நூலின் பெயர் : பிறை ஓர் விளக்கம்

ஆசிரியர் பீ.ஜைனுல் ஆபிதீன்

வெளியீடு நபீலா பதிப்பகம்

முன்னுரை

முஸ்லிம் சமுதாயத்தின் வணக்க வழிபாடுகளுக்கான காலத்தைத் தீர்மானிப்பதில் பிறை முக்கியமான பங்கு வகிக்கின்றது. இஸ்லாமிய மாதங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு மாதத்தின் முதல் பிறையையும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ளது.

இந்த அவசியத்தை முஸ்லிம் சமுதாயம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. ஆயினும் முதல் பிறையைத் தீர்மானிப்பதில் நபித்தோழர்கள் காலம் முதல் இன்று வரை கருத்து வேறுபாடுகள் இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. குறிப்பாக இந்த நவீன யுகத்தில் புதுப்புது வாதங்கள் எழுப்பப்படுவதால் அந்த வேறுபாடுகள் அதிகரித்து விட்டதையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

திருக்குர்ஆனிலும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலிலும் எந்தக் குழப்பமும், முரண்பாடும் இல்லை; இருக்காது என்பதில் எந்த முஸ்லிமுக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

திருக்குர்ஆனையும், நபிவழியையும் அணுகும் விதத்திலும், வானியலைப் புரிந்து கொள்ளும் விதத்திலும் நம்மில் யாரிடமோ அல்லது நம் அனைவரிடமோ ஏதோ தவறுகள் இருப்பதால் தான் இந்தக் கருத்து வேறுபாடுகள் எழுகின்றன.

எனவே தான் இறையச்சத்தை முன்னிறுத்தி காய்தல் உவத்தலின்றி நடுநிலையுடன் இது குறித்து விரிவாக ஆராய்ந்து தலைப்பிறையை எவ்வாறு தீர்மானிப்பது என்பதைத் தக்க ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறோம்.

1999 நவம்பர் மாத அல்முபீன் இதழில் தொகுத்து வெளியிடப்பட்ட இந்த ஆக்கம், கொள்கைச் சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று, மெருகூட்டப்பட்டு நூல் வடிவில் உங்கள் கரங்களில் தவழ்கிறது.

இஸ்லாமிய மாதத்தின் முதல் நாளை எவ்வாறு தீர்மானிப்பது என்பதில் பலருக்கும் ஏற்பட்டுள்ள குழப்பங்களை இந்நூல் தீர்த்து வைக்கும் என்று நம்புகிறோம்.

அன்புடன்

நபீலா பதிப்பகம்

பிறை ஒரு விளக்கம்

பிறை குறித்த மாறுபட்ட கருத்துக்கள்

தலைப் பிறையை எவ்வாறு தீர்மானிப்பது என்ற ஆய்வுக்குள் நுழைவதற்கு முன் எத்தனை விதமான கருத்துக்கள் சமுதாயத்தில் நிலை பெற்றுள்ளன என்பதை அறிந்து கொள்வோம்.

முதல் கருத்து

ஒவ்வொரு பகுதியினரும் முப்பதாம் இரவில் தத்தமது பகுதியில் பிறையைப் பார்க்க வேண்டும். தமது பகுதியில் பிறை தென்பட்டால் அப்போது அடுத்த மாதம் பிறந்து விட்டது என்று முடிவு செய்ய வேண்டும். தமது பகுதியில் பிறை தென்படா விட்டால் அது அம்மாதத்தின் முப்பதாம் நாள் என்றும், மறு நாள் தான் முதல் பிறை என்றும் முடிவு செய்ய வேண்டும்.

இண்டாவது கருத்து

ஒவ்வொரு பகுதியினரும் முப்பதாம் இரவில் தத்தமது பகுதியில் பிறையைப் பார்க்க வேண்டும். தமது பகுதியில் பிறை தென்பட்டால் அப்போது அடுத்த மாதம் பிறந்து விட்டது என்று முடிவு செய்ய வேண்டும். தமது பகுதியில் பிறை தென்படாத போது உலகில் வேறு எப்பகுதியிலாவது பிறை தென்பட்ட தகவல் கிடைக்கப் பெற்றால் அதை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு அடுத்த மாதம் பிறந்து விட்டது என்று முடிவு செய்ய வேண்டும்.

மூன்றாவது கருத்து

ஒவ்வொரு பகுதியினரும் முப்பதாம் இரவில் தத்தமது பகுதியில் பிறையைப் பார்க்க வேண்டும். முப்பதாம் இரவில் பிறை காணப்பட்டால் அப்போது அடுத்த மாதம் பிறந்து விட்டது என்று முடிவு செய்ய வேண்டும். தமது பகுதியில் பிறை தென்படாத நிலையில் வேறு பகுதிகளில் பிறை காணப்பட்டதாகத் தகவல் கிடைத்தால் அத்தகவலைப் பரிசீலிக்க வேண்டும். அருகில் உள்ள ஊர்களில் பிறை காணப்பட்டால் அதை ஏற்க வேண்டும். தமது ஊரில் பிறை தோன்றுவதற்கு முன்னால் எந்த ஊர்களில் பிறை தோன்றுமோ அந்த ஊர்களில் பிறை காணப்பட்ட தகவல் கிடைத்தால் அதையும் நாம் ஏற்க வேண்டும்.

