பணக்காரர்கள் பள்ளியில் நோன்பு துறக்கலாமா?

பணக்காரர்கள் பள்ளியில் நோன்பு துறக்கலாமா?

நோன்பு துறக்க எவர்கள் பள்ளிவாசலுக்கு வரலாம்?

பணக்காரர்கள் வரலாமா?

வசதியுள்ளவர்கள் வந்தால் அது யாசகம் கேட்பதாக ஆகுமா?

முஹம்மத் சபியுல்லாஹ்

பதில்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலில் நோன்பு துறக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. கஞ்சி காய்ச்சி வழங்கப்படவில்லை. இது நம்முடைய வசதிக்காக நாம் செய்து கொண்ட ஏற்பாடாகும். பள்ளிவாசலில் நோன்புக் கஞ்சி காய்ச்சும் ஏற்பாடு இல்லாவிட்டால் அதனால் ஒரு குற்றமும் வராது.

நம்முடைய வசதிக்காக நாம் செய்யும் காரியம் என்பதால் பள்ளிவாசலில் நோன்பு துறக்க பணக்காரர்கள் செல்லலாமா என்ற கேள்விக்கு எளிதில் விடை காணலாம்.

பள்ளிவாசலில் நோன்பு துறப்பதற்காக மக்களிடம் நிதி திரட்டும்போது தர்மம் என்ற அடிப்படையில் நிதி திரட்டுவதில்லை. ஏழைகளுக்கு மட்டும் தான் இதை வழங்குவோம் என்று கூறி நிதி திரட்டுவதில்லை.

வீட்டில் நோன்பு துறந்து விட்டு பள்ளிவாசலுக்கு வந்தால் மக்ரிப் ஜமாஅத்தில் கலந்து கொள்ள இயலாமல் போகும். இதற்காகத் தான் பள்ளிவாசலில் நோன்பு துறக்கும் வசதிகள் செய்யப்படுகின்றன. நோன்பு துறக்க உணவு கிடைக்காமல் ஏழைகள் சிரமப்படுவார்கள் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படவில்லை.

உதவி செய்யும் மக்கள் வசதி படைத்தவர்களும் பயன்படுத்துவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே தான் நிதி உதவி செய்கின்றனர்.

எனவே இது ஜகாத்திலும் சேராது. பிச்சையிடுவதிலும் சேராது. செல்வந்தர்களும், ஏழைகளும் ஒரே மாதிரியான உணவுடன் நோன்பு துறந்து சமத்துவம் பேணுவதை நாம் வரவேற்க வேண்டும்.