மார்க்க விஷயத்தில் பெரியார்களிடம் பைஅத் செய்யலாமா?

மார்க்க விஷயத்தில் பெரியார்களிடம் பைஅத் செய்யலாமா?

மார்க்க விஷயத்தில் மனிதனிடம் பைஅத் செய்ய ஆதாரம் உள்ளது என்கிறார்களே?

இப்படிக் கூறுபவர்களும், பைஅத் செய்யாமல் மறுமையில் வெற்றிபெற முடியாது என்று வாதிடும் கூட்டத்தினரும் 48:10, 9:103 வசனங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவரிடம் வணக்க வழிபாடுகள் செய்வதாக எப்படி உறுதிமொழி எடுக்கலாம் என்று நாம் கேள்வி எழுப்புகிறோம்.

அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவர்கள் தானே? அவர்களிடம் மட்டும் பையத் செய்யலாமா என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.

பாஸில் ஹுசைன்

பதில் :

இவர்களின் வாதம் அபத்தமானது; அல்லாஹ்வின் தூதருக்கான தகுதி தங்களுக்கும் இருப்பதாகக் கருதுவது ஆணவத்தின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.

உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.

திருக்குர்ஆன் 48 : 10

இந்த வசனத்துக்கு நாம் அளித்த முழு விளக்கத்தையும் நீங்கள் படித்தால் இவர்கள் கேட்கும் அர்த்தமற்ற கேள்விக்கு நீங்களே பதில் கூறி விடலாம். இதோ அந்த விளக்கம்.

இந்த வசனம் நபிகள் நாயகம் அவர்களிடம் நபித்தோழர்கள் செய்து கொண்ட "பைஅத்' எனும் உடன்படிக்கை பற்றிப் பேசுகிறது. (திருக்குர்ஆன் 48:10, 48:12, 48:18)

இந்த வசனத்தைச் சான்றாகக் கொண்டு போலி ஆன்மிகவாதிகளும், ஏமாற்றுப் பேர்வழிகளும், தங்களின் சீடர்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காகவும், எந்தக் கேள்வியும் கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு தங்களைப் பின்பற்றச் செய்வதற்காகவும் இவ்வசனத்தைப் பயன்படுத்துகின்றனர்.

நபிகள் நாயகத்திடம் நபித்தோழர்கள் பைஅத் செய்திருப்பதால் எங்களிடமும் பைஅத் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறு பைஅத் எனும் உறுதிமொழி எடுத்த பிறகு, யாரிடத்தில் அந்த உறுதிமொழி எடுக்கிறார்களோ அவரைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் எனவும் மூளைச் சலவை செய்கின்றனர்.

ஆனால் இவ்வசனத்தில் இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. "உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தவர்கள் அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுக்கிறார்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகத்திடம் எடுக்கும் உறுதிமொழி அல்லாஹ்விடம் எடுக்கும் உறுதிமொழியாகும் என்று கூறுவதிலிருந்து இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்பதை விளங்கலாம்.

இதுபோல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்திடம் நபித்தோழர்கள் பைஅத் எனும் உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள்.

"நாங்கள் தொழுவோம்; நோன்பு வைப்போம்; தப்புச் செய்ய மாட்டோம்'' என்றெல்லாம் பல்வேறு கட்டங்களில் நபிகள் நாயகத்திடம் நபித்தோழர்கள் உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள்.

(பார்க்க : திருக்குர்ஆன் 60:12)

இவை யாவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டவை. தூதரிடத்தில் எடுக்கும் உறுதிமொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் எடுக்கின்ற உறுதிமொழி தான்.

இத்தகைய உறுதிமொழிகளை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு தலை சிறந்து விளங்கிய பெரிய பெரிய நபித் தோழர்களிடம் மற்றவர்கள் வந்து எடுக்கவே இல்லை.

அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகியோரிடம் வந்து "நாங்கள் ஒழுங்காகத் தொழுவோம்; நோன்பு நோற்போம்'' என்றெல்லாம் நபித்தோழர்கள் பைஅத் எடுக்கவில்லை.

இறைவனிடம் செய்கின்ற உறுதிமொழியை இறைத்தூதரிடம் செய்யலாம் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திடம் பைஅத் செய்தார்கள்.

எனவே நபிகள் நாயகத்தைத் தவிர எந்த மனிதரிடமும் "நான் மார்க்க விஷயத்தில் சரியாக நடந்து கொள்வேன்'' என்று உறுதிமொழி எடுப்பது இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான, நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துகிற, தங்களையும் இறைத்தூதர்களாக கருதிக் கொள்கின்ற வழிகேடர்களின் வழி முறையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தவிர மற்றவர்களிடம் உறுதிமொழி எடுப்பதென்று சொன்னால் இரண்டு விஷயங்களில் எடுக்கலாம்.

