சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற ஹதீஸ் சரியானதா?
வழிகேடர்களுக்குப் பதில்
சூனியத்தை உண்மையென்று நம்புபவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை சூனிய நம்பிக்கை பித்தலாட்டம் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாக நாம் எடுத்துக் காட்டிவருகிறோம்.
இந்தச் செய்தி முஸ்னத் அஹ்மத் எனும் ஹதீஸ் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முஸ்னத் அஹ்மத் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட செய்தி முஸ்னத் அஹ்மத் நூலில் இல்லையென்றும், அது பலவீனமான செய்தியென்றும் இரு வேறு விமர்சனங்களை சூனியக் கூட்டத்தினர் முன்வைத்து வருகிறார்கள்.
இந்தச் செய்தி முஸ்னத் அஹ்மத் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இது ஆதாரபூர்வமான செய்தி தான் என்பதிலும் சந்தேகமில்லை. இதை விரிவாக விளக்குகிறோம்.
.مسند أحمد
) 26212 – حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)
நூல் : முஸ்னத் அஹ்மது
சூனியத்தை ஒருவன் நம்பினால் அவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்பதை இந்த நபிமொழி தெளிவாகச் சொல்கிறது. எந்த வியாக்கியானமும் கொடுக்க முடியாத வகையில் இதன் வாசக அமைப்பு அமைந்துள்ளது.
சூனியத்துக்கு ஈமான் கொண்ட கூட்டத்தினருக்கு இந்த ஹதீஸ் மரண அடியாக இருப்பதால் இதை மறுப்பதற்கு பலவாறாக முயற்சித்து வருகின்றனர்.
சூனியத்துக்கு ஈமான் கொண்டவர்கள் முஸ்னத் அஹ்மதில் இப்படி ஒரு ஹதீஸ் இல்லவே இல்லை என்று அதிரடியாக மறுக்கிறார்கள்.
பிரச்சனை சாஃப்ட்வேரிலா? அல்லது இவர்களின் சிந்தனையிலா?
சூனியத்தை உண்மை என்று நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற சொல் ஹதீஸ் சாஃப்ட்வேரில் தவறுதலாக இடம்பெற்றுள்ளது. எந்த அச்சுப் பிரதியிலும் இந்த வார்த்தை இடம்பெறவில்லை. எனவே சாஃப்ட்வேரில் ஏற்பட்ட பிழையை ஆதாரமாக்கி முழுமையாக ஆய்வு செய்யாமல் நுனிப்புல் மேய்ந்துவிட்டு இந்த ஹதீஸை நாம் ஆதாரம் காட்டியதாகச் சொல்லித் திரிகிறார்கள்.
இவர்கள் கைவசம் வைத்துள்ள முஸ்னத் அஹ்மத் அச்சுப் பிரதியில் அந்த ஹதீஸ் விடுபட்டுள்ளதை அறியாமல் இப்படி வாதம் வைக்கின்றனர்.
சாஃப்ட்வேர் காப்பியில் அந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது போல் முஸ்னத் அஹ்மத் அச்சுப் பிரதியிலும் இந்த ஹதீஸ் அச்சிடப்பட்டுள்ளது.
முஃமினும் பிசிஹ்ர் مؤمن بسحر என்ற இந்த வார்த்தை இடம்பெற்ற அஹ்மதின் போட்டோ காப்பியை பார்க்கவும்.
இது சாஃப்ட்வேர் காப்பியில் தவறுதலாகச் சேர்க்கப்பட்டதல்ல என்பதற்கு மேற்கண்ட அச்சுப்பிரதி ஆதாரமாக உள்ளது.
மேற்கண்ட அச்சுப்பிரதியில் இந்தப் பிரதியை சரிபார்த்தவர்களின் பெயர் பட்டியலும் இந்த போட்டோவில் கூறப்பட்டுள்ளது.
முஸ்னத் அஹ்மத் நூலுக்கு பல பதிப்புகள் உள்ளன. அவை 1000க்கு 990 ஒத்து இருந்தாலும் சில விஷயங்களில் ஒரு பிரதியில் இல்லாதவை வேறு பிரதியில் காணப்படும்.
இப்படி இருக்கும் போது நாம் எதை ஏற்க வேண்டும்?
மூலப்பிரதியில் இருந்து எடுத்து எழுதும் போது ஒரு எழுத்தாளர் ஒரு ஹதீஸைத் தவறுதலாக விட்டிருக்க வாய்ப்பு உண்டு என்று முடிவு செய்வதா? இல்லாத ஒன்றை ஒருவர் சேர்த்து எழுதி விட்டார் என்று முடிவு செய்வதா?
இல்லாத ஒன்றைச் சேர்ப்பது என்றால் அது ஒரு சொல்லாக, அல்லது ஒரு வார்த்தையாக இருந்தால் கவனக்குறைவாகச் சேர்க்கும் வாய்ப்பு உள்ளது என்று கருதலாம்.
