இறைவணக்கத்தால் நிம்மதி கிடைக்காவிட்டால்?
தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்கள் செய்தும் மனதில் சில பிரச்னைகளில் ஏற்பட்ட கவலை தீரவில்லை. என்ன செய்வது ?
ஆர். அஹ்மத்
தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்களை மார்க்கம் கற்றுத்தந்தபடி சரியாகச் செய்தால் உள்ளத்தில் உள்ள கவலை நீங்கி நிம்மதி ஏற்படும் என்று குர்ஆன் கூறுகிறது.
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.
இவற்றைச் செய்து நம்முடைய கவலை நீங்கவில்லை எனில் பிரச்சனை நம்மிடத்தில்தான் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இது போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு தங்கள் கவலை நீங்க இஸ்லாம் பல அரிய வழிகளைச் சொல்கின்றது. அதில் ஒன்று விதியின் மீதுள்ள நம்பிக்கை.
நன்மை தீமை எல்லாமே இறைவனின் புறத்திலிருந்து தான் வருகின்றன. இந்தத் துன்பங்களை அளித்தவன் இறைவனே என்று எண்ணி விதியின் மீது நம் பாரத்தை இறக்கி வைக்கும் போது நமது உள்ளத்தில் உள்ள கவலைகள் காணாமல் போய்விடுவதை உணரலாம்.
விதியை ஆழமாக நம்பும்போது நமது கவலை நீங்கி விடும் என இறைவன் தெரிவிக்கின்றான்.
இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
நமக்கு ஏற்படுகின்ற துன்பங்கள், கவலைகள் எதுவாயினும் அதன் மூலம் நமது பாவங்களை இறைவன் மன்னிக்கின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
صحيح البخاري
5640 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ الحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُصِيبَةٍ تُصِيبُ المُسْلِمَ إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا عَنْهُ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا»
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 5640
காலில் முள் குத்துதல் போன்ற சிறிய துன்பம், நோய் நொடி, பிரியமானவர்களின் மரணம், வறுமை, வியாபாரத்தில் நஷ்டம், போன்ற சோகங்கள் அனைத்திற்கும் நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான் என்பதை நினைவில் கொண்டால் கவலைகள் காணமல் போய்விடும்.
மேலும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நபிகள் நாயகத்திற்கு ஏற்பட்ட துன்பங்கள் போன்று நம்மில் யாருக்கும் ஏற்படப்போவதில்லை. ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாலும், அதைப் பிற மக்களுக்கு பிரச்சாரம் செய்ததாலும் மக்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட சொல்லொணா துன்பங்கள், தாம் வாழும் போதே பிள்ளைகளின் மரணம், தம் மீது திணிக்கப்பட்ட போர்கள், எதிரிகளின் சூழ்ச்சிகள் என ஏராளமான துன்பங்களையும், துயரங்களையும் அவர்கள் அடைந்தார்கள்.
இந்தச் சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) மனமுடைந்து ஓரிடத்தில் சோர்ந்து போய் உட்கார்ந்து விடவில்லை. மாறாக இத்தனை துன்பங்களையும் தாங்கி தம்முடைய அன்றாட பணிகளைச் செவ்வனே நிறைவேற்றிவந்தார்கள்.
நமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நபிகள் நாயகத்திற்கு ஏற்பட்ட துன்பங்களோடு ஒப்பிட்டு இதெல்லாம் ஒரு துன்பமா? என்று எண்ணிக் கொண்டால் கவலை மறந்து போகும்.