இறைவன் மேலே இருக்கிறான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?
இறைவன் மேலே இருக்கிறான் என்று சொல்லும் போது நாம் நமக்கு மேலே உள்ள வானத்தை நோக்கி கையைக் காட்டுகிறோம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்தவர் தனக்கு மேலே உள்ள வானத்தைக் காட்டி மேலே என்கிறார். ஆனால் அது நம் நாட்டுக்கு கீழே உள்ளது. அப்படியானால் இதை எப்படிப் புரிந்து கொள்வது?
முஹம்மது சாலே
பதில்
நாம் மேலே என்று காட்டுவது அமெரிக்காவுக்குக் கீழே இருக்கிறது என்பதும், அமெரிக்கா மேலே என்று சொல்வது நமக்குக் கீழே உள்ளது என்பதும் உண்மை தான். ஆனால் சரியாகப் புரிந்து கொண்டால் இதில் குழப்பம் வர வழியில்லை.
அல்லாஹ் அர்ஷில் இருப்பதாக குர்ஆன் கூறுகிறது. அந்த அர்ஷ் வானம் பூமியை உள்ளடக்கி இருப்பதாகவும் குர்ஆன் கூறுகிறது. அதாவது வானத்தின் எல்லா பகுதியிலும் அர்ஷ் சுற்றி வளைத்துள்ளது என்பது இதில் இருந்து தெரிகிறது.
உருண்டையான ஒரு பெரிய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு அ என்று பெயர் வைத்துக் கொள்வோம். அந்தப் பெரிய உருண்டைக்குள் அதை விட சிறிய உருண்டை ஒன்றை வைத்துக் கொள்வோம். இப்போது சிறிய உருண்டையின் மேலே எல்லாப் பக்கமும் சிலர் இருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.
இப்போது சிறிய உருண்டையின் மேலே இருக்கும் ஒவ்வொருவரிடமும் அ எங்கே உள்ளது என்று கேட்டால் அவரவர் தனக்கு மேலே உள்ளதைக் காட்டுவார். ஒவ்வொருவர் காட்டும் திசையும் வெவ்வேறாக இருந்தாலும் அனைவர் கூறுவதும் சரிதான். அனவருக்கும் மேலேயும் அ எனும் பெரிய உருண்டை இருக்கத்தான் செய்கிறது. இதில் யாரும் தவறாகச் சொல்லவில்லை.
அந்தப் பெரிய உருண்டை போல் தான் அர்ஷ் முழு உலகையும் சுற்றியுள்ளது.