குளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா?
கேள்வி : பிற மதத்தவர் ஒருவர் – அல்லாஹ் தான் படைப்பவன் என்றால் மனிதனை இப்போது குளோனிங் முறையில் படைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் அல்லாஹ்வை வணங்க வேண்டியதில்லையா? என்று கேட்கிறார். விளக்கம் தரவும்!
-எஸ். ராஜா முஹம்மது, காயல்பட்டணம்
பதில்: இறைவன் உயிரினங்களில் ஏற்கனவே படைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான மரபணுக்களில் ஒன்றை எடுத்து அதை வளர்த்துக் காட்டுவது தான் குளோனிங். இது படைத்தல் ஆகாது.
மண்ணிலிருந்தோ, உலோகத்திலிருந்தோ ஒரு உயிரணுவையோ, அல்லது மரபணுவையோ படைக்கச் சொல்லுங்கள்! எறும்பின் மரபணுவைக் கூட மனிதனால் படைக்க முடியாது.
நான் உங்களிடம் தருகின்ற விதையை தண்ணீர் ஊற்றி வளர்த்தால் நீங்கள் படைத்தவராக மாட்டீர்கள். இறைவன் படைத்து வைத்துள்ளவற்றை மனிதன் கண்டுபிடிக்கிறானே தவிர படைக்கவில்லை.
உயிரணுவும், மரபணுவும் இல்லாத களி மண்ணிலிருந்து அவற்றை அல்லாஹ் எப்படி உருவாக்கினானோ அப்படி உருவாக்கும் போது தான் மனிதன் கடவுள் வேலையைச் செய்தான் எனக் கூற முடியும். ஒருக்காலும் இது மனிதனால் ஆகாது.
எனவே குளோனிங் மூலம் படைக்கப்பட்டவர்களும் இறைவனால் தான் படைக்கப்படுகின்றனர் என்பதால் அவர்களும் இறைவனை வணங்கியாக வேண்டும்.
அர்த்தமுள்ள கேள்விகள் முழு நூலை வாசிக்க