ஆனால் மூலப்பிரதியில் இல்லாத ஒரு முழு ஹதீஸை ஒருவர் கவனக்குறைவாகச் சேர்க்க முடியாது. வேண்டுமென்றே அவர் நுழைத்து விட்டார் என்ற கருத்து இதனால் ஏற்படும். இல்லாத ஒன்றைத் திட்டமிட்டு நுழைத்து விட்டார் என்று முடிவு செய்தால் அவரது நாணயம் கேள்விக்குறியாகி விடுகிறது. இல்லாத ஒன்றைச் சேர்த்த காரணத்தால் அவரது முழுப்பிரதியையும் நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால் மூலப்பிரதியில் இருந்த ஒரு ஹதீஸைக் கவனக்குறைவாக விட்டிருக்கலாம் என்று முடிவு செய்தால் இது நாணயத்தைப் பாதிக்காது. இது மனிதர்களிடம் உள்ள பலவீனத்தின் வெளிப்பாடு என்று முடிவு செய்ய வேண்டும்.
இப்போது முஸ்னத் அஹ்மத் என்ற நூலின் ஒரு எழுத்துப் பிரதியில் இல்லாத ஒன்று, மற்றொரு எழுத்துப் பிரதியில் இருந்தால் அதைத் தான் நாம் ஏற்க வேண்டும்.
இந்த அடிப்படைடையை விளங்காத காரணத்தால் தான் தங்களிடம் உள்ள பிரதியில் சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற ஹதீஸ் காணப்படாததால் எந்தப் பிரதியிலும் இல்லை என்று அறியாமை காரணமாக வாதிடுகின்றனர்.
இந்த வார்த்தை இடம்பெற்ற நூற்கள்
ஒரு நூலில் ஏதாவது விடுபட்டுள்ளதா? அல்லது கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை இன்னும் பலவழிகளில் நாம் உறுதி செய்து கொள்ள முடியும்.
பல ஹதீஸ் நூல்களில் உள்ளதைத் தொகுத்து எழுதப்பட்ட பல நூல்கள் உள்ளன. அல் முஸ்னதுல் ஜாமிஃ என்பது அது போன்ற நூலாகும். இதில் அஹ்மத், திர்மிதீ, இப்னு மாஜா, அபூதாவூத் உள்ளிட்ட பல நூல்களில் உள்ள ஹதீஸ்கள் தொகுத்து எழுதப்பட்டுள்ளன. நாம் சுட்டிக்காட்டிய அஹ்மத் நூலில் இடம் பெற்ற ஹதீஸை இந்த நூலில் பதிவு செய்து இது முஸ்னத் அஹ்மதில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
المسند الجامع (33/ 449)
6- عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللهِ ، عَنْ أَبِي الدَّرْدَاءِ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ: لاَ يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ ، وَلاَ مُؤْمِنٌ بِسِحْرٍ ، وِلاَ مُدْمِنُ خَمْرٍ ، وَلاَ مُكَذِّبٌ بِقَدَرٍ.
– لفظ هشام بن عمار : لاَ يَدْخُلُ الْجَنَّةَ مُدْمِنُ خَمْرٍ.أخرجه أحمد 6/441(28032)
அதாவது மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்து விட்டு இந்த ஹதீஸை இமாம் அஹ்மத் அவர்கள் தமது முஸ்னத் அஹ்மத் நூலில் பதிவு செய்துள்ளார் என்று அல் முஸ்னதுல் ஜாமிவு நூலாசிரியர் கூறுகிறார்.
அஹ்மத் நூலில் இந்த ஹதீஸ் இடம்பெற்றதைப் பார்த்துத் தான் இவர் தொகுத்துள்ளார் என்பதாலும், இவர் தொகுக்கும் போது சாஃப்ட்வேர் காப்பி இருக்கவில்லை என்பதாலும் மேற்கண்ட செய்தி அஹ்மதில் உள்ளது என்பது உறுதியாகிறது.
அது போல் அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் நூலிலும் இந்த ஹதீஸ் முஸ்னத் அஹ்மதில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
الجامع الصحيح للسنن والمسانيد (2/ 619، بترقيم الشاملة آليا)
(حم) , وَعَنْ أَبِي الدَّرْدَاءِ – رضي الله عنه – قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ – صلى الله عليه وسلم -: لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ، وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ، وَلَا مُدْمِنُ خَمْرٍ، وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ
மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்த இந்த நூலாசிரியர் இது அஹ்மதில் உள்ளது என்று குறிப்பிடுகிறார்
حم என்பது முஸ்னத் அஹ்மத் என்பதைக் குறிக்கும் அப்ரிவேசன் சொல்லாகும்.
முஸ்னத் அஹ்மதில் இடம்பெற்ற ஹதீஸ்களின் பிரதிகளில் கூடுதல் அல்லது விடுதல் என்ற நிலை ஏற்பட்டால் இப்னு கஸீர் அவர்களின் ஜாமிவுல் மஸானீத், இப்னு ஹஜர் அவர்களின் அத்ராபுல் முஸ்னத் ஆகிய இரு நூற்களை அடிப்படையாக வைத்துத் தான் முடிவு செய்வார்கள். இவ்விருவரும் அதைப் பதிவு செய்திருந்தால் ஒரு எழுத்தர் இந்த ஹதீஸை விட்டுவிட்டார் என்று முடிவு செய்வார்கள். மேற்கண்ட ஹதீஸை இருவருமே தமது நூலில் பதிவு செய்துள்ளதைக் காணலாம்,
இப்னு கஸீா் அவா்களுக்குரிய ஜாமிஉல் மஸானீத் என்ற நூலிலும் இந்த வார்த்தை இடம்பெற்றுள்ளது
جامع المسانيد والسنن (9 / 335):
11987 – حدثنا أبو جعفر السويدى، ثنا أبو الربيع سليمان بن عبيد الدمشقى، سمعت يونس بن ميسرة، عن أبى إدريس عائذ الله، عن أبى الدرداء، عن النبى – صلى الله عليه وسلم – قال لا يدخل الجنة عاق، ولا مؤمن بسحر، ولا مدمن خمر ولا مكذب بقدر
ஹாபிள் இப்னு ஹஜா் அவா்களின் அத்ராபுல் முஸ்னத் நூலிலும் இந்த வார்த்தை தெளிவாக இடம்பெற்றுள்ளது.
