அத்தியாயம் : 69
அல் ஹாக்கா – அந்த உண்மை நிகழ்ச்சி
மொத்த வசனங்கள் : 52
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் உண்மை நிகழ்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
2. உண்மை நிகழ்ச்சி என்றால் என்ன?
3. (முஹம்மதே!) உண்மை நிகழ்ச்சி எதுவென உமக்கு எப்படித் தெரியும்?
4. ஸமூது மற்றும் ஆது சமுதாயத்தினர் திடுக்கத்தை ஏற்படுத்தும் அந்நிகழ்ச்சியைப் பொய்யெனக் கருதினர்.
5. ஸமூது சமுதாயத்தினரோ பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
6. ஆது சமுதாயத்தினரோ மிகக் கடுமையான கொடிய காற்றால் அழிக்கப்பட்டனர்.
7. அதை ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இயக்கினான். அக்கூட்டத்தார் வேருடன் வீழ்ந்து கிடக்கும் பேரீச்சை மரங்களைப் போல் வீழ்ந்து கிடப்பதைக் காண்கிறீர்.
8. அவர்களில் எஞ்சியோரை நீர் காண்கிறீரா?
9. ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்சென்றோரும் தலைகீழாகப் புரட்டப்பட்ட (லூத் நபியுடைய சமுதாயமான) ஊராரும் தீமைகளைச் செய்தனர்.
10. தமது இறைவனின் தூதருக்கு மாறுசெய்தனர். எனவே அவர்களை அவன் கடுமையாகத் தண்டித்தான்.
11. (நூஹ் நபியின் காலத்தில்) தண்ணீர் எல்லை மீறியபோது உங்களை நாம் கப்பலில் சுமத்தினோம்.
12. அதை உங்களுக்கு ஒரு படிப்பினையாக நாம் ஆக்குவதற்கும்,222 கேட்கும் காதுகள் கேட்டு பேணி நடக்கவும் (இவ்வாறு செய்தோம்)
13, 14, 15. ஒரே ஒரு தடவை ஸூர் ஊதப்பட்டு, பூமியும், மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாக தூள் தூளாக்கப்படும்போது, அந்நாளில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தேறும்.26
16. வானம்507 பிளந்து விடும். அன்று அது உறுதியற்றதாக இருக்கும்.
17. வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை488தமக்கு மேலே எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.
18. அந்நாளில் (விசாரணைக்காக) நிறுத்தப்படுவீர்கள். உங்களிடமிருந்து எதுவும் மறையாது.
19, 20. எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் "வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்'' எனக் கூறுவார்.26
21, 22. அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார்.26
23. அதன் கனிகள் தாழ்ந்திருக்கும்.
24. சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்)
25, 26, 27, 28, 29. புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் "எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான்.26
30. அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்!
31. பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்!
32. பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.)
33. அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான்.
34. ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை.
35. இன்று இங்கே அவனுக்கு உற்ற நண்பன் எவனும் இல்லை.
36. சீழைத் தவிர வேறு உணவும் இல்லை.
37. குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் அதை உண்ண மாட்டார்கள்.
38, 39. நீங்கள் பார்ப்பதன் மீதும், நீங்கள் பார்க்காததன் மீதும் சத்தியம் செய்கிறேன்.26
40. இது மரியாதைக்குரிய தூதரின் கூற்றாகும்.
41. இது கவிஞனின் கூற்று அல்ல. குறைவாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்.
42. இது சோதிடனின் கூற்றும் அல்ல. குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
43. இது அகிலத்தாரின் இறைவனிடமிருந்து அருளப்பட்டது.
44, 45. சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக்கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம்.26
46. பின்னர் இவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.
47. உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர்.
48. இது (இறைவனை) அஞ்சியோருக்கு அறிவுரை.
49. உங்களில் பொய்யெனக் கருதுவோர் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
50. அது (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நட்டமாகும்.
51. இது உறுதியான உண்மை.
52. எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!