காயம்பட்டவர்கள் எப்படி உளூ செய்வது? குளிப்பது?
காலில் அடிபட்டவருக்கு குளிப்பு கடமையானால் அவர் தண்ணீரைக் கொண்டு உளூ செய்யலாம். ஆனால் காலில் மட்டும் தண்ணீர் பட முடியாது. இப்பொழுது உளூ செய்வது எப்படி? காலுக்கு மட்டும் மஸஹ் செய்யலாமா? அப்படி செய்தால் உளூ கூடுமா?
நிஜாமுத்தீன்.
உளூச் செய்ய இயலாவிட்டால் எப்படி தயம்மும் செய்தால் போதுமோ அதுபோல் குளிப்பு கடமையாக இருக்கும் போது தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீரைப் பயன்படுத்த முடியாவிட்டால் அவர் உளூச் செய்யவோ, குளிக்கவோ வேண்டிய அவசியமில்லை. தயம்மும் செய்தாலே போதுமானது.
அதாவது இரு உள்ளங்கைகளாலும் மண்ணைத் தொட்டு முகத்திலும், இரு கைகளிலும் தடவிக் கொண்டு தொழலாம். இவ்வாறு தடவிக் கொள்வது கடமையான குளிப்பை நீக்கிவிடும்.
இதற்கு பின்வரும் நபிமொழி ஆதாரமாக உள்ளது.
سنن أبي داود
334 – حدَّثنا ابنُ المُثنَّى، حدَّثنا وَهبُ بنُ جرير، حدَّثنا أبي، قال: سمعت يحيى بن أيوب يُحدِّثُ، عن يزيد بن أبي حبيب، عن عِمران بن أبي أنس، عن عبد الرحمن بن جُبَير عن عمرو بن العاص، قال: احتَلَمتُ في ليلةٍ باردةٍ في غَزوةِ ذاتِ السَّلاسِلِ فأشفَقتُ أنْ اغتَسِلَ فَأهلِكَ، فتَيَمَّمتُ، ثمَّ صَلَّيتُ بأصحابي الصُّبحَ، فذكروا ذلك للنبيِّ – صلى الله عليه وسلم -, فقال: "يا عَمرو، صَلَّيتَ بأصحابِكَ وأنت جُنُبٌ؟ " فأخبَرتُه بالذي مَنَعَني مِنَ الاغتِسالِ، وقلتُ: إني سمعتُ اللهُ يقولُ: {وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّة كَانَ بِكُمْ رَحِيمًا} [النساء: 29]، فضَحِكَ رسولُ الله – صلى الله عليه وسلم -ولم يَقُل شيئاً (3).
தாதுஸ்ஸலாஸில் எனும் இடத்தில் நடந்த போரில் குளிராக இருந்த ஒரு இரவில் எனக்குத் தூக்கத்தில் விந்து வெளியானது. நான் குளித்தால் நாசமாகி விடுவேன் என்று அஞ்சினேன். எனவே தயம்மும் செய்து என் சகாக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தேன். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (பின்னர்) தெரிவித்தேன். ''அம்ரே! உமக்குக் குளிப்பு கடமையாக இருந்த போது உமது சகாக்களுக்குத் தொழுவித்தீரா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். குளிப்பதற்குத் தடையாக இருந்த காரணத்தை அவர்களிடம் கூறினேன். ''உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் உள்ளவனாக இருக்கிறான்'' என்று அல்லாஹ் கூறுவதை நான் செவியுற்றுள்ளேன் என்று விளக்கினேன். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். வேறு எதையும் கூறவில்லை.
அறிவிப்பவர் : அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)
நூல்கள் : அபூதாவூத் (283), அஹ்மத் (17144)
உளூச் செய்யும் போது அல்லது குளிக்கும் போது காலில் தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் ஏனைய உறுப்புகளைக் கழுவிக் கொண்டு காலில் மட்டும் மஸஹ் செய்து கொள்ளலாம்.
காலுறை அணிந்த நிலையில் அதைக் கழற்றுவது சிரமம் என்ற காரணத்தினால் அதன் மேல் மஸஹ் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.
அது போன்று காலில் அடிபட்டு தண்ணீர் பயன்படுத்துவது சிரமம் அளிக்கும் என்ற காரணத்தினால் காலின் மேல் மாத்திரம் மஸஹ் செய்து கொள்ளலாம்.