إطراف المسند المعتلي بأطراف المسند الحنبلي (6 / 149):
7977 -[ق] حديث: لا يدخل الجَنَّةَ عاقٌّ، ولا مؤمنٌ بسِحْرٍ، ولا مُدْمِنُ خَمْرٍ، ولا مُكَذِّبٌ بقَدَر. (6: 441) حَدَّثَنا أبو جعفر السويدي، ثنا أبو الربيع سليمان بن عُتْبَة الدمشقي، سمعتُ يونس بن مَيْسَرة، عنه بهذا.
விடுபட்டதைக் கண்டறியும் ஆய்வு
இந்த இரண்டு நூல்களும் முஸ்னத் அஹ்மத் நூல் தொடா்பாக எழுதப்பட்டவை.
இந்த இரண்டு நுாற்களை அடிப்படையாகக் கொண்டே விடுபட்ட வார்த்தைகளை இணைப்பது போன்ற பிரச்சனைகளுக்கு ஷுஐப் அர்னாஉத் உட்பட பல அறிஞர்கள் தீா்வு கண்டுள்ளனா். இதற்கு உதாரணங்கள் ஏராளம். ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றோம்.
மைமனிய்யா பதிப்பில் அஹ்மதின் 7152 வது ஹதீஸில்
துணையின்றி யாரும் இருக்க மாட்டார்
என்று சொல்லப்பட்டுள்ளது.
சொர்க்கத்தில் யாரும் துணையின்றி இருக்க மாட்டார்
என்பதே சரியானது.
சொர்க்கத்தில் என்ற சொல் மைமனிய்யா பதிப்பில் விடுபட்டுள்ளது. அஹ்மத் நூல் தொடா்பாக எழுதப்பட்ட மற்ற நுால்களை வைத்தே அறிஞர் அா்னாஉத் இந்த வார்த்தை விடுபட்டுள்ளது என்று உறுதி செய்கின்றார்.
مسند أحمد ط الرسالة (12 / 64):
7152 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: إِمَّا تَفَاخَرُوا، وَإِمَّا تَذَاكَرُوا الرِّجَالُ أَكْثَرُ فِي الْجَنَّةِ أَمِ النِّسَاءُ؟ قَالَ أَبُو هُرَيْرَةَ: أَوَ لَمْ يَقُلْ أَبُو الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَوَّلَ زُمْرَةٍ تَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، وَالَّتِي تَلِيهَا عَلَى أَضْوَإِ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ، لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ زَوْجَتَانِ ثِنْتَانِ، يُرَى مُخُّ سَاقِهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ، وَمَا فِي الْجَنَّةِ أَعْزَبُ قوله: في الجنة أثبتناه من (ظ 3) و (عس) ، وسقط من (م) وباقي النسخ.
சொர்க்கத்தில் என்ற சொல் மைமனிய்யா பதிப்பிலும், மற்ற பிரதிகளிலும் இடம்பெறவில்லை. மாறாக ளாஹிரிய்யா என்ற பிரதியிலிருந்தும் இப்னு அஸாகிர் அவர்களின் நுாலிலிருந்தும் அதை நாம் அஹ்மத் நூலில் உள்ளது தான் என உறுதிப்படுத்தியுள்ளோம்.
(முஸ்னது அஹ்மத் நூலின் முன்னுரையில்)
அதாவது அஹ்மத் நூலில் உள்ளதை எடுத்து எழுதிய சிலர் விட்டுள்ளனர் என்கிறார்.
ஒரு நூலில் ஏற்பட்டுள்ள தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கும், அதைத் திருத்துவதற்கும் இதுவே சரியான வழிமுறை. நூலைச் சரிபார்க்கும் ஆய்வில் இறங்கும் அறிஞர்கள் இந்த முறையில் தான் தவறுகளைக் கண்டுபிடித்து திருத்துவார்கள்.
அஹ்மத் நூலைச் சரிபார்த்த அறிஞர் ஷுஐப் அா்னாஉத் கூறுவதைப் பாருங்கள்.
مسند أحمد ط الرسالة (12 / 18
7122 – حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ شُعْبَةَ (1) ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ (2) مَرَّ بِقَوْمٍ يَتَوَضَّئُونَ، فَقَالَ: أَسْبِغُوافي (م) والأصول الخطية: شعيب، وهو تحريف، والتصويب من (عس) وأطراف المسند 2/ورقة 126، ومن المواضع التي سيتكرر فيها الحديث، ومن مصادر التخريج.
