அத்தியாயம் : 84 அல் இன்ஷிகாக்

அத்தியாயம் : 84

அல் இன்ஷிகாக் – பிளந்து விடுதல்

மொத்த வசனங்கள் : 25

ந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றிப் பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. வானம்507 பிளந்து விடும்போது,

2. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும்போது,

3. பூமி நீட்டப்படும்போது,

4. தன்னிடம் உள்ளதை வெளிப்படுத்தி அது வெறுமையாகி விடும்போது,

5. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும்போது,

6. மனிதனே! உனது இறைவனை நோக்கிக் கடுமையாக முயற்சிக்கிறாய். எனவே அவனைச் சந்திப்பாய். 488

7, 8. யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார்.26

9. அவர் தனது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியுடன் செல்வார்.

10, 11. முதுகுக்குப் பின்புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான்.26

12. நரகிலும் எரிவான்.

13. அவன் (இவ்வுலகில்) தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருந்தான்.

14. "நான் (இறைவனிடம்) மீளவே மாட்டேன்'' என்று அவன் எண்ணினான்.

15. அவ்வாறில்லை! அவனது இறைவன் அவனைப் பார்ப்பவனாக488 இருந்தான்.

16. அடிவானத்தின் செம்மையின் மீது சத்தியம் செய்கிறேன்.

17, 18. இரவின் மீதும், அது உள்ளடக்கியவற்றின் மீதும், முழுமை பெற்ற நிலவின் மீதும் சத்தியமாக! 379

19. நீங்கள் படிப்படியாக ஏறிச் செல்வீர்கள்.

20. அவர்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க என்ன நேர்ந்தது?

21. அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக் காட்டப்படும்போது ஸஜ்தாச் செய்வதில்லை. 396

22. மாறாக (ஏகஇறைவனை) மறுப்போர் பொய்யெனக் கருதுகின்றனர்.

23. அவர்கள் மறைப்பதை அல்லாஹ் அறிவான்.

24. எனவே அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை எச்சரிப்பீராக!

25. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவில்லாத கூலி உண்டு.

 

Leave a Reply