அத்தியாயம் : 82
அல் இன்ஃபிதார் – பிளந்துவிடுதல்
மொத்த வசனங்கள் : 19
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. வானம்507 பிளந்து விடும்போது,
2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும்போது,
3. கடல்கள் கொதிக்க வைக்கப்படும்போது,
4. மண்ணறைகள் புரட்டப்படும்போது,
5. ஒருவன் தான் முற்படுத்தியதையும், பிற்படுத்தியதையும் அறிந்து கொள்வான்.
6. மனிதனே! மரியாதைக்குரிய உனது இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது?
7. அவனே உன்னைப் படைத்து, உன்னைச் சீராக்கி, உன்னைச் செம்மைப்படுத்தினான்.
8. அவன் விரும்பிய வடிவத்தில் உன்னை அமைத்தான்.
9. ஆனால் நியாயத் தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதுகிறீர்கள்.
10, 11. உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.26
12. நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.
13. நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.
14. பாவிகள் நரகில் இருப்பார்கள்.
15. தீர்ப்பு நாளில் அதில் அவர்கள் எரிவார்கள்.
16. அதை விட்டும் அவர்கள் மறைந்து விடுவோர் அல்லர்.
17. தீர்ப்பு நாள்1 எதுவென (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?
18. பின்னரும் தீர்ப்பு நாள்1 எதுவென உமக்கு எப்படித் தெரியும்?
19. அந்நாளில் எவரும் எவருக்கும் சிறிதளவும் நன்மை செய்ய முடியாது. அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கே.