மைமனிய்யா பதிப்பிலும், மற்ற அசல் பிரதிகளிலும் இதில் உள்ள ஒரு அறிவிப்பாளரின் பெயர் ஷுஐப் என்று கூறப்பட்டுள்ளது. இது தவறாகும். இப்னு அஸாகிர் நூலிலும், அத்ராபுல் முஸ்னத் நூலிலும், இந்த ஹதீஸ் திரும்பத் திரும்ப இடம்பெறும் இடங்களிலும், இதே ஹதீஸ் வேறு எந்த நுாற்களில் உள்ளது என்பதைப் பற்றி பேசும் நுாற்களிலும் அந்த அறிவிப்பாளர் பெயர் ஷுஃபா என்றே கூறப்பட்டுள்ளது. அதுவே சரியானது.
(முஸ்னது அஹ்மது கிதாபின் முன்னுரை)
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நுாற்கள்
மைமனிய்யா போன்ற சில பிரதிகளில் இடம்பெற்றுள்ள தவறுகளைக் கண்டுபிடிக்க இப்னு ஹஜர் அவர்களின் அத்ராபுல் முஸ்னது மற்றும் இப்னு கஸீா் அவா்களின் ஜாமிஉல் மசானீத் மற்றும் சில நூல்களை நான் ஆதாரமாகக் கொள்கிறேன் என்று முன்னுரையில் அறிஞர் அர்னாஉத் கூறியுள்ளார்.
مسند أحمد ط الرسالة (1 / 132):
أما المصنَّفاتُ التي لها علاقةٌ بالمسند، والتي استعنّا ببعضها في استكمالِ التحقيق، وتداركِ السقط الذي وقع في الأصول المعتمدة، والطبعة الميمنية فهي:
1- إطراف المُسْنِد المعتلي بأطراف المُسْنَد الحنبلي، للحافظ ابن حجر، في مجلدين.
4- جامعُ المسانيد والسُّنن الهادي لأقوم سَنَن. تأليف الحافظ أبي الفداء إسماعيل بن عمر بن كثير الدمشقي، المتوفى سنة (774 هـ) :
இதே அடிப்படையில் தான் முஸ்னத் அஹ்மது கிதாபைச் சரிபார்த்த அறிஞா் குழுவும் முஃமினும் பிஸ்ஸிஹிர் என்ற சொல் அஹ்மது நூலில் உள்ளது தான் என உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள்.
தாரீகு திமஸ்க் நுாலை மறுக்க முடியுமா?
இதே அறிவிப்பாளர் தொடரின் வழியாக இதே செய்தி இப்னு அசாகிர் அவர்களின் தாரீகு திமஷ்கு என்ற நூலில் பதிவாகியுள்ளது. அதிலும் முஃமினும் பிஸ்ஸிஹிர் (சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான்) என்ற சொல் இடம் பெற்றுள்ளது. தாரீகு திமஷ்க் அறிவிப்பைப் பாருங்கள்.
تاريخ دمشق (56/ 135)قال وحدثني ابي ( 8 ) نا أبو جعفر السويدي نا أبو الربيع سليمان بن عتبة الدمشقي قال سمت يونس بن ميسرة عن أبي إدريس عائذ الله عن أبي الدرداء عن النبي ( صلى الله عليه وسلم ) قال لا يدخلن الجنة عاق ولا مؤمن بسحر ولا مدمن خمر ولا مكذب بقدر
இப்னு அஸாகிர் அவர்கள் தொகுத்த தாரீகு திமஸ்க் என்ற நுால் அஹ்மது கிதாபை சரிபார்ப்பதற்குரிய மிக வலுவான ஆதாரமாகும். ஏனென்றால் அஹ்மது கிதாபின் ஆரம்பகால பழைய அசல் பிரதிகளை இப்னு அஸாகிர் பெற்றிருந்தார். பின்வந்த பிரதிகளைச் சரிபார்க்க எது அடிப்படையாக இருந்ததோ அந்த பழைய பிரதிகளைப் பெற்றவர் இப்னு அஸாகிர் ஆவார். இந்தத் தகவலை அறிஞர் அர்னாஉத் முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.
مسند أحمد ط الرسالة (1 / 104)
1- نسخة المكتبة القادرية (2) ببغداد تحت رقم (661) وقد رمزنا إليها بالرمز (ق) .
وهذه النسخة متقنة يَنْدُرُ وقوعُ الخطأ فيها، نُسخت بخطٍّ جميل واضح، حديثِ العهد، فقد كتبت في أواخر القرن الثالث عشر الهجري، وهي نسخة مقابلة على نسخٍ صحيحة، بعضُها قديم قد تداولها أهلُ العلم كابنِ عساكر وغيره من أئمة الحديث، كما يظهر ذلك مما كتبه الشيخ أبو الخير
அஹ்மது நூலிற்கு பல பிரதிகள் உள்ளன. அதில் காதிரிய்யா என்ற பிரதி உறுதி செய்யப்பட்ட பிரதியாகும். இதில் தவறுகள் குறைவாக உள்ளன. ஏனென்றால் மிகச் சரியான பழைய பிரகளுடன் இது சரிபார்க்கப்பட்டுள்ளது. அந்தப் பழைய பிரதிகளை இப்னு அஸாகிர் மற்றும் அவரைப் போன்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனா்.
எனவே தான் அஹ்மது நூலை ஆய்வு செய்யும் அறிஞா்கள் தாரீகு திமஸ்க் என்ற நுாலை அஹ்மது நூலின் வலுவான சரியான மூலப்பிதிகளில் ஒன்றாகவே கருதுகின்றனா்.
இப்னு அஸாகிர் அவர்கள் முஃமினும் பிஸ்ஸிஹிர் என்ற சொல் இடம்பெற்ற ஹதீஸை எப்படி பதிவு செய்துள்ளார் என்று பார்த்தால் இந்த வார்த்தை அஹ்மத் நூலில் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதாவது முஃமினும் பிஸ்ஸிஹிர் என்ற வார்த்தை இடம்பெற்ற செய்திக்கு இப்னு அஸாகிர் அவா்கள் அறிவிப்பாளர் தொடரைச் சொல்லும் போது இந்த ஹதீஸ் அஹ்மத் இமாமிடமிருந்து தனக்கு யார்? யார்? வழியாக வந்தது என்ற முழு விபரத்தையும் பட்டியலிடுகின்றார். அந்தப் பெயர் பட்டியலைப் பாருங்கள்.
تاريخ دمشق لابن عساكر (56 / 135):
أخبرنا أبو القاسم بن الحصين أنا أبو علي بن المذهب أنا أبو بكر بن مالك أنا عبد الله حدثني أبي (6) نا محمد بن النوجشان وهو أبو جعفر السويدي نا الدراوردي حدثني زيد بن أسلم (7) عن أبي واقد الليثي عن أبيه أن النبي (صلى الله عليه وسلم) قال لأزواجه في حجة الوداع هذه ثم ظهور الحصر قال وحدثني ابي (8) نا أبو جعفر السويدي نا أبو الربيع سليمان بن عتبة الدمشقي قال سمت يونس بن ميسرة عن أبي إدريس عائذ الله عن أبي الدرداء عن النبي (صلى الله عليه وسلم) قال لا يدخلن الجنة عاق ولا مؤمن بسحر (9) ولا مدمن خمر ولا مكذب بقدر أخبرنا أبو القاسم النسيب وابو الحسن المالكي قالا نا وابو منصور بن زريق
நபி (ஸல்) அவா்கள்
அபுத்தர்தா (ரலி)
அபூ இத்ரீஸ் ஆயிதுல்லாஹ்
யூனுஸ் பின் மைசரா
சுலைமான் பின் உத்பா
அபூ ஜஃபர் சுவைதீ
அஹ்மது பின் ஹம்பல்
அஹ்மது இமாமின் மகன் அப்துல்லாஹ்
அபூபக்ர் பின் மாலிக்
அபூ அலி பின் முத்ஹிப்
அபுல் காசிம் பின் ஹஸீன்
இப்னு அஸாகிர்
இப்படி அறிவிப்பாளர் தொடரை இப்னு அஸாகிர் பட்டியலிடுகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவா்களிடமிருந்து அஹ்மது பின் ஹம்பலைத் தாண்டி இப்னு அஸாகிர் அவர்கள் வரை இதன் அறிவிப்பாளர் தொடா் நீண்டுள்ளது. இந்தச் செய்தியில் முஃமினும் பிஸ்ஸிஹிர் என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளது. இந்தச் சொல் அஹ்மது நூலில் உள்ளது தான் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?
எனவே இவர்கள் தாங்கள் கொண்ட கொள்கையை நிலைநாட்ட எப்படிப்பட்ட காரியத்தையும் செய்வார்கள் என்பதை அறிய முடிகின்றது.
இதன் பிறகும் மைமனிய்யா பதிப்பில் இந்தச் சொல் இடம்பெறவில்லையே என்று அறிவுள்ளவர்கள் கேட்க மாட்டார்கள்.
மைமனிய்யா பதிப்பைப் பொறுத்தவரை அது ஏராளமான தவறுகள் உள்ள பதிப்பாகும். அஹ்மது கிதாபின் ஹதீஸ்களில் உள்ள பல வார்த்தைகள் இதில் விடுபட்டுள்ளன. ஏன் பல ஹதீஸ்களும், ஹதீஸ் தொகுப்புகளும் கூட இந்தப் பதிப்பில் விடுபட்டிருக்கின்றன. பல ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர்களும் மாற்றப்பட்டு தவறுதலாக இதில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பதிப்பில் உள்ள தவறுகளால் தான் அஹ்மது ஷாகிர், ஷூஐப் அா்னாஉத் போன்ற அறிஞர்கள் அஹ்மது கிதாபைச் சரிபார்க்கும் வேலையில் இறங்கினார்கள். இந்தத் தகவலை அர்னாஉத் தனது முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.
مسند أحمد ط الرسالة (1 / 36):
1- الطبعة الميمنية المعروفة فيها تحريفٌ كثير وتصحيفٌ، وقد سقط منها أحاديثُ ومسانيدُ، كما وقع فيها بعضُ أحاديث مما رواه عبد الله عن غيرِ أبيه على أنها من مسند أبيه، وبالعكس.
அறிவிப்பாளர் தொடரில் கோளாறா?
அடுத்ததாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியில்லை எனவும் சூனியத்தை ஈமான் கொண்டவர்கள் வாதிடுகின்றனர்.
மேற்கண்ட ஹதீஸில் அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவரைத் தான் சூனியத்தை ஈமான் கொண்டவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
விமா்சனம்
இந்த அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி யார்?
இவர் நம்பகமானவர் என்றாலும் ஹதீஸ் விடயத்தில் சந்தேகப்படக்கூடியவராக இருந்தார் என்று இவரைப்பற்றி அபூ தாவூத் அஸ்ஸிஜிஸ்தானி குறிப்பிடுகின்றார். நம்பகமான ஒருவருக்கு மாற்றமாக அல்லது மேலதிக விமர்சிக்கப்பட்ட ஒருவர் அறிவிக்கும் போது அந்த அறிவிப்பு மறுக்கப்படும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹதீஸ்கலை விதியாகும். ஒரு வேளை இந்த வார்த்தையை அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி கூறி இருந்தாலும் அதை அவர் சந்தேகத்துடனே சொல்லி இருக்கின்றார் என்பதற்கு அவரைப்பற்றி கூறப்பட்டுள்ள விமர்சனம் போதுமான சான்றாகும். ஏனெனில் அவரை விட நம்பகமான மூவருக்கு மாற்றமாக அவர் இந்த வார்த்தையை சேர்த்துக் கூறியுள்ளார்.
என்று சூனியக் கூட்ட்த்தினர் வாதிடுகிறார்கள்.
நமது விளக்கம்
இந்த விமர்சனத்தில் இருந்து இவர்களின் அளவற்ற அறியாமை வெளிப்படுகிறது.
முதல் அறியாமை
மேற்கண்ட அறிவிப்பாளர் சந்தேகப்படக் கூடியவராக இருந்தார் என்ற விமர்சனத்தில் இவரது மடமை பளிச்சிடுகிறது.
இந்தச் சொல்லுக்கு இவர்கள் கொண்ட கருத்து வராது. இவரது ஹதீஸ்கள் சந்தேகத்துக்கு உரியது என்பது இதன் கருத்து அல்ல. இவர் கேள்விப்படும் ஹதீஸ்களில் சந்தேகம் எழுப்புவார் என்பதுதான் இதன் கருத்து. நூறு ஹதீஸ்களைக் கேட்டால் அந்த நூறையும் அறிவித்து விடாமல் அதில் பல சந்தேகங்களை எழுப்பி எல்லா சந்தேகங்களுக்கும் தீர்வு இருக்கும் பத்து ஹதீஸ்களைத் தான் அறிவிப்பார் என்பதுதான் இதன் கருத்து.
சிறிதளவு சந்தேகம் வந்தால் கூட இவர் எந்த ஹதீஸையும் அறிவிக்க மாட்டார். தனக்கு சந்தேகம் இல்லாததைத்தான் அறிவிப்பார் என்ற புகழ்மாலையை இவர்கள் தலைகீழாகப் புரிந்து கொண்டார்கள்.
இவர் குறித்து அஹ்மத் பின் ஹம்பல் கூறுவதைப் பாருங்கள்!
حدثنا عَنْهُ أحمد بْن حنبل، وكان صاحب شكوك. رجع النّاس من عند عبد الرّزّاق بثلاثين ألف حديث، ورجع بأربعة آلاف.
இவர் ஹதீஸில் சந்தேகம் கொள்பவராக இருந்தார்; அப்துர் ரஸ்ஸாக்கிடமிருந்து மற்றவர்கள் முப்பதாயிரம் ஹதீஸ்களைப் பெற்றார்கள். ஆனால் இவர் நான்காயிரம் ஹதீஸ்களைத் தான் பெற்றார்.
முப்பதாயிரம் ஹதீஸ்களில் இருபத்து ஆறாயிரம் ஹதீஸ்களை ஒதுக்கி விட்டு நான்காயிரம் ஹதீஸ்களை மட்டுமே எடுத்துக் கொண்டது அவரது அளவற்ற பேணுதலைக் குறிக்கிறது.
அவரது ஹதீஸில் சந்தேகம் உள்ளது என்று சொன்னால் தான் இந்த வழிகேடர்கள் சொன்ன அர்த்தம் வரும். ஹதீஸ்களில் அவர் சந்தேகம் எழுப்புவார் என்றால் அதற்கு நேர்முரணான அர்த்தத்தைத் தான் தரும்.
இவர்கள் எந்த அளவுக்கு ஹதீஸ் கலை அறிந்தவர்களாக உள்ளனர் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இரண்டாவது அறியாமை
இவர்கள் கூறுவது போன்ற கருத்தில் தான் இவரது விமர்சனத்துக்கு அர்த்தம் உள்ளது என்றே வைத்துக் கொள்வோம்.
இதை வைத்துக் கொண்டு ஒரு முடிவு எடுப்பவர் அறிவுடையவராக இருக்க முடியுமா?
இவரைப் பற்றி மற்றவர்கள் என்ன சொன்னார்கள் என்பதைப் பார்க்க வேண்டாமா? அந்த விமர்சனங்கள் சரியில்லை. இவர் பலவீனமானவர் என்பதுதான் சரியான விமர்சனம் என்று பட்டியல் போட்டு நிரூபிக்க வேண்டாமா?
இவர்கள் விரும்பி இருந்தால் அந்த விமர்சனங்களை எடுத்துப் பார்ப்பது எளிதானது தான். ஆனால் சூனியத்தின் மீது கொண்ட ஈமான் காரணமாகவும், தான் சொன்னது தவறு என்றால் தனது மரியாதை என்னாவது என்ற கர்வம் காரணமாகவும் தான் இவர்கள் அந்த விமர்சனங்கள் அனைத்தையும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்.
