கஅபாவின் கல்லைத் தொட்டு முத்தமிடுவது ஏன்?
கேள்வி : மக்காவின் கஅபாவில் உள்ள ஹஜருல் அஸ்வத் கல்லைத் தொட்டு முத்தமிடுகிறீர்கள்! இது சொர்க்கத்திலிருந்து வந்த கல் என்று கூறுகிறீர்கள். இந்து சகோதரர்களும் லிங்கம் என்னும் கல் சொர்க்கத்திலிருந்து வந்தது எனக் கூறுகிறார்கள் என்று ஒரு முறை சவூதி – ரியாத்தில் நடந்த கலந்துரையாடலில் ஒரு மாற்று மத சகோதரர் கேட்டார். விளக்கம் தேவை.
செய்யது முஹைதீன், வேலூர்.
பதில் : மக்காவில் உள்ள ஆலயமாகிய கஅபாவின் சுவரில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜருல் அஸ்வத் என்னும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் வணங்குவதில்லை. வணங்குமாறு இஸ்லாம் கூறவுமில்லை.
ஆனால் இந்து சகோதரர்கள் லிங்கத்தை வணங்குகின்றனர்.
இது தான் முக்கியமான வித்தியாசம்.
ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும்.
துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும்.
அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும்.
நமது பிரார்த்தனை அதற்கு விளங்கும்; விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.
கற்சிலைகளையோ, லிங்கத்தையோ, இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர். ஹஜ்ருல் அஸ்வத் பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா? நிச்சயமாக இல்லை.
அந்தக் கருப்புக் கல் நாம் பேசுவதைக் கேட்கும்; நமது பிரார்த்தனையை நிறைவேற்றும்; அதற்குரிய மரியாதையைச் செய்யத் தவறினால் அந்தக் கல் நம்மைத் தண்டிக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.
அது தெய்வீக அம்சம் எதுவுமில்லாத கல் என்பதை இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது.
صحيح البخاري
1597 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ، عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهُ جَاءَ إِلَى الحَجَرِ الأَسْوَدِ فَقَبَّلَهُ، فَقَالَ: «إِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ، لاَ تَضُرُّ وَلاَ تَنْفَعُ، وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ»
இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஆட்சியாளரும், நபிகள் நாயகத்தின் உற்ற தோழருமான உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி 'நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திரா விட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்'என்று கூறினார்கள்.
நூல் : புகாரி: 1597, 1605
அந்தக் கல் மீது தெய்வீக நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) ஊட்டியிருந்தால் அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.
இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது என்று மிகத் தெளிவாக திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி விட்ட பின், தமது மூதாதையர்களான இப்ராஹீம் (ஆப்ரஹாம்) இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் சிலைகள் உட்பட அத்தனை சிலைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடைத்தெறிந்த பின் சாதாரணக் கல்லுக்கு தெய்வீக அம்சம் உண்டென்று எப்படி கூறியிருக்க முடியும்?
ஹஜருல் அஸ்வத் என்னும் கல்லுக்கு எந்தவிதமான ஆற்றலோ, கடவுள் தன்மையோ இல்லையென்றால் பிறகு ஏன் அதைத் தொட்டு முத்தமிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டால் அது நியாயமான கேள்வியே.
அக்கல்லுக்கு கடவுள் தன்மை உள்ளது என்பது இஸ்லாத்தின் கொள்கை கிடையாது என்றாலும் அக்கல்லுக்கு வேறொரு சிறப்பு இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. அதன் காரணமாகவே அக்கல்லை முஸ்லிம்கள் முத்தமிடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.
இஸ்லாமிய நம்பிக்கையின் படி இவ்வுலகம் அழிக்கப்பட்ட பின் கடவுள் விசாரணை நடத்தி நல்லவர்களைச் சொர்க்கத்திலும், கெட்டவர்களை நரகத்திலும் தள்ளுவார். அந்தச் சொர்க்கத்தை அடைவது தான் முஸ்லிம்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனை.
