இந்தியனா? முஸ்லிமா?
நீ இந்தியனா? அல்லது முஸ்லிமா என்று எனது நன்பர் கேட்கிறார் நான் முதலில் முஸ்லிம்; இரண்டாவது இந்தியன் என்று பதில் சொன்னேன். இது சரியா?
செய்யது இப்றாஹீம்.
பதில் : நீ இந்தியனா அல்லது முஸ்லிமா? என உங்கள் நண்பர் உங்களிடம் கேட்டுள்ளார். இக்கேள்வி தவறானதாகும்.
இந்தியன் என்பதும் முஸ்லிம் என்பதும் ஒன்றொக்கொன்று எதிரான அர்த்தம் கொண்ட பெயர்கள் என்று கருதினாலே இவ்வாறு கேள்வி கேட்க முடியும். இந்தியனாக இருப்பவர் முஸ்லிமாக இருக்க முடியாது. முஸ்லிமாக இருப்பவர் இந்தியனாக இருக்க முடியாது என்ற தவறான கருத்து இக்கேள்வியில் அடங்கியிருக்கின்றது.
ஒருவர் இந்தியனாக இருந்துகொண்டு முஸ்லிமாக வாழ முடியும். இந்திய நாட்டில் பிறந்தவர் இந்தியன் என்று சொல்லப்படுவார். இஸ்லாத்தை ஏற்றவர் முஸ்லிம் என்று சொல்லப்படுவார்.
இஸ்லாத்தை ஏற்று அதனடிப்படையில் வாழ்வதற்கு இந்திய நாட்டில் எந்தத் தடையும் இல்லை. நாம் அனைவரும் அவ்வாறே வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இதை விளங்கியிருந்தால் இக்கேள்வியை உங்கள் நண்பர் கேட்டிருக்க மாட்டார்.
உதாரணமாக உங்களைப் பார்த்து நீ மனிதனா? உயிரினமா? என்று கேட்டால் அக்கேள்வி எப்படி அர்த்தமற்றதோ அது போன்றே இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது.
இப்படி ஒருவர் நம்மிடம் கேட்டால் நான் மனிதன் என்ற உயிரினமாக இருக்கின்றேன் என பதிலளிப்போம். அதே போன்று நான் இந்திய நாட்டில் வாழும் முஸ்லிமாக இருக்கின்றேன் என்று உங்கள் நண்பருக்குப் பதிலளியுங்கள்.