அந்த விமர்சனங்களைப் பாருங்கள். அதன் பின்னர் இவர்கள் மார்க்கம் சொல்வதில் நம்பகமானவர்களா என்று சிந்தியுங்கள்.
التذييل علي كتب الجرح والتعديل (1/ 293)
(791) تع- ل- محمد بن النوشجان السُّويدي البغدادي أبو جعفر روى عن سويد بن عبد العزيز، ويحيى بن سليمان، والوليد بن مسلم. وعنه أحمد بن حنبل. قال أبو حاتم: لا أعرفه ، وقال البخاري: إنما قيل له السويدي، لأنه رحل إلى سُويد بن عبد العزيز ، ذكره ابن حِبَّان في الثقات .ا. هـ قلت: قال الآجري، عن أبي داود السجستاني: ثقة، حدثنا عنه أحمد، كان صاحب شكوك في الحديث، رجع الناس من عند عبد الرزاق بثلاثين ألفًا، ورجع بأربعة آلاف ، وقال السمعاني في الأنساب : كان صدوقًا ثقة، محُتاطًا في الأخذ (2).
அபூதாவூத் இவரை நம்பகமானவா் என்று குறிப்பிடுகின்றார்.
சன்ஆனி என்ற அறிஞா் இவரை உண்மையாளா்; நம்பகமானவா்; ஹதீஸ்களைப் பெறுவதில் பேணுதலானவா் என்று கூறியுள்ளார்.
இப்னு ஹிப்பான் அவர்களும் இவரை நம்பகமானவா் என்று கூறியுள்ளார்.
தஹபீ அவர்கள் இவரை ஹாபிள் என்று கூறி நம்பகத்தன்மையில் முதலிடத்தில் குறிப்பிடுகின்றார்
. تاريخ الإسلام ت بشار (5 / 453) 388 – محمد بن النُّوشَجان، أبو جعفر البَغْداديُّ السُّوَيْديّ الحافظ، [الوفاة: 211 – 220 ه] لُقّب بذلك لرحلته إلى سُوَيد بن عبد العزيز الدّمشقيّ.
ஹாபிள் அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி ஹதீஸை அறிவிப்பதிலும், பெறுவதிலும் மிகப் பேணுதலானவா். ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை மனனம் செய்தவர்.
மூன்றாவது அறியாமை
இந்தச் செய்தியை விமர்சிப்பவர்கள் இவ்வாறு வாதிடுகிறார்கள்.
ஒரு வேளை இந்த வார்த்தையை அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி கூறி இருந்தாலும் அதை அவர் சந்தேகத்துடனே சொல்லி இருக்கின்றார் என்பதற்கு அவரைப்பற்றி கூறப்பட்டுள்ள விமர்சனம் போதுமான சான்றாகும்.
அபூஜஃபர் அவர்கள் இதைச் சந்தேகத்துடன் கூறியுள்ளாராம். சந்தேகத்துடன் கூறுவது என்றால் சிஹ்ரை நம்புபவன் என்று நபி சொன்னார்களா? அல்லது வேறு எதுவும் சொன்னார்களா என்று அவர் கூறினால் அவர் சந்தேகத்துடன் அறிவித்துள்ளார் என்று சொல்லலாம்.
அல்லது இப்படி சொன்னதாக நான் நினைக்கிறேன் என்று அவர் சொல்லி இருந்தால் அப்போதும் அவர் சந்தேகத்துடன் அறிவித்தார் என்று சொல்ல முடியும். மேற்கண்ட ஹதீஸில் அவர் உறுதியாகத் தான் சொல்கிறார்.
இவர்களது எல்லை மீறிய அறியாமை இப்போது தெரிகிறதா?
இன்னும் சொல்லப் போனால் மற்றவர்கள் அறிவிப்பதில் ஏதாவது சந்தேகம் வந்தால் இவரது அறிவிப்பு அதை நீக்கிவிடும். அந்த அளவுக்கு சந்தேகமானதைத் தவிர்த்தவர் தான் அபூஜஃபர் அவர்கள்.
நான்காவது அறியாமை
மற்றவர்கள் அறிவிப்பதற்கு இவர் மாற்றமாக அறிவித்துள்ளார் எனவும் இவர்கள் வாதிடுகிறார்கள்.
சூனியத்தை நம்பினால் சொர்க்கம் செல்வான் என்று மற்றவர்கள் அறிவித்து இருந்தால் தான் இவர் மாற்றமாக அறிவித்தார் என்று சொல்ல முடியும். மற்றவர்கள் அறிவிக்காததை இவர் அறிவித்தால் இது கூடுதல் தகவல் தானே தவிர இது முரண் அல்ல.
தக்லீத் வெறியும், மத்ஹபு வெறியும் இவர்களின் உச்சந்தலையில் நன்கு ஏறிவிட்டது. அதனால் தான் நபிகளாரின் இந்தச் சொல்லை மறுப்பதற்கு இவ்வளவு பித்தலாட்ட வேலைகளையும், நல்லறிஞா்களை நாசப்படுத்தும் வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.
இட்டுக்கட்டப்பட்ட செய்தியா? ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தியா?
