உயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா?
முஹம்மத் யாஸீன்
பதில் :
வட்டி வாங்குவதையும், வட்டி கொடுப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
صحيح مسلم
4177 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ قَالُوا حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ.
வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அவர்கள் பாவத்தில் சமமானவர்கள் எனவும் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம்
எனவே வங்கியில் லோன் வாங்கி வட்டி செலுத்துவது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. படிப்பு வகைக்காகவும் இவ்வாறு செய்வது கூடாது. வங்கியிலிருந்து கடன் தொகையை வாங்கிக் கொண்டு வட்டி செலுத்தாமலிருக்க ஏதேனும் வழி இருந்தால் அந்த வழியைக் கடைப்பிடிக்கலாம்.
முஸ்லிம்கள் வட்டிக்கு கடன் வாங்க மாட்டார்கள் என்பதை அறிந்து வைத்திருக்கும் மத்திய மாநில அரசுகள் வட்டி இல்லாத வகையில் கடன் கொடுப்பதே முறையாகும்.
வட்டி இல்லாமல் கடன் கொடுத்தால் வங்கிகள் செயல்பட முடியாது என்று காரணம் சொல்லப்படுகிறது. மேலும் முஸ்லிம்களுக்கு மட்டும் இப்படி சலுகை அளிப்பது மற்றவர்களின் அதிருப்தியைப் பெற்றுத்தரும் எனவும் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சணை எழாமல் முஸ்லிம்களுக்கு வட்டியில்லா கடன் கொடுக்க அரசுக்கு வழி உள்ளது.
வங்கியில் சேமிப்பு வைத்திருக்கும் முஸ்லிம்கள் அதற்கான வட்டியைப் பெறுவதில்லை. முஸ்லிம்களால் வாங்கப்படாத வட்டிப்பணம் பல்லாயிரம் கோடிகள் வங்கிகளில் முடங்கிக் கிடக்கின்றன. அந்தப் பணத்திலிருந்து அரசாங்கம் வட்டியைச் செலுத்திக் கொள்ளலாம்.
இப்படி செலுத்தினால் கடன் வாங்கிய மாணவர்கள் வட்டி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட மாட்டார்கள்.
முஸ்லிம்கள் வாங்காமல் விட்டு வைத்திருக்கும் பணத்தில் இருந்து வங்கிகளுக்கான வட்டியைச் செலுத்துவதால் வங்கிகளும் நட்டமடையாது. முஸ்லிமல்லாத மக்களும் இதை விமர்சிக்க வழி இல்லாமல் போகும்.
அல்லது கல்விக்காக முழுச் செலவையும் மாணியமாகவே கொடுத்து கல்வி கற்க ஊக்குவிப்பது அரசின் கடமை. வியாபாரத்துக்கு கொடுக்கும் கடனுக்கும், படிப்புக்கு கொடுக்கும் கடனுக்கும் வித்தியாசம் உண்டு என்று உணர்ந்து முஸ்லிம் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் வட்டியில்லாமல் கடன் கொடுக்கலாம். அதற்கான வட்டியை அரசாங்கம் சுமந்து கொள்ளலாம்.
இதுதான் கல்விக்குச் செய்யும் சரியான உதவியாகும். இதனால் இதைச் செய்தவர்களுக்கு ஓட்டுக்கள் ஆதாயமாக கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
24.04.2011. 22:39 PM