அத்தியாயம் : 70 அல் மஆரிஜ்

அத்தியாயம் : 70

அல் மஆரிஜ் – தகுதிகள்

மொத்த வசனங்கள் : 44

ந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தில், தகுதிகள் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1, 2, 3. தகுதிகள் உடைய அல்லாஹ்விடமிருந்து (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நிகழவுள்ள வேதனை குறித்துக் கேள்வி கேட்பவன் கேட்கிறான். அதை (வேதனையை) தடுப்பவன் யாருமில்லை.26

4. வானவர்களும், ரூஹும்444 ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான ஒரு நாளில் அவனிடம் ஏறிச் செல்வர். 293

5. எனவே அழகிய பொறுமையைக் கடைப்பிடிப்பீராக!

6. அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர்.

7. நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம்.

8. அந்நாளில் வானம்507 உருக்கிய செம்பு போல் ஆகும்.

9. மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும்.

10. எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான்.

11, 12, 13, 14. அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின்1 வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.26

15. அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும்.

16. அது தோலை உரிக்கும்.

17, 18. பின்வாங்கிப் புறக்கணித்தவனையும், (செல்வத்தை) சேர்த்துப் பாதுகாத்தவனையும் அது அழைக்கும்.26

19. மனிதன் பதறுபவனாக படைக்கப்பட்டுள்ளான்.368

20. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் திடுக்கிடுகிறான்.

21. அவனுக்கு நன்மை ஏற்பட்டால் கொடுக்காமல் தடுப்பவனாக ஆகிறான்.

22. தொழுகையாளிகளைத் தவிர.

23. அவர்கள் தமது தொழுகையில் நிலைத்திருப்பார்கள்

24, 25. யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் அறியப்பட்ட உரிமை இருக்கும்.26

26. அவர்கள் தீர்ப்பு நாளை1 நம்புவார்கள்.

27. அவர்கள் தமது இறைவனின் வேதனைக்கு அஞ்சுவார்கள்.

28. அவர்களின் இறைவனது வேதனை அச்சப்படத்தக்கதே.

29, 30. தமது மனைவியர் அல்லது அடிமைப் பெண்கள்107 மீதே தவிர அவர்கள் தமது கற்புகளைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் இழிவுபடுத்தப்பட்டோர் அல்லர்.26

31. இதற்கு அப்பால் தேடுவோரே வரம்பு மீறியவர்கள்.

32. அவர்கள் தமது அமானிதங்களையும், ஒப்பந்தத்தையும் பேணுவார்கள்.

33. அவர்கள் தமது சாட்சியங்களை நிலைநிறுத்துவார்கள்.

34. அவர்கள் தமது தொழுகையைப் பேணுவார்கள்.

35. அவர்களே சொர்க்கச் சோலைகளில் மரியாதை செய்யப்படுபவர்கள்.

36, 37. (முஹம்மதே!) நிராகரிப்போருக்கு என்ன நேர்ந்தது? வலப்புறமிருந்தும், இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக அவர்கள் உமக்கு முன்னே சுற்றி வருகின்றனர்.26

38. அவர்களில் ஒவ்வொரு மனிதனும் இன்பமான சொர்க்கத்திற்கு அனுப்பப்படுவதை விரும்புகிறானா?

39. அது நடக்காது. அவர்களுக்குத் தெரிந்த(மூலத்)திலிருந்து அவர்களை நாம் படைத்தோம்.

40, 41. கிழக்குகளுக்கும், மேற்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன்.335அவர்களை விடச் சிறந்தோரைப் பகரமாக்கிட நாம் ஆற்றலுடையவர்கள். நாம் தோற்போர் அல்லர்.26

42. அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட நாளை1 அவர்கள் சந்திக்கும் வரை அவர்கள் வீணிலும், விளையாட்டிலும் மூழ்கிக் கிடக்க விட்டுவிடுவீராக!

43. பலி பீடங்களை135 நோக்கி விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் அவர்கள் மண்ணறைகளில் இருந்து வேகமாக வெளியேறுவார்கள்.238

44. அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். இதுவே அவர்கள் எச்சரிக்கப்பட்ட நாள்1.

 

Leave a Reply