு மாற்றமாக ஒரு பாங்கும் ஒரு இகாமத்தும் கூறி தொழுதார்கள் எனவும் ஹதீஸ் உள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுவதைப் போல் தெரிகின்றது. விளக்கம் தேவை.
அக்பர், தேங்காய்ப்பட்டிணம்.
பதில் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை ஒரு பாங்கும் இரண்டு இகாமத்தும் கூறித் தொழுதார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இதற்கு மாற்றமாக ஒரு பாங்கும் ஒரு இகாமத்தும் கூறி தொழுதார்கள் எனவும் ஹதீஸ் உள்ளன என்பது உண்மை தான்.
இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன என்பதும் உண்மை தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்திருக்கும் போது இந்த இரண்டு முறைகளையும் அவர்கள் செயல்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டுமே அவர்கள் செய்திருப்பார்கள்.
இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளையும் ஆராயும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாங்கும் இரண்டு இகாமத்தும் கூறித் தொழுதார்கள் என்பதே சரியான செய்தியாக உள்ளது.
இது பற்றிய ஹதீஸ்களை ஆராயும் போது ஒரு இகாமத் என்ற ஹதீஸ் சரியானதல்ல என்ற முடிவுக்கு வரமுடியும்.
2269و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ عَنْ أَبِي إِسْحَقَ قَالَ قَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ أَفَضْنَا مَعَ ابْنِ عُمَرَ حَتَّى أَتَيْنَا جَمْعًا فَصَلَّى بِنَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِإِقَامَةٍ وَاحِدَةٍ ثُمَّ انْصَرَفَ فَقَالَ هَكَذَا صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَكَانِ رواه مسلم
சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
ஸயீத் பின் ஜுபைர் அவர்கள் முஸ்தலிஃபாவில் ஒரே இகாமத்தில் மக்ரிபையும், இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள். பிறகு, "இவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களும் தொழுதார்கள்'' என்றும், "இவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தொழுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்'' என்றும் அறிவித்தார்கள்.
நூல் : முஸ்லிம்
இது தான் ஒரு இகாமத் பற்றி அறிவிக்கப்படும் ஹதீஸாகும்.
இந்தச் செய்திக்கு மாற்றமாகவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு தொழுகைக்கும் இகாமத் சொல்லி தொழுதார்கள் என்றும் அவர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1673حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ جَمَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ كُلُّ وَاحِدَةٍ مِنْهُمَا بِإِقَامَةٍ وَلَمْ يُسَبِّحْ بَيْنَهُمَا وَلَا عَلَى إِثْرِ كُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا رواه البخاري
இப்னு உமர் (ரலி) கூறிகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மக்ரிபையும், இஷாவையும் ஒவ்வொன்றுக்கும் (தனித்தனி) இகாமத்துடன் சேர்த்துத் தொழுதார்கள். இரண்டிற்குமிடையிலோ ஒவ்வொன்றுக்கும் பின்போ கடமையல்லாத தொழுகை எதையும் தொழவில்லை.
நூல் : புகாரி 1673
654أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ وَكِيعٍ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمَعَ بَيْنَهُمَا بِالْمُزْدَلِفَةِ صَلَّى كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا بِإِقَامَةٍ وَلَمْ يَتَطَوَّعْ قَبْلَ وَاحِدَةٍ مِنْهُمَا وَلَا بَعْدُ رواه النسائي
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மக்ரிபையும், இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். இவ்விரண்டில் ஒவ்வொன்றுக்கும் (தனியே) ஒரு இகாமத் கூறி தொழுதார்கள். இந்தத் தொழுகைகளுக்கு முன்பாகவோ, பின்பாகவோ அவர்கள் எதையும் உபரியாகத் தொழவில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : நஸாயீ
477أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ حَدَّثَنَا خَالِدٌ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ قَالَ رَأَيْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ بِجَمْعٍ أَقَامَ فَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثَ رَكَعَاتٍ ثُمَّ أَقَامَ فَصَلَّى يَعْنِي الْعِشَاءَ رَكْعَتَيْنِ ثُمَّ ذَكَرَ أَنَّ ابْنَ عُمَرَ صَنَعَ بِهِمْ مِثْلَ ذَلِكَ فِي ذَلِكَ الْمَكَانِ وَذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ ذَلِكَ فِي ذَلِكَ الْمَكَانِ رواه النسائي
சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
ஸயீத் பின் ஜுபைர் முஸ்தலிஃபாவில் இகாமத் சொல்லி மூன்று ரக்அத் மஃக்ரிப் தொழுதார்கள். பிறகு இகாமத் சொல்லி இரண்டு ரக்அத் இஷாத் தொழுதார்கள். பிறகு, அவர்கள் "இந்த இடத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களுக்கு இவ்வாறே தொழ வைத்தார்கள்'' என்றும், "இவ்வாறே நபி (ஸல்) அவர்களும் இவ்விடத்தில் தொழுதார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்'' என்றும் அறிவித்தார்கள்.
