காட்டுவாசிகளின் நிலை என்ன?
கேள்வி: இஸ்லாத்தை ஏற்காதவர்களுக்கு நரகம் எனக் கூறுகிறீர்கள். அப்படியானால் இஸ்லாமிய போதனைகள் சென்றடையாத காட்டுவாசிகள் போன்றோரின் நிலை என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கின்றனர்.
எஸ். சீனி சலாபுதீன், எம். ராஜா முஹம்மது, எம். சாஹுல் ஹமீது, டி. சீனிநைனா,
எஸ். சித்தீக், பி. அப்துல் ரஹ்மான் ஷாஹிது கூல்பார், பெரிய கடை வீதி, மண்டபம்
பதில் :
மூஸா நபியவர்கள் ஃபிர்அவ்னிடம் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த போது நீங்கள் எந்த கேள்வியைக் கேட்கிறீர்களோ அந்தக் கேள்வியைத் தான் அவன் மூஸா நபியிடம் கேட்டான்.
'முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?' என்று அவன் கேட்டான். 'அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்' என்று அவர் கூறினார்.
இப்போது தான் நீர் ஒரே ஒரு கடவுளைப் பற்றிப் பேசுகிறீர். உமது பிரச்சாரம் சென்றடையாத மக்களைப் பற்றி என்ன தீர்ப்பு சொல்லப் போகிறீர்? என்பது இக்கேள்வியின் கருத்து.
அது பற்றிய ஞானம் என் இறைவனுக்குத் தான் உள்ளது; என் இறைவன் தவறான முடிவு எடுக்க மாட்டான்; எதையும் மறக்கவும் மாட்டான் என்று மூஸா நபியவர்கள் விடையளித்தார்கள்.
அவர்கள் நரகவாசிகள் என்றோ, சுவர்க்கவாசிகள் என்றோ கூறாமல் அதன் முடிவை இறைவனிடம் விட்டு விட்டார்கள். நீதி செலுத்துவதை அதிகம் விரும்புகிற இறைவன் எந்த அநீதியான தீர்ப்பும் வழங்க மாட்டான். நியாயமான தீர்ப்பே வழங்குவான்.
யார் யார் சொர்க்கம் செல்வார்கள்? நரகம் செல்வார்கள்? என்று முடிவு செய்வது நமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது.
எனவே, எந்தப் பிரச்சாரமும் சென்றடையாத மக்கள் விஷயமாக உங்களை விட அதிகம் நியாயம் வழங்கும் இறைவன் சரியான தீர்ப்பை வழங்குவான் என்ற பதிலோடு நிறுத்திக் கொள்வது தான் நமக்குள்ள உரிமையாகும்.
(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)