ஒருவர் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் போது உங்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்று மக்கள் உறுதிமொழி கொடுக்கின்ற பைஅத். இது மார்க்கத்தில் உண்டு.

இந்த உறுதிமொழியை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்கள் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு உமர் (ரலி) அவர்களிடம் செய்தார்கள்.

இப்படி முழு அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் மட்டும் இவ்வாறு பைஅத் எடுப்பதற்கு அனுமதி இருக்கிறது. இது மார்க்கக் காரியங்களை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற பைஅத் அல்ல.

இவ்வுலகில் நடக்கும் கொடுக்கல் வாங்கலின் போது சம்மந்தப்பட்டவர்களிடம் செய்து கொள்ளும் உறுதிமொழி அனுமதிக்கப்பட்ட மற்றொரு பைஅத் ஆகும்.

எனக்குச் சொந்தமான இந்த வீட்டை உமக்கு நான் விற்கிறேன் என்று விற்பவரும் வாங்குபவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி – பைஅத் – எடுக்கலாம். தனக்குச் சொந்தமான ஒரு உடமை விஷயத்தில் ஒருவர் உறுதிமொழி எடுப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.

வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்கே சொந்தமானது. இதற்கு இறைவனிடமோ, இறைவனால் அனுப்பப்பட்ட தூதரிடமோ மட்டும் தான் உறுதிமொழி எடுக்க முடியும். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ள நம்மைப் போன்ற அடிமைகளிடம் இந்த உறுதிமொழியை எடுக்கலாகாது. அவ்வாறு எடுத்திருந்தால் அதை உடனடியாக அவர்கள் முறித்து விட வேண்டும்.

அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை மனிதனுக்கு வழங்கிய குற்றத்துக்காகவும், அல்லாஹ்வின் தூதருடைய தகுதியைச் சாதாரண மனிதருக்கு வழங்கிய குற்றத்துக்காகவும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதரிடத்தில் உறுதிமொழி எடுப்பவர்கள் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கிறார்கள் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள இந்தச் சொற்றொடர் முக்கியமாகக் கவனிக்கத்தது.

48:10 ஆவது வசனத்துக்கு மேற்கண்டவாறு நாம் திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் விளக்கம் அளித்திருந்தோம்.

எனவே வணக்கவழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமையிடம் ஆன்மிக பைஅத் செய்யக் கூடாதென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமை இல்லையா? என்ற கேள்வி அர்த்தமற்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமை என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் அவர்களிடம் மட்டும் ஆன்மிக பைஅத் செய்வதற்கு அல்லாஹ் அனுமதி கொடுத்துள்ளான். அல்லாஹ் அனுமதி கொடுத்த பிறகு அதற்கு எதிராகக் கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை.

வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்ட அடிமைகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர்த்து மற்ற யாரிடத்திலும் ஆன்மிக பைஅத் செய்யக் கூடாது.

போலி பைஅத்வாதிகள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நாம் ஆதாரமாகக் காட்டிய 48:10 வது வசனத்துக்கு சரியான விளக்கத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

இது வரை அதற்கு இவர்கள் பதில் கூறவில்லை. இவர்களின் கொள்கையை வேறோடு களையும் அந்த வசனத்துக்கும், நாம் எழுப்பிய பல வினாக்களுக்கும் பதில் கூறாமல் அர்த்தமற்ற கேள்வியை மட்டும் கேட்பதிலிருந்து இவர்கள் பொய்யர்கள் என்பது தெளிவாகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனித்தகுதி பெற்றவர்கள் என்பதையும் அதில் மற்றவர்கள் போட்டியிடக் கூடாது என்பதையும் பின்வரும் வசனத்தில் இருந்தும் அறியலாம்.

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَهُمْ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ(103)9

(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் 9 : 103

ஜகாத் வசூலிக்கும் போது அவர்களுக்காக நீ துஆ செய்வீராக! அது அவர்களுக்கு அமைதியைத் தரும் என்பது நபிக்கு மட்டும் உரியதாகும். ஜகாத் வசூலித்து அவர்களுக்காக நபி துஆ செய்யும் போது அம்மக்களின் மனம் அமைதி பெறும்.

அவர்களுக்குப் பின்னர் வரும் ஆட்சியாளர்களிடம் ஜகாத் வழங்கி அவர்கள் துஆ செய்தால் மக்களுக்கு அதனால் மன அமைதி ஏற்படாது.

நபிகள் நாயகத்துக்கு மட்டும் சிறப்புச் சட்டமாக  பைஅத் இருப்பது போல் அவர்களின் துஆ மனஅமைதியை ஏற்படுத்தும் என்பதும் சிறப்புச் சட்டமாக உள்ளது.

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit