அத்தியாயம் : 77 அல்முர்ஸலாத்

அத்தியாயம் : 77

அல்முர்ஸலாத் – அனுப்பப்படும் காற்று!

மொத்த வசனங்கள் : 50

ந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அனுப்பப்படும் காற்றின் மீது சத்தியம் எனக் கூறப்படுவதால், இவ்வாறு இந்த அத்தியாயத்திற்குப் பெயரிடப்பட்டது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1, 2. தொடர்ந்து அனுப்பப்படுபவை (காற்றின்) மீதும், கடுமையாக வீசும் புயல் மீதும் சத்தியமாக! 379&26

3, 4. பரப்பி விடுபவை மீதும், ஒரேயடியாகப் பிரித்து விடுபவை மீதும் சத்தியமாக! 379&26

5, 6. மன்னிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ படிப்பினையைப் போடுபவற்றின் (காற்றின்) மீது சத்தியமாக! 379&26

7. உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடந்தேறும்.

8. நட்சத்திரங்கள் ஒளியிழக்கும்போது,

9. வானம்507 பிளக்கப்படும்போது,

10. மலைகள் சிதறடிக்கப்படும்போது,

11. தூதர்களுக்கு நேரம் குறிக்கப்படும்போது (அது நடந்தேறும்)

12. (இவை) எந்த நாளுக்காகத் தாமதப்படுத்தப்பட்டுள்ளது?

13. தீர்ப்பு நாளுக்காகவே!

14. தீர்ப்பு நாள்1 என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?

15. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

16. முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?

17. பின்னோரை அவர்களைத் தொடர்ந்து வரச் செய்யவில்லையா?

18. இவ்வாறே குற்றவாளிகளை நடத்துவோம்.

19. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

20. உங்களை அற்பமான நீரிலிருந்து நாம் படைக்கவில்லையா?

21, 22. குறிப்பிட்ட காலம் வரை அதைப் பாதுகாப்பான இடத்தில் நாம் வைக்கவில்லையா?26

23. நாமே நிர்ணயித்தோம். நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள்.

24. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

25, 26. உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்வதாக பூமியை ஆக்கவில்லையா?26

27. அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம்.248 இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.

28. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

29, 30. நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை நோக்கி நடங்கள்!26

31. அது நிழல் தருவது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது.

32. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.

33. அது நிறத்தில் மஞ்சள் நிற ஒட்டகங்கள் போல் இருக்கும்.

34. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

35. இது அவர்கள் பேச முடியாத நாள்!1

36. சமாதானம் கூற அவர்களுக்கு அனுமதியளிக்கப்படாது.

37. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

38. இதுவே நியாயத் தீர்ப்பு நாள்!1 உங்களையும், முன்னோரையும் ஒன்று திரட்டினோம்.

39. உங்களிடம் ஏதேனும் சூழ்ச்சி இருந்தால் எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்!

40. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

41. (இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.

42. அவர்கள் விரும்புகிற கனிகளுடனும் இருப்பார்கள்.

43. "நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்!'' (எனக் கூறப்படும்.)

44. இவ்வாறே நன்மை செய்தோருக்கு நாம் கூலி வழங்குவோம்.

45. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

46. சிறிது காலம் உண்ணுங்கள்! அனுபவியுங்கள்! நீங்கள் குற்றவாளிகள்.

47. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

48. ருகூவு செய்யுங்கள்! என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அவர்கள் ருகூவு செய்ய மாட்டார்கள்.

49. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.

50. இதன் பிறகு எந்தச் செய்தியைத்தான் அவர்கள் நம்புவார்கள்?

 

Leave a Reply