எல்லாமே விதிப்படிதான் நடக்கிறதா?

எல்லாமே விதிப்படிதான் நடக்கிறதா?

ல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கிறது என்றால் தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படி தானே நடக்கின்றது. ஒருவன் தீமை செய்வதும், நன்மை செய்வதும் அல்லாஹ்வின் விருப்பப்படி தானே நடக்கிறது. அல்லாஹ் விதித்த விதிபடித்தான் எல்லாம் நடக்கிறது என்றால் நாம் சொர்க்கம் செல்வதும், நரகம் செல்வதும் முன்கூட்டியே விதிக்கப்பட்டு விட்டதல்லவா? அப்படியானால் நாம் அமல்கள் செய்வதால் என்ன பயன்? நம் இஷ்டப்படி வாழ்ந்து விடலாமே. விதியைp பற்றி ஒரு அளவிற்கு மேல் சிந்திக்காதீர்கள் என்று ஹதீஸில் படித்திருக்கின்றேன். என்னுடைய இந்தக் குழப்பத்திற்கு தெளிவான பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

இஸ்லாத்தில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கு தெள்ளத்தெளிவான பதில் உண்டு. அது பற்றி கலந்துரையாடவும், விவாதம் செய்வதற்கும் அனுமதி உண்டு.

ஆனால் இதிலிருந்து விதி மட்டும் மாறுபடுகின்றது. நம்முடைய இறை நம்பிக்கைக்கு விதியை அல்லாஹ் சோதனையாக ஆக்கியுள்ளான். விதியை நம்பினால் அதிகமான நன்மைகள் நமக்கு ஏற்படுகின்றன.

நடந்து முடிந்த விஷயங்களுக்கு மட்டுமே விதியின் மீது பழிபோட முடியும். எதிர்காலத்தில் நடக்கவுள்ளவை விதிப்படி நடக்கும் என்று உட்கார்ந்து விடக் கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை.

அதாவது விதியை நம்பக்கூடியவரின் வாழ்க்கையில் பாரதூரமான துன்பம் ஏற்பட்டால் அதைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமை விதியை நம்புவதன் மூலம் அவருக்கு ஏற்படுகிறது. அதே போல் சந்தோஷமான நிகழ்வுகளை அவர் சந்திக்கும்போது ஆணவம் கொள்ளாமல் எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படித்தான் நடந்தது என்று பணிவுடன் நடப்பதற்கும் இந்த விதி காரணமாக உள்ளது.

இதைத்தான் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 57:22

ஒரு கோணத்தில் பார்க்கும்போது விதி இருப்பது போலவும், இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது விதி இல்லாதது போலவும் ஒரு மயக்கம் மனிதனுக்கு ஏற்படும்.

விதி என்று ஒன்று இருந்தால் "நான் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ நடப்பதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? எனது கெட்ட செயலுக்காக எனக்கு ஏன் நரகத்தைத் தரவேண்டும்?" என்பன போன்ற பல கேள்விகள் இதில் எழும்.

விதி என்று ஒன்று இல்லாவிட்டால் "நான் என்ன செய்யப் போகிறேன்'' என்பது இறைவனுக்குத் தெரியாது என்று ஆகி விடும். நாளை நான் என்ன செய்யப் போகிறேன் என்பது தெரியாத ஒருவன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? என்ற கேள்வி வரும்.

விதி இல்லை என்று சொன்னாலும் விபரீதம்!

விதி இருக்கிறது என்று சொன்னாலும் விபரீதம்!

எனவே தான் விதியை நம்ப வேண்டும்; அதே நேரத்தில் விதியின் மீது பழிபோட்டு விடாமல் நம் செயல்பாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும். இதை விளங்கிக் கொள்ளும் அறிவை அல்லாஹ் நமக்குத் தரவில்லை என்று தோல்வியையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

விதியை நம்பும்போது சில சிக்கலான கேள்விகள் எழுவதைப் போன்று விதியை நம்பாவிட்டால் அப்போதும் சிக்கலான கேள்விகள் எழத்தான் செய்கின்றன. எனவே தான் விதி தொடர்பாக சர்ச்சை செய்ய வேண்டாம் என மார்க்கம் வழிகாட்டியுள்ளது.

82 حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ وَهُمْ يَخْتَصِمُونَ فِي الْقَدَرِ فَكَأَنَّمَا يُفْقَأُ فِي وَجْهِهِ حَبُّ الرُّمَّانِ مِنْ الْغَضَبِ فَقَالَ بِهَذَا أُمِرْتُمْ أَوْ لِهَذَا خُلِقْتُمْ تَضْرِبُونَ الْقُرْآنَ بَعْضَهُ بِبَعْضٍ بِهَذَا هَلَكَتْ الْأُمَمُ قَبْلَكُمْ قَالَ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو مَا غَبَطْتُ نَفْسِي بِمَجْلِسٍ تَخَلَّفْتُ فِيهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا غَبَطْتُ نَفْسِي بِذَلِكَ الْمَجْلِسِ وَتَخَلُّفِي عَنْهُ رواه إبن ماجه

நபித்தோழர்கள் விதி தொடர்பாக தர்க்கம் செய்துகொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் வருகை தந்தார்கள். உடனே கோபத்தால் அவர்களின் முகம் மாதுளை முத்துக்களைப் போன்று சிவந்துவிட்டது. இவ்வாறு செய்யுமாறு நீங்கள் உத்தரவிடப்பட்டீர்களா? அல்லது இதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? குர்ஆனில் ஒன்றை மற்றொன்றுடன் மோதவிடுகின்றீர்களே. உங்களுக்கு முன்னால் உள்ள சமுதாயங்கள் விதியில் சர்ச்சை செய்த காரணத்தினால் தான் அழிந்துபோனார்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)

நூல் : இப்னு மாஜா 82

அறிவுப்பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.

நாம் சொர்க்கவாசியா? நரகவாசியா? என்பது நமக்குத் தெரியாது. நான் நரகவாசி என்று எனக்கு உறுதியாகத் தெரிந்தால் இனி நான் நல்லறங்கள் செய்து என்ன புண்ணியம் என்று கேட்பதில் நியாயம் இருக்கின்றது. நமது முடிவு என்னவென்பது நமக்குத் தெரியாமல் இருக்கும் போது நல்லதை நோக்கியே நமது முயற்சி இருக்க வேண்டும்.

உலக விஷயங்களில் இவ்வாறு தான் நாம் நடந்து கொள்கிறோம். அல்லாஹ் நமக்கு விதித்த செல்வம் எப்படியும் நமக்குக் கிடைத்து விடும் என்று கருதிக்கொண்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் நாம் இருக்க மாட்டோம். நம்மால் முடிந்த அளவிற்கு முயற்சிகளை மேற்கொள்வோம்.

நோய் வந்தால் இறைவன் நாட்டப்படி நடக்கட்டும் என்று கூறி மருத்துவம் செய்யாமல் இருப்பதில்லை. நமது முயற்சியையும் மீறி ஏதேனும் நடந்தாலே விதியைக் காரணம் காட்டுவோம். இது போன்றே நல்ல அமல்கள் விஷயத்திலும் நாம் நடந்துகொள்ள வேண்டும்.

அல்லாஹ் நம்மை ரோபோ மிஷின்களைப் போன்று சுயவிருப்பம் வழங்கப்படாத படைப்பாகப் படைக்கவில்லை. மாறாக நல்லவற்றையையும், தீயவற்றையையும் நமக்குக் காட்டித் தந்துள்ளான். இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்கின்ற அதிகாரத்தையும், ஆற்றலையும் இந்த உலகத்தில் நமக்கு வழங்கியிருக்கிறான். அறிவைத் தந்திருக்கின்றான். நமக்கு நேர்வழி காட்டுவதற்கு ஒரு வேதத்தையும் இறைத்தூதரையும் அனுப்பியுள்ளான். எனவே சிந்தித்து நல்லவற்றைச் செய்து தீயவற்றை விட்டும் விலகி இருப்பது தான் அறிவுடமை. அப்போது தான் வெற்றி கிடைக்கும். விதியை நம்பச் சொன்ன அல்லாஹ் தான் நல்லறங்களை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறான்.

தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறைவணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 18 : 110

அதே நேரத்தில் விதியைப் பற்றி மற்ற மதங்களில் உள்ள நம்பிக்கையைப் போல் இஸ்லாத்தில் விதியைப் பற்றிய நம்பிக்கை அமையவில்லை. "எல்லாமே விதிப்படி நடக்கும். எனவே உழைக்காதே! நோய் வந்தால் மருத்துவம் செய்யாதே!'' என்று சில மதங்களில் கூறப்படுவது போல் இஸ்லாம் கூறவில்லை.

மாறாக எது நடந்து முடிந்து விட்டதோ அந்த விஷயங்களில் மட்டுமே விதியின் மேல் பாரத்தைப் போடுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது. எது நடக்கவில்லையோ அந்த விஷயங்களில் விதி என்று ஒன்று இல்லாவிட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்குமாறு வழிகாட்டுகிறது; உழைக்கச் சொல்கிறது; பாடுபடச் சொல்கிறது.

எனவே இஸ்லாம் கூறுவது போல் விதியை நம்புவதால் மனிதனின் முன்னேற்றத்துக்குக் கடுகளவும் அது தடையாக இராது.

அதே நேரத்தில் விதியை நம்புவதால் மனித குலத்துக்குக் கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால் அதற்காகவாவது விதியை நம்புவதுதான் மனித குலத்துக்கு உகந்ததாகும்.

