குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் எத்தனை?
குர்ஆனுக்கு எத்தனை ஹதீஸ்கள் முரண்படுகின்றன?
முஹம்மது இஹ்சாஸ்
பதில் :
உங்கள் கேள்விக்கான பதிலை அறிவதற்கு முன் குர்ஆனுக்கு ஹதீஸ்கள் முரண்படுமா என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
திருக்குர்ஆன் எவ்வாறு இஸ்லாத்தின் மூல ஆதாரமாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரமும் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் தான் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஹதீஸ்களின் துணையின்றி மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் ஒரு அடிப்படையான விஷயத்தை நாம் மறந்து விடக் கூடாது.
நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல. குர்ஆனைப் பொறுத்த வரை அனைத்து நபித்தோழர்களும் அது இறைவேதம் என்பதற்குச் சாட்சிகளாக உள்ளனர்.
குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி 'இது என் இறைவனிடமிருந்து வந்தது' என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழர்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர்.
ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார். ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும் ஓரிருவர் சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது. எவ்வளவு தான் நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.
குர்ஆனின் எந்த வசனம் குறித்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லியிருப்பார்களா என்று கடுகளவு கூட சந்தேகத்துக்கு இடமில்லை. ஹதீஸ்களைப் பொறுத்த வரை இந்த நிலை கிடையாது.
ஆனாலும் நபித்தோழர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். நம்பகமான அறிவிப்பாளர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் குர்ஆனுடன் மோதாதவரை சந்தேகம் ஏற்பட முகாந்திரம் இல்லை.
குர்ஆனுடன் மோதும் போது 'இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது' என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிப்பது தான் முறையாகும்.
'ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது' என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடாமல் குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பது தான் நேர்மையான பார்வையாகும்.
இத்தகைய ஹதீஸ்கள் புகாரி, மற்றும் முஸ்லிமில் இடம் பெற்றிருந்தாலும் சரி தான்.
இவ்வாறு குர்ஆனிற்கு முரண்படும் ஹதீஸ்கள் மற்ற பலவீனமான ஹதீஸ்களோடு ஒப்பிடும் போது மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கும்.
அதே நேரத்தில் இத்தனை தான் என்று வரையறுத்துக் கூற முடியாது. நம்முடைய ஆய்விற்கு வராத சில செய்திகளும் கூட குர்ஆனுக்கு முரண்படும் வகையில் அமைந்திருக்கலாம்.
அறிவிப்பாளர்களின் மீதுள்ள குறைகள் நமக்குத் தெரியாத காரணத்தினால் முன்பு ஆதாரப்பூர்வமானவை என்று கூறிய சில ஹதீஸ்களை பின்பு பலவீனம் என்று கூறியிருக்கின்றோம்.
நாம் முன்னர் ஆதாரப்பூர்வமானது என்று கூறிய ஹதீஸ்களை பலவீனம் என்று அதற்குரிய சான்றுகளோடு குறிப்பிடும் போது எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றோமோ அது போன்று முறையான சான்றுகளுடன் ஒரு செய்தி குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறப்படுமென்றால் அதை ஆய்வு செய்து ஏற்றுக் கொள்வது தான் அறிவுடைமை ஆகும்.
அறிவிப்பாளர் சரியில்லாத ஹதீஸ்கள் பலவீனமானவை என்பதை நாமும், மற்ற அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம். அப்படியானால் அந்த ஹதீஸ்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதன் பட்டியலைத் தாருங்கள் எனக் கேட்டால் அது சரியாக இருக்குமா?
இது போல் தான் இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது.
பலவீனமான ஹதீஸ்களின் எண்ணிக்கையைக் கூறமுடியுமா? என்று நாம் அவர்களிடம் கேட்டால் அவர்கள் நமக்கு என்ன பதில் கூறுவார்களோ அதே பதிலைத்தான் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களின் எண்ணிக்கையைக் கேட்பவர்களுக்கும் நாம் கூறுகின்றோம்.
இப்போது நாம் இதுவரை நாம் ஆய்வு செய்து அறிந்து வைத்துள்ள பட்டியலைக் கொடுத்தாலும் அது முடிந்த முடிவாக இருக்கப் போவதில்லை. மேலும் சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதாக நமக்குச் சுட்டிக்காட்டப்பட்டு அது சரியாக இருந்தால் அதுவும் பட்டியலில் சேர்ந்து கொண்டே இருக்கும்.