கப்ரை முத்தமிடலாமா?
பெரும்பாலும் இணைவைப்புக் காரியங்கள் இறந்தவர்களின் பெயராலே அரங்கேற்றப்படுவதால் இவ்விஷயத்தில் இஸ்லாம் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது.
கப்றுக்கு மேல் கட்டிடம் எழுப்பக்கூடாது. கப்றை பூசக்கூடாது. கப்றை உயரமாக்குவது கூடாது. புனிதம் கருதி கப்றுக்கு அருகில் அமரக்கூடாது. கப்றை நோக்கித் தொழக்கூடாது என்றெல்லாம் இஸ்லாம் தடை விதித்துள்ளது.
இஸ்லாம் கூறும் இந்த விதிமுறைகளை அனைவரும் சரியாக்க் கடைபிடித்தால் எந்தக் கப்றும் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. சில நாட்களிலேயே கப்று இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இறந்தவர்களின் மண்ணறை இந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இஸ்லாம் மேற்கண்ட தடைகளை ஏற்படுத்தியுள்ளது.
கப்றை முத்தமிடுவதும் இஸ்லாம் தடைசெய்த செயலாகும். இறந்தவர் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால் அந்த மண்ணுக்கு சக்தி இருப்பதாகவும் அது மகத்துவம் அடைந்திருப்பதாகவும் நம்புகிறார்கள். இதன் காரணத்தாலே இறந்தவர்களின் கப்றை முத்தமிடுகிறார்கள்.
எந்த ஒரு பொருளையும் அதில் உள்ள தன்மைகளைத் தாண்டி மறைமுகமான ஆற்றல் அதில் இருப்பதாக நம்புவது மூடநம்பிக்கையாகும்.
இணை வைப்பாளர்கள் தாத்துல் அன்வாத் என்ற மரத்தில் தங்கள் வாட்களைத் தொங்கவிட்டு அங்கே தங்குவார்கள். இவ்வாறு செய்வதால் போரில் வெற்றி கிடைக்கும் என்று நம்பினார்கள்.
இது போன்று ஒரு மரத்திற்கோ, ஒரு கல்லிற்கோ அல்லாஹ்வால் படைக்கப்பட்ட சக்தியில்லாத எந்தப் பொருளுக்கோ ஆற்றல் உண்டு என்று நாம் நம்பிவிடக் கூடாது என்று நபியவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைன் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். இணை வைப்பாளர்களுக்கு ஒரு மரம் இருந்தது. (புனிதம் கருதி) அங்கே அவர்கள் தங்குவார்கள். அதில் தங்களது ஆயுதங்களைத் தொங்க விடுவார்கள். அதற்கு தாதுல் அன்வாத் என்று சொல்லப்படும். நாங்கள் பசுமையான பிரம்மாண்டமான ஒரு மரத்தைக் கடந்து சென்ற போது அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கும் ஒரு தாதுல் அன்வாத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!'' (7 : 138) என்று மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தினர்கள் கேட்டதைப் போன்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக இவையெல்லாம் (நரகத்திற்கு அழைத்துச் செல்லும்) வழிகள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் வழியை ஒவ்வொன்றாக நீங்கள் கடைப்பிடிப்பீர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ வாகித் (ரலி)
நூல் : அஹ்மத் (20892)
கப்றை சாதாரண மண்ணாகப் பார்ப்பவர்கள் அதை முத்தமிடமாட்டார்கள். அதில் மறைமுகமான புனிதம் இருப்பதாக நம்பும் மூடர்களே அதை முத்தமிடுவார்கள். இதை மேற்கண்ட ஹதீஸ் கண்டிக்கின்றது.
இஸ்லாத்தில் ஹஜருல் அஸ்வத் கல்லைத் தவிர வேறு எந்த கல்லையும் மண்ணையும் முத்தமிடுவதற்கு அனுமதியில்லை. ஹஜருல் அஸ்வதைக் கூட அந்தக் கல்லில் சக்தி உள்ளது என்ற நம்பிக்கையில் முத்தமிடக்கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களை இப்படித்தான் உருவாக்கி இருந்தார்கள்.
1597حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ جَاءَ إِلَى الْحَجَرِ الْأَسْوَدِ فَقَبَّلَهُ فَقَالَ إِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لَا تَضُرُّ وَلَا تَنْفَعُ وَلَوْلَا أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ رواه البخاري
ஆபிஸ் பின் ரபீஆ கூறுகிறார் :
உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, "நீ தீங்கோ, நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்மை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார்கள்.
புகாரி (1596)