ஹஜருல் அஸ்வத் என்னும் கல் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
سنن النسائي
2935 أخبرني إبراهيم بن يعقوب قال حدثنا موسى بن داود عن حماد بن سلمة عن عطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم قال الحجر الأسود من الجنة.
ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்கள்: நஸாயீ, அஹ்மத்
முஸ்லிம்கள் அதை சொர்க்கத்தில் இருந்து வந்த பொருள் என்று நம்புகிறார்கள். அதற்கு கடவுள் தன்மை இருப்பதாக நம்பவில்லை.
மனிதர்கள் எந்த சொர்க்கத்தை அடைவதை இறுதி இலக்காகக் கொள்ள வேண்டுமோ அந்த சொர்க்கத்தின் பொருள் ஒன்று இவ்வுலகில் காணக் கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும், தொடுவதற்கும் ஆவல் பிறக்கும்.
இக்கல்லைத் தவிர சொர்க்கத்துப் பொருள் எதுவும் இவ்வுலகில் கிடையாது. இவ்வுலகிலேயே காணக் கிடைக்கும் ஒரே சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் தான் முஸ்லிம்களை அதைத் தொட்டு முத்தமிடுகின்றனர். கடவுள் தன்மை அதற்கு உண்டு என்பதற்காக இல்லை.
இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கிற ஒரு நிகழ்ச்சியை முன்னுதாரணமாகக் கூறலாம்.
ஆம்ஸ்ட்ராங்' தலைமையில் சென்ற குழுவினர் சந்திரனிலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தனர். அது சாதாரண மண் தான் என்றாலும் அயல் கிரகத்திலிருந்து அது கொண்டு வரப்பட்டதால் பல நாடுகளுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும் கூட அம்மண் வந்து சேர்ந்தது.
அது மண் என்று தெரிந்தும் அதைப் போய் பார்த்தவர்கள், தொட்டு முகர்ந்தவர்கள் அனேகம் பேர். இவ்வாறு செய்ததால் அம்மண்ணை அவர்கள் வணங்கினார்கள் என்று கருத முடியாது.
அது போலவே தான் அந்தக் கல் சொர்க்கத்திருந்து வந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதை முஸ்லிம் கள் தொட்டுப் பார்க்கின்றனர். இதைத் தவிர எந்த விதமான நம்பிக்கையும் முஸ்லிம்களின் உள்ளத்தில் இல்லை.
மேலும் ஹஜ்ஜுப் பயணம் செல்பவர்கள் அந்தக் கல்லைத் தொட வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. அதைத் தொடாமலே ஹஜ் நிறைவேறி விடும்.
எந்த முஸ்லிமாவது அந்தக் கருப்புக்கல்லிடம் பிரார்த்தனை செய்தால் அது நன்மை, தீமை செய்ய சக்தி பெற்றது என்று கருதினால், நமது பிரார்த்தனையை அது செவியுறும், நமது வருகையை அறிந்து கொள்ளும் என்று நம்பினால் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறி விடுவான்.
ஆனால் லிங்கம் கடவுளின் அம்சம் என்பது இந்து சகோதரர்களின் நம்பிக்கை. அது அவர்களால் வழிபாடு செய்யப்படுகிறது. அதற்கு அபிஷேகமும் நடத்தப்படுகிறது. எனவே கறுப்புக் கல்லை முத்தமிடுவதும், லிங்கத்தைக் கடவுளாகக் கருதி வழிபாடு நடத்துவதும் ஒன்றாக முடியாது.
மேலும், லிங்கம் சொர்க்கத்திலிருந்து வந்ததாக இந்துக்கள் நம்புவதாக நமக்குத் தெரியவில்லை. அப்படி நம்பினால் உலகம் முழுவதற்கும் ஒரே இடத்தில் ஒரே ஒரு லிங்கம் தான் இருக்க வேண்டும். ஆனால் ஊர்கள் தோறும் லிங்கங்கள் உள்ளன. எனவே, அந்த இந்து சகோதரர் தவறான தகவலைக் கூறுகிறார். ஹஜருல் அஸ்வத் சொர்க்கத்தின் பொருள் என்று முஸ்லிம்கள் நம்புவதால் ஊர்கள் தோறும் ஹஜருல் அஸ்வத் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)