இகாமத் சொல்ல மறந்து விட்டால்..?
கடமையான தொழுகையில் இகாமத் சொல்ல மறந்த நிலையில் தக்பீர் கட்டி, தொழுது விட்டோம். இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா?
ஜாஹிர் ஹுசைன், காஞ்சிபுரம்.
கடமையான தொழுகைக்கு பாங்கு, இகாமத் அவசியம் என்பதை வலியுறுத்தி பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. தனியாகத் தொழுதாலும் பாங்கு, இகாமத் சொல்லியே தொழ வேண்டும். ஆனால் அவை தொழுகையின் ஒரு அம்சம் அல்ல! மறந்த நிலையில் இகாமத் சொல்லாமல் தொழுது விட்டால் தொழுகை கூடும்.
سنن الترمذي
3 – حَدَّثَنَا قُتَيْبَةُ، وَهَنَّادٌ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالُوا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ (ح) وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ.
"தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது முதல் தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது ஸலாம் கொடுப்பதாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல்கள் : திர்மிதி 3, இப்னுமாஜா 271, அஹ்மத் 957
இந்த ஹதீஸின் அடிப்படையில் தொழுகை என்பது தக்பீர் தஹ்ரிமாவிலிருந்து ஸலாம் கொடுப்பது வரையில் தான் என்பதை அறிய முடிகின்றது. எனவே இகாமத் சொல்லாமல் தொழுது விட்டாலும் தொழுகை நிறைவேறி விடும். இகாமத் சொல்லாவிட்டால் கடமையான தொழுகைக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டிய ஒரு சுன்னத்தின் நன்மையை இழந்து விடுகின்றோம் என்பது தானே தவிர தொழுகை கூடாது என்று கூற முடியாது.