அல்ஹம்து சூராவுடன் துணை சூரா ஓத வேண்டுமா?
சப்தமில்லாமல் ஓதித் தொழும் லுஹர், அஸர் ஆகிய தொழுகைகளில் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து சூராவுடன் துணை சூராவும் ஓத வேண்டுமா?
பதில் :
இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் அவருக்குப் பின்னால் தொழுபவர்கள் எதையும் ஓதக்கூடாது. மௌனமாக இருந்து அவர் ஓதுவதை செவிதாழ்த்திக் கேட்க வேண்டும்.
லுஹர், அஸர் போன்ற தொழுகைகளில் இமாம் சப்தமிட்டு ஓதும்போது இமாமுக்குப் பின்னால் தொழுபவர்கள் கண்டிப்பாக சூரத்துல் ஃபாத்திஹாவை ஓத வேண்டும். ஏனென்றால் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதாதவருக்கு தொழுகை இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
756حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
திருக்குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது.
அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)
நூல் : புகாரி 756
தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவது மட்டுமே வலியுறுத்தப்பட்டுள்ளது. துணை சூராக்கள் ஓதுவது கட்டாயம் இல்லை; ஆனால் ஆர்வமூட்டப்படுள்ளது.
778حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ بِأُمِّ الْكِتَابِ وَسُورَةٍ مَعَهَا فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَصَلَاةِ الْعَصْرِ وَيُسْمِعُنَا الْآيَةَ أَحْيَانًا وَكَانَ يُطِيلُ فِي الرَّكْعَةِ الْأُولَى رواه البخاري
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களிலும் உம்முல் கிதாப் (குர்ஆனின் அன்னை' எனும் அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தையும், அதனுடன் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கு ஓதுவார்கள். (இரண்டாவது ரக்அத்தை விட) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள்.
நூல் : புகாரி 778
772حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ فِي كُلِّ صَلَاةٍ يُقْرَأُ فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْمَعْنَاكُمْ وَمَا أَخْفَى عَنَّا أَخْفَيْنَا عَنْكُمْ وَإِنْ لَمْ تَزِدْ عَلَى أُمِّ الْقُرْآنِ أَجْزَأَتْ وَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ رواه البخاري
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
எல்லாத் தொழுகைகளிலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதப்பட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக நாம் ஓதுகிறோம். அவர்கள் மெதுவாக ஓதியதை நாமும் மெதுவாக ஓதுகிறோம். குர்ஆனின் அன்னை(யான அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) விட அதிகமாக வேறெதையும் நீ ஓதாவிட்டாலும் போதுமானது. ஆயினும், அதை விட அதிகமாக நீ ஓதுவதே சிறந்ததாகும்.
நூல் : புகாரி 772