நமது ஊரில் பிறை தோன்றிய பின்னால் எந்த ஊர்களில் பிறை தோன்றுகிறதோ அந்த ஊரில் காணப்படுவதை நாம் ஏற்கக் கூடாது.

நான்காவது கருத்து

ஒவ்வொரு பகுதியினரும் முப்பதாம் இரவில் தத்தமது பகுதியில் பிறையைப் பார்க்க வேண்டும். முப்பதாம் இரவில் பிறை காணப்பட்டால் அப்போது அடுத்த மாதம் பிறந்து விட்டது என்று முடிவு செய்ய வேண்டும். தமது பகுதியில் பிறை தென்படாத நிலையில் வேறு பகுதிகளில் பிறை காணப்பட்டதாகத் தகவல் கிடைத்தால் பிறை காணப்பட்ட நேரத்தில் எந்த ஊர் மக்கள் அன்று சுப்ஹு நேரத்திற்கு முன் உள்ளனரோ அவர்கள் அப்பிறையை ஏற்க வேண்டும். மற்றவர்கள் மறு நாளில் தலைப்பிறை என்று முடிவு செய்ய வேண்டும்.

ஐந்தாவது கருத்து

ஒவ்வொரு பகுதியினரும் முப்பதாம் இரவில் பிறையைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நிலவில் சூரிய ஒளி பட்டுப் பிரதிபலிப்பது தான் பிறை எனப்படுகிறது. அமாவாசை என்ற நிலை முடிந்த மறுகணமே சந்திரன் சூரிய ஒளியைப் பிரதிபலிக்க ஆரம்பித்து விடும். ஆனாலும் அதைக் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்குச் சிறிதாக இருக்கும். அமாவாசை முடிந்து மறு நாள் தான் நாம் பார்க்கும் அளவுக்கு ஒளிவீசும். எனவே அமாவாசை முடிந்து மறு நிமிடமே முதல் பிறை என்று கணித்து முடிவு செய்ய வேண்டும்.

ஆறாவது கருத்து

ஒவ்வொரு பகுதியினரும் முப்பதாம் இரவில் பிறையைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முன் கூட்டியே கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அமாவாசையிலிருந்து முதல் நாளைக் கணக்கிடக் கூடாது. நாம் பார்க்கக் கூடிய அளவுக்கு எந்த நாளில் பிறை தெரியும் என்று கணிக்கப்படுகிறதோ அந்த நாளிலிருந்து முதல் பிறையைக் கணக்கிட வேண்டும்.

ஏழாவது கருத்து

பிறையைத் தீர்மானிப்பதில் மார்க்கம் நமக்கு உரிமை வழங்கியுள்ளது. முன் கூட்டியே கணிப்பதை ஏற்பதாக மக்கள் முடிவு செய்தால் அந்த உரிமை அவர்களுக்குண்டு. கண்ணால் பார்ப்பதைத் தான் ஒப்புக் கொள்வோம் என்று முடிவு செய்தால் அதையும் மறுக்க முடியாது. தகவலை ஏற்க விரும்பினாலும் தடையேதுமில்லை.

எட்டாவது கருத்து

நாம் மக்காவை நோக்கியே தொழுகிறோம். ஹஜ் எனும் வணக்கத்தை நிறைவேற்ற நாம் அங்கு தான் செல்கிறோம். எனவே மக்காவைத் தான் பிறை பார்ப்பதற்கும் அளவுகோலாகக் கொள்ள வேண்டும். எனவே சவூதியில் அறிவிப்பதை உலகம் முழுவதுமே தலைப்பிறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாமறிந்தவரை இப்படி எட்டு விதமான அபிப்பிராயங்கள் உள்ளன. இவை தவிர தனித்தனி நபர்கள் சில கருத்துக்களையும் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு கருத்துடையோரும் தத்தமது வாதங்களை நிலைநாட்ட ஆதாரங்களையும், சில வாதங்களையும் முன் வைக்கின்றனர். கடந்த காலங்களில் இரண்டு அல்லது மூன்று அபிப்பிராயங்கள் மட்டுமே இருந்தன என்றால் நவீன யுகத்தில் அந்த அபிப்பிராயங்களின் எண்ணிக்கை குறைவதற்குப் பதிலாக அதிகரித்துள்ளது வேதனைப்பட வேண்டிய உண்மையாகும்.

இந்தக் கருத்துகளில் எது சரியான கருத்து? எந்தக் கருத்து திருக்குர்ஆனுக்கும் நபிவழிக்கும் ஏற்றது? இது குறித்து விரிவாக நாம் ஆராய்வோம். ஆய்வுக்குள் நுழைவதற்கு முன்னால் பிறையுடன் தொடர்புடைய குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும் தொகுத்து வழங்குகிறோம்.

பிறை குறித்த திருக்குர்ஆன் வசனங்கள்

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

திருக்குர்ஆன் : 2:185

அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக்களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.

திருக்குர்ஆன் : 3:96

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அல்லாஹ் இதை