ஏன் தத்து எடுக்கக் கூடாது?
கேள்வி : ஒரு இந்து மத நண்பர் என்னிடம் இஸ்லாத்தில் தத்து எடுத்தல் கூடாது என்று உள்ளது பெரிய குறையாக உள்ளது. குழந்தையே இல்லாது தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்று விரும்புவோர் என்ன செய்வது? விபத்து, பெற்றோரின் நடத்தை சரியில்லாமல் பிரியும் குழந்தைகளுக்கு நாம் ஒரு வழிகாட்டியாக திகழலாம். இது கூடாது என்பதினால் இதை விட மோசமான டெஸ்ட் டியூப் பேபி' என்ற முறையைத் தேர்ந்தெடுகிறார்கள் என்று கேட்டதற்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை. விளக்கம் தரவும்.
எம்.எஸ். முஹம்மது ஹபீபுல்லாஹ், சீர்காழி.
பதில் : குழந்தை இல்லாதவர்கள் மற்றவர்களின் குழந்தைகளை எடுத்து வளர்ப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை. இவ்வாறு எடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கான சட்ட உரிமைகளைப் பெற மாட்டார்கள் என்று தான் இஸ்லாம் கூறுகிறது.
ஒருவர் குழந்தை இல்லை என்பதற்காக ஆண் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். பின்னர் அவருக்கு அல்லாஹ் ஒரு பெண் குழந்தையைக் கொடுக்கிறான். அந்தப் பெண் குழந்தை பருவமடைந்ததும் அவர் வளர்த்த ஆணுக்கு தனது மகளை மணமுடித்துக் கொடுக்கலாம். ஏனெனில் அந்த ஆண் இவரது மகனில்லை. எனவே இவரது மகளுக்கும் அவன் சகோதரனாக மாட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது.
இது போல் வளர்த்தவர் மரணித்து விட்டால் அவரது சொத்துக்களுக்கு பெற்ற மகன் வாரிசாவது போல் வளர்க்கப்பட்டவன் வாரிசாக முடியாது. ஏனெனில் இவன் அவரது மகன் இல்லை. உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் போன்ற பல உறவினர்கள் இருக்கும் போது யாரோ ஒருவனை வாரிசெனக் கூறுவது அந்த உறவினர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். உறவினர்களைப் பகைக்கும் நிலைமை ஏற்படும்.
வளர்க்கப்பட்டவனுக்கு ஏதேனும் கொடுக்க விரும்பினால் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமல் மரண சாசனம் எழுதலாம்.
ஒருவனை நாம் எடுத்து வளர்க்கிறோம். நம் வீட்டில் நமது உடன் பிறந்த சகோதரிகள் உள்ளனர். இவர்களுக்கும் வளர்க்கப்பட்டவனுக்கும் எந்த விதமான உறவும் கிடையாது. எனவே அன்னிய ஆண்களுடன் நடந்து கொள்ள வேண்டிய வகையில் தான் அவனுடன் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
இரத்தம் சம்பந்தம் இல்லாததால் தந்தையின் சகோதரிகள் என்று அவர்களை அவன் கருத மாட்டான். இதனால் விபரீதங்கள் ஏற்படலாம்.
வளர்க்கப்பட்டவனிடம் 'நீ என் மகன் தான்' என்று கூறி ஏமாற்றுவதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஒவ்வொருவரையும் அவரது தந்தையின் பெயரிலேயே அழைக்க வேண்டும்.
எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர் வழி காட்டுகிறான். அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
'நீ இன்னாரின் மகன் தான்; எனக்குக் குழந்தையில்லாததால் உன்னை எடுத்து வளர்க்கிறேன்' என்று தான் அவனிடம் கூற வேண்டும். உலகத்துக்கும் இப்படித்தான் கூற வேண்டும். இன்னொருவருக்குப் பிறந்தவனை தனக்குப் பிறந்தவன் எனச் சொந்தம் கொண்டாடுவதை இஸ்லாம் தடுக்கிறது.
குழந்தைகளை எடுத்து வளர்ப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை.
(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)