நூல் : நஸாயீ
மக்ரிபுக்கும், இஷாவுக்கும் தனித்தனியே இகாமத் சொல்ல வேண்டும் என்று இந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவும் இப்னு உமர் (ரலி) அவர்களின் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே அறிவிப்பாளர் ஒரு தகவலை முரண்பட்டு அறிவித்தால் இரண்டும் சரியானதாக இருக்க முடியாது. இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க வேண்டும். வேறு ஹதீஸ்களின் துணையுடன் ஆராயும் போது ஒரு பாங்கு இரண்டு இகாமத் என்பது தான் சரியான அறிவிப்பு என்ற முடிவுக்கு நாம் வர முடியும். ஏனென்றால் இப்னு உமர் (ரலி) அவர்கள் அல்லாமல் வேறு நபித்தோழர்களும் இவ்வாறு அறிவித்துள்ளனர்.
139حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ دَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَرَفَةَ حَتَّى إِذَا كَانَ بِالشِّعْبِ نَزَلَ فَبَالَ ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يُسْبِغْ الْوُضُوءَ فَقُلْتُ الصَّلَاةَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ الصَّلَاةُ أَمَامَكَ فَرَكِبَ فَلَمَّا جَاءَ الْمُزْدَلِفَةَ نَزَلَ فَتَوَضَّأَ فَأَسْبَغَ الْوُضُوءَ ثُمَّ أُقِيمَتْ الصَّلَاةُ فَصَلَّى الْمَغْرِبَ ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ ثُمَّ أُقِيمَتْ الْعِشَاءُ فَصَلَّى وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا رواه البخاري
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபா என்ற இடம் வந்ததும், உளூச் செய்தார்கள். அப்போது உளூவை முழுமையாக்கினார்கள். பின்னர் தொழுகைக்காக "இகாமத்' சொல்லப்பட்டதும், மக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பிறகு ஒவ்வொரு மனிதரும் தத்தமது ஒட்டகத்தை தம் தங்குமிடங்களில் படுக்க வைத்தனர். தொடர்ந்து இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்ட போது அதையும் தொழுவித்தார்கள். இரு தொழுகைகளுக்கிடையில் வேறெந்தத் தொழுகையையும் அவர்கள் தொழவில்லை.
நூல் : புகாரி 139
ஜாபிர் (ரலி) அவர்களும் இது போன்று அறிவித்துள்ளார்கள்.
650أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ هَارُونَ قَالَ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ قَالَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ قَالَ دَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى انْتَهَى إِلَى الْمُزْدَلِفَةِ فَصَلَّى بِهَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِأَذَانٍ وَإِقَامَتَيْنِ وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًا رواه النسائي
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு முஸ்தலிஃபாவை அடைந்தார்கள். அங்கே ஒரு பாங்கு இரண்டு இகாமத்துடன் மக்ரிப், இஷாத் தொழுகைகளைத் தொழுதார்கள். இவ்விரண்டுக்கும் இடையில் வேறு எதையும் தொழவில்லை.
நூல் : நஸாயீ
இரண்டு இகாமத் சொன்னார்கள் என்ற தகவல் ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக முஸ்லிமிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2137 وَدَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ شَنَقَ لِلْقَصْوَاءِ الزِّمَامَ حَتَّى إِنَّ رَأْسَهَا لَيُصِيبُ مَوْرِكَ رَحْلِهِ وَيَقُولُ بِيَدِهِ الْيُمْنَى أَيُّهَا النَّاسُ السَّكِينَةَ السَّكِينَةَ كُلَّمَا أَتَى حَبْلًا مِنْ الْحِبَالِ أَرْخَى لَهَا قَلِيلًا حَتَّى تَصْعَدَ حَتَّى أَتَى الْمُزْدَلِفَةَ فَصَلَّى بِهَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِأَذَانٍ وَاحِدٍ وَإِقَامَتَيْنِ وَلَمْ يُسَبِّحْ بَيْنَهُمَا شَيْئًا رواه مسلم
ஒரு இகாமத் என்று அறிவிக்கும் இப்னு உமர் அவர்களே அதற்கு முரண்பட்டு அறிவிப்பதாலும், இரு இகாமத் என்று இன்னும் பல நபித்தோழர்களும் அறிவித்துள்ளதால் ஒரு இகாமத் என்ற அறிவிப்பு ஷாத் எனும் பலவீன நிலையை அடைகின்றது.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் ஒரு பாங்கும், ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியே இகாமத்தும் சொல்லி மக்ரிப் இஷாத் தொழுகைகளை தொழுதார்கள் என்ற கருத்தில் வரும் செய்திகளே சரியானவை.