குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டதா?
குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டதா?
எம்.ஏ.எம்.ஃபாரிஸ்
ஹதீஸ்களும் நிச்சயம் பாதுகாக்கப்பட்டுள்ளன. எந்த மனிதரின் போதனைகளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை அளவுக்குப் பாதுகாக்கப்படவில்லை. அந்த ஒரு மனிதரின் போதனைகளைப் பாதுகாப்பதற்காக ஐந்து லட்சம் அறிவிப்பாளர்களின் வரலாறுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்தப் பாதுகாப்பு ஏற்பட்டை திருக்குர்ஆனின் பாதுகாப்புடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.
திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே எழுத்தர்கள் மூலம் எழுதச் செய்து பாதுகாக்கப்பட்டது. ஆனால் ஹதீஸ்கள் அனைத்தையும் பாதுகாக்க நபிகள் நாய்கம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. மிகச் சில நபித்தோழர்கள் மிகச் சில ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொண்டார்கள். அனைத்து ஹதீஸ்களும் எழுதப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது திருக்குர்ஆனைத் தாமும் மனனம் செய்தார்கள். பல நபித்தோழர்களும் மனப்பாடம் செய்திருந்தனர். இது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை. அனைத்து ஹதீஸ்களையும் மனப்பாடம் செய்த ஒரே ஒரு நபித்தோழர் கூட இருந்ததில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும்போது ஒவ்வொரு ஆண்டும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து திருக்குர்ஆனைச் சரிபார்ப்பார்கள். இது போன்ற பாதுகாப்பு ஹதீஸ்களுக்கு இருக்கவில்லை.
நாம் இப்போது எதைத் திருக்குர்ஆன் என்று கூறுகிறோமோ அது தான் திருக்குர்ஆன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் அனைவரும் ஒருமித்து அடுத்த தலைமுறைக்குச் சொன்னார்கள். இப்படி ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த முஸ்லிம்கள் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லாமல் இது தான் குர்ஆன் என்று அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்தார்கள்.
ஆனால் ஹதீஸ்களைப் பொருத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபித்தோழரோ, இரண்டு மூன்று நபித் தோழர்களோ தான் அடுத்த தலைமுறைக்கு – அதாவது அடுத்த தலைமுறையில் சிலருக்குச் – சொன்னார்கள். இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சிலர் தான் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினார்கள்
எழுத்து வடிவில் அனைத்து ஹதீஸ்களும் பாதுகாக்கப்படாததால் ஹதீஸ்கள் நூல் வடிவம் பெறும் காலம் வரை கட்டுக்கதைகளும் ஹதீஸ்கள் என்ற பெயரில் நுழைந்தன. ஆனால் குர்ஆனில் எந்த வார்த்தையும் எந்தக் காலத்திலும் இட்டுக்கட்டிக் கூறப்படவே இல்லை.
குர்ஆனை அல்லாஹ்வே பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். ஆனால் ஹதீஸ்களைப் பொருத்தவரை அறிஞர்கள் தான் இதற்கான விதிகளைக் கண்டறிந்து ஹதீஸ்களைப் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.
திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை என்பதால் மனிதர்கள் வகுத்த பாதுகாப்பு வளையத்தை மீறி தவறான ஹதீஸ்கள் சரியான ஹதீஸ்கள் என்ற பெயரில் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதையும் களை எடுப்பதற்குத் தான் பலவித நிபந்தனைகளை அறிஞர்கள் வகுத்தனர். அவற்றில் ஒன்று தான் குர்ஆனுக்கு முரண்படாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை.
மேலும் அறிவிப்பவர் நம்பகமானவராகவும், நினைவாற்றல் உள்ளவராகவும், தனக்கு முந்திய அறிவிப்பாளரிடம் நேரில் கேட்டவராகவும் இருக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகளை வகுத்து போலி ஹதீஸ்களைக் களை எடுத்தார்கள். இது போன்ற விதிமுறைகளை மனிதர்கள் மூலம் வகுக்கச் செய்து அல்லாஹ் ஹதீஸ்களையும் பாதுகாக்கிறான்.
குர்ஆனுடைய் பாதுகாப்பு என்பது அதில் எந்த ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ மாற்றவோ முடியாத முதல் நிலை பாதுகாப்பாகும்.
ஹதீஸ்களுடைய பாதுகாப்பு என்பது அதில் கூடுதல் குறைவு செய்ய் வழி இருந்தாலும் சரியானதைக் கண்டு பிடித்து தவறானதை ஒதுக்க முடியும். இது இரண்டாம் நிலையில் உள்ள பாதுகாப்பாகும்.