இந்த சூனியக்கார கும்பலைத் தவிர வேறு எந்த அறிஞரும் இந்த ஹதீஸை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறவில்லை. இந்த ஹதீஸைச் சரிகண்ட அறிஞா்களின் விபரத்தைப் பாருங்கள். இந்த அறிஞர்கள் இதைச் சரிகண்ட விதம் நாம் சொல்லாத வேறு விதமாக இருந்தாலும் அவர்கள் இந்தச் செய்தியை அங்கீகரித்துள்ளனா்.
ஹைஸமீ, அல்பானி, பஸ்ஸார் ஆகியோர் இந்த ஹதீஸை ஹசன் என்று கூறி ஏற்றுள்ளனா். மற்றும் பல அறிஞரும் இவ்வாறு கூறியுள்ளனா்.
விதண்டாவாதம்
ஒரு வாதத்துக்கு இந்த வார்த்தை முஸ்னத் அஹ்மதில் இடம்பெற்றுள்ளது என்று வைத்துக் கொண்டாலும் அது ஆதாரமான செய்தியல்ல இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஸுலைமான் இப்னு உத்பா என்பவர் இடம்பெறுகின்றார் இவரைச் சில அறிஞர்கள் நம்பகமானவர் என்று கூறினாலும் மற்றும் சிலர் குறை உள்ளவர் என விமர்சித்துள்ளார்கள். இவ்வாறு சிலரால் குறையுள்ளவர் என்று கூறப்பட்டவரை ஏற்றுக் கொள்ளலாமா? என்ற விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.
என்றாலும் இந்த இடத்தில் இவரை நம்பகமானவர் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இந்தச் செய்தி இன்னுமொரு காரணத்தால் பலவீனத்துக்கு மேல் பலவீனமாகின்றது. இந்த சுலைமானிடமிருந்து நான்கு பேர் அறிவிப்பதாகக் கூறி இருந்தோம். இந்த நான்கு பேரில் சூனியத்தை நம்பியவன் சுவனம் செல்ல மாட்டான் என்ற தகவலைக் கூட்டி அறிவிக்கும் அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி என்பவரைத் தவிர மற்ற மூவரும் நம்பகமானவர்கள் .
1:ஸுலைமான் இப்னு அப்துரஹ்மான் (உண்மையாளர் என்றாலும் தவறு விடக்கூடியவர் )
2:ஸியாம் இப்னு அம்மார் (நம்பகமானவர் என்றாலும் வயதான பின் தவரிழைத்தவர்)
3:ஹைதம் இப்னு ஹாரிஜா (இவர் நம்பகமானவர் குறை கூறப்படாதவர்)
இந்த மூவரும் கூறாத ஒன்றை அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி மேலதிகமாகச் சொல்கின்றார்.
என்று வதிடுகிறார்கள்.
நமது விளக்கம்
சுலைமான் பின் உத்பா பலவீனமானவரா?
அறிவிப்பாளர் சுலைமான் பின் உத்பா விசயத்திலும் இவர்கள் உண்மைக்குப் புறம்பாகவே நடந்துள்ளனா். இவர் நம்பகமானவர் என்று பலா் நற்சான்று அறிவித்துள்ளனா்.
துஹைம், அபூ ஹாதிம், அபூ சுா்ஆ, ஹைஸம் பின் காரிஜா, ஹிசாம் பின் அம்மார், இப்னு ஹிப்பான், இப்னு ஹஜா், தஹபீ ஆகியோர் கூறியுள்ளனா். இவர்கள் யாரும் இவரை பலவீனமானவா் என்று கூறவில்லை.
அறிஞா்களின் ஒட்டுமொத்தக் கருத்தையும் கவனித்து சாறு பிழிந்து கூறும் இப்னு ஹஜா் அவர்களும் தஹபீ அவர்களும் இவரை ஸதூக் – உண்மையாளர் என்றே கூறுகின்றனா்.
இமாம் யஹ்யா பின் மயீன் மட்டுமே இவரைக் குறை கூறியுள்ளார். அந்தக் குறை காரணம் இல்லாமல் உள்ளது. பலருக்கு மாற்றமாக இவர் ஒருவர் மட்டும் காரணம் கூறாமல் பொத்தாம் பொதுவாகக் குறை சொன்னால் அந்தக் குறை ஹதீஸ் கலையில் நிராகரிக்கப்பட்டு விடும். இந்த அடிப்படை புரியாமல் சுலைமான் பின் உத்பாவையும் இவர்கள் பலவீனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்
ஒரு நம்பகமானவா் மற்ற பல நம்பகமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்தால் தான் அதை நிராகரிக்க வேண்டும். மற்றவா்கள் அறிவிக்காத மேலதிக தகவலை ஒருவா் அறிவித்தால் அதை நிராகரிக்கக் கூடாது.
இது எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனென்றால் அபூ ஜஃபர் அஸ்ஸுவைதி நம்பகமானவர். மற்ற எவரையும் விட உறுதியானர் என்பதை நாம் முன்னர் நிரூபித்துள்ளோம்.
சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்று இந்த வாசகம் மற்ற குர்ஆன் வசனங்களுக்கு ஏற்ப மிகத் தெளிவாக அமைந்திருக்கின்றது. அல்ஹம்து லில்லாஹ்.
28.09.2016. 6:12 AM