ஒரு மனிதன் தனது முழுச் சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கைகூடவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

விதியை நம்புகின்றவன் "நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா?'' எனக் கருதி சீக்கிரத்தில் இயல்பு நிலைக்கு வந்து விடுவான்.

விதியை நம்பாதவன் இதை எப்படி எடுத்துக் கொள்வான்?

இவ்வளவு பாடுபட்டும் கைகூடவில்லையே என்று புலம்பியே அவன் மனநோயாளியாவான். அந்த அளவுக்குப் போகாவிட்டாலும் அவன் இயல்பு நிலைக்கு வருவது மிகவும் தாமதமாகும்.

கேரளாவில் தற்கொலை செய்பவர்கள் பற்றிய ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ஆண், பெண் என்ற பாலின அடிப்படையிலும், மதங்களின் அடிப்படையிலும், ஜாதி அடிப்படையிலும், படித்தவன் படிக்காதவன் என்ற அடிப்படையிலும் தற்கொலை செய்வோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் முஸ்லிம்கள் மட்டுமே மிகக் குறைந்த விகிதத்தில் இருந்தனர்.

இதற்கான காரணத்தை அந்த ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தபோது, எந்தத் துன்பம் ஏற்பட்டாலும், "இறைவனின் நாட்டம்" என்று கூறி சாதாரணமாக முஸ்லிம்கள் எடுத்துக் கொள்வதால் தற்கொலைக்கு அவர்கள் தூண்டப்படுவதில்லை என்று கண்டறிந்தனர்.

விதியை நம்புவதால் இந்த இரண்டு நன்மைகள் ஏற்படுகின்றன என்று மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்தில் (57:23) அல்லாஹ் கூறுகிறான்.

நமக்கு செல்வங்களையும், வசதிகளையும், வாய்ப்புகளையும் அல்லாஹ் தாராளமாக வழங்கினால் நம்மிடம் ஆணவமும், கர்வமும் குடியேறும்.

விதியை நம்புவதன் மூலம் இந்த மனநோயிலிருந்து விடுபடலாம்.

"இந்தச் செல்வங்கள் அல்லாஹ்வின் விதிப்படி தான் நமக்குக் கிடைத்துள்ளனவே தவிர நம்மால் அல்ல'' என்று நினைத்தால் ஆணவம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

அதுபோல் தாங்க முடியாத துன்பம் நமக்கு ஏற்பட்டால் நாம் இடிந்து போய் விடுவோம். பல நாட்கள், பல மாதங்கள் எதிலும் ஈடுபாடு காட்டாமல் விரக்தியடைந்து விடுவோம்.

இந்த மனநோயையும் விதியின் மீதுள்ள நம்பிக்கை நீக்கும்.

"நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் நாட்டம் அவ்வளவு தான்'' என்று நினைத்தால் மிக விரைவாக ஒருவன் இயல்பு நிலையை அடைவான்.

இவ்விரு நன்மைகளும் விதியை நம்புவதால் மனித குலத்துக்கு ஏற்படுவதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

நடந்து விட்ட விஷயத்திற்குத்தான் விதியை நினைக்க வேண்டும்; நடக்காத விஷயங்களில் எது விதி என்று நமக்குத் தெரியாத காரணத்தால், விதி என்று ஒன்று இல்லாதது போல் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் கூட விதியைப் பற்றி பேசும்போது முரண்பட்ட நிலைபாட்டை எடுக்கும் வகையில்தான் அமைந்துள்ளன.

மனிதனின் பெரும்பாலான செயல்களுக்கு அவனிடம் உள்ள செல்களும், மரபணுக்களும் தான் காரணம் என்று இப்போது ஆய்வு செய்து சொல்கிறார்கள். அந்த அணுக்கள் காரணமாகவே மனிதர்களின் நடத்தைகளும், குணநலன்களும் மாறுபட்டதாக உள்ளன என்றும் கூறுகின்றனர்.

அதாவது ஒருவனிடம் திருட்டுப் புத்தி உள்ளது என்றால் அதற்கேற்ற வகையில் அவனது செல்கள் அமைந்துள்ளன என்கிறார்கள்.

அவனது கெட்ட செயலுக்கு அவனிடம் உள்ள செல்கள்தான் காரணம் என்றால் அவனது குற்றங்களுக்காக அவனைத் தண்டிப்பது நியாயமில்லை என்று கூற வேண்டுமல்லவா?

ஆனால் அவ்வாறு கூறாமல் திருடனைத் தண்டிக்க வேண்டும் என்பதையும் நியாயப்படுத்துகிறார்கள்.

அதாவது விதி விஷயத்தில் இதுவரை இவர்கள் கேட்டுவந்த கேள்விக்கு இவர்களே இலக்காகி விடுகிறார்கள். இதில் இருந்து விதி என்பது மனித அறிவின் மூலம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று என்பதும், விதி என ஒன்று உள்ளது என்பதும் உறுதியாகிறது.

Leave a Reply