இன்சூரன்ஸ் கூடுமா?
இன்ஷ்யூரன்ஸ் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத நவீன பிரச்சனையாகும். சமீப காலத்தில்தான் இது வழக்கத்துக்கு வந்துள்ளது. ஆயினும் இது குறித்து முடிவு எடுக்கத் தேவையான அடிப்படைகள் இஸ்லாத்தில் வகுக்கப்பட்டுள்ளன.
இஸ்லாம் தடுத்துள்ள வட்டி, மோசடி, ஏமாற்றுதல் போன்றவை இருந்தால் அது எந்த நவீன பிரச்சனையாக இருந்தாலும் அது தடுக்கப்பட்டதாகும். அவ்வாறு இல்லாவிட்டால் அது அனுமதிக்கப்பட்டதாகும்.
பொத்தாம் பொதுவாக இன்ஷ்யூரன்ஸ் கூடாது என்று சிலர் மார்க்கத் தீர்ப்பு அளித்து வருகின்றனர். இது தவறாகும்.
இன்ஷ்யூரன்ஸில் பல வகைகள் உள்ளன. அவற்றில் வட்டியை அடிப்படையாகக் கொண்டவையும் உள்ளன. அவை மட்டுமே மார்க்கத்தில் தடுக்கப்பட்டவையாகும். அவ்வாறு இல்லாத இன்ஷ்யூரன்ஸ் வகைகளைத் தடுப்பதற்கு தக்க காரணம் இல்லை.
உதாரணமாக ஆயுள் காப்பீடு என்ற வகையை எடுத்துக் கொள்வோம். ஒருவர் பத்து லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு எடுத்துள்ளார் என்றால் இந்தத் தொகையை குறிப்பிட்ட வருடங்கள் வரை ஆண்டுக்கு இவ்வளவு என்ற விகிதத்தில் அவர் கட்டி வர வேண்டும். முழுமையாகக் கட்டி முடித்து விட்டால் கட்டிய தொகை வட்டியுடன் திருப்பித் தரப்படும். அல்லது இடையிடையே கணக்குப் பார்த்து போனஸ் என்ற பெயரில் வட்டி தருவார்கள்.
பத்து லட்சம் ரூபாய்க்கு காப்பீடு எடுத்தவர் முதல் தவனை கட்டிய உடன் மரணித்து விட்டால் அவரது குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் கிடைத்து விடும்.
காப்பீடு எடுத்தவர் மரணிக்காமல் தொடர்ந்து தவணையைக் கட்டி வரும்போது காப்பீட்டு நிறுவனங்கள் வட்டி தருகிறார்கள். இது மார்க்கத்துக்கு எதிரானதாகும். இதன் காரணமாக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேரக்கூடாது என்று கூறலாம். ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் நாம் செலுத்தும் பணத்துக்கு வட்டி தரப்பட மாட்டாது என்ற வகையில் இத்திட்டம் மாற்றப்பட்டால் இதைத் தடை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொள்வோம்.
இதில் சேர்பவர்கள் வருடத்துக்கு ஒரு தொகையைக் கட்ட வேண்டும். இதில் சேரக்கூடியவர்களின் வயது, ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொருத்து இத்தொகை வேறுபடும். இத்திட்டத்தில் சேர்பவருக்கு பெரிய நோய் வந்து விட்டால் அவர் ஆயிரம் ரூபாய் கட்டி இருந்தாலும் அவரது மருத்துவச் செலவுக்கு காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளும். அந்த ஒரு வருடத்துக்குள் எந்த நோயும் வராவிட்டால் அவர் கட்டிய பணம் திரும்பத்தரப்பட மாட்டாது. கட்டிய பணமே திரும்பக் கிடைக்காது என்றால் வட்டியைக் கற்பனை செய்ய முடியாது.
அதாவது பல்லாயிரம் பேர் ஆயிரம் ரூபாய் கட்டுகிறோம். எங்களுக்கு நோய் வந்தால் அதற்கு மருத்துவம் செய்ய உதவுங்கள். நோய் வராவிட்டால் எங்கள் பணம் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கட்டும் என்ற அடிப்படையில்தான் இதில் சேர்பவர்கள் பணம் செலுத்துகிறார்கள். இதில் வட்டியும் இல்லை. மோசடியும் இல்லை. யாரையும் ஏமாற்றுதலும் இல்லை.
இதுபோல்தான் வாகனத்திற்கான இன்ஷ்யூரன்ஸும் உள்ளது. நாம் ஒரு வாகனத்தை வாங்கினால் அதில் மூன்று விதமான பாதிப்புகள் ஏற்படலாம்.
விபத்துகள் ஏற்படும்போது அந்த வாகனத்துக்குச் சேதம் ஏற்படலாம்.
அல்லது வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்குச் சேதம் ஏற்படலாம்.
அல்லது வாகனத்தினால் மற்றவருக்குச் சேதம் ஏற்படலாம்.
பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கவோ, நமக்குரிய சிகிச்சை செய்து கொள்ளவோ, வாகனத்தைச் சீர்செய்யவோ நமக்கு இயலாமல் போகலாம். இதைக் கருத்தில் கொண்டுதான் வாகனக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வாகனத்துக்காக நாம் செலுத்தும் காப்பீட்டுத் தொகை நமக்குத் திரும்பத் தரப்படாது. ஏதேனும் விபத்து அல்லது வாகனத் திருட்டு போன்றவை நடந்தால் காப்பீட்டு நிறுவனம் அதற்கான செலவை ஏற்றுக் கொள்ளும். மார்க்கத்தின் அடிப்படையில் இதைத் தடை செய்ய ஒரு முகாந்திரமும் இல்லை.
அது போல்தான் வீடுகள், கடைகள் இன்னபிற சொத்துக்களுக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. இந்தக் காப்பீட்டுத் திட்டங்களில் ஆண்டு தோறும் நாம் செலுத்தும் தொகை அந்த ஆண்டுடன் காலாவதியாகி விடும். திரும்பத் தரப்படமாட்டாது. அசலும் தரமாட்டார்கள். வட்டியும் தர மாட்டார்கள். எனவே இவற்றைக் கூடாது எனக் கூற எந்த நியாயமும் முகாந்திரமும் இல்லை.
கலவரங்களின் போது முஸ்லிம்களின் வீடுகளும், கடைகளும், இன்னபிற சொத்துக்களும் சூறையாடப்படுகின்றன. முஸ்லிம்கள் காப்பீடு செய்வதில்லை; எனவே அவர்களின் சொத்துக்களை அழித்தால் அதோடு அவர்கள் பிச்சைக்காரர்களாக ஆவார்கள் என்று எதிரிகள் நன்றாக விளங்கி வைத்துள்ளதால் திட்டமிட்டு முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடுவதை ஒரு கொள்கையாக வைத்துள்ளனர்.
கடைகள் மற்றும் சொத்துக்களுக்கு காப்பீடு செய்தால் இவர்களின் சொத்துக்களை அழித்தாலும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதால் சொத்துக்களைச் சூறையாடுவது கூட தவிர்க்கப்படும். அப்படி சூறையாடினாலும் காப்பீட்டின் மூலம் இழப்பீட்டைப் பெற்று பழைய நிலையை அடைய முடியும்.
இதைக் கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் இயன்றவரை தொழில் நிறுவனங்களைக் காப்பீடு செய்வதுதான் அறிவுடமையாகும்.
23.01.2017. 9:20 AM