தர்காக்களில் அற்புதம் நடக்கிறதா?
இறந்தவர்களுக்கு ஆற்றல் இல்லை என்றால் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றனவே? அது எப்படி என்று சிலர் கேட்கின்றனர்.
தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன எனக் கூறுவதில் உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தி வருகின்றன.
ஒரு தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும். ஆயிரத்தில் 998 பேர் செல்வந்தராக ஆகவில்லையே அது ஏன்? இதைத் தான் சிந்திக்க மறுக்கின்றனர்.
செல்வந்தராகி விட்ட அந்த இரண்டு பேர், 998 பேருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கைகூடாத 998 பேர் "இவர் ஒரு மகானா'' என்று கூறிவிட்டால் ஏதேனும் கேடு விளைந்து விடுமோ என அஞ்சி வாய் திறப்பதில்லை.
இதன் காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி இறங்கி கடைசி வரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் மரணித்து விடுவதைப் பார்க்கிறோம். தர்காக்களில் அற்புதம் நடக்கவில்லை என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.
ஆயிரத்தில் இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில் மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை.
கோவில்களிலும், சர்சுகளிலும் இன்னும் பல வழிபாட்டுத் தலங்களிலும் நடப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
இவ்வாறு நடப்பதாக அவர்கள் நம்புவதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் தர்காக்களில் குவிவதை விட பல மடங்கு அதிகமாகக் காணிக்கைகள் குவிகின்றன. தங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு தான் காணிக்கைகள் செலுத்துவர் என்பதை அனைவரும் அறிவோம்.
இவர்களின் வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் போய் பிரார்த்திப்பது குற்றமில்லை என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின் வாதமாக இருக்கிறது.
ஆயிரத்தில் இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றனவே இது எப்படி நடக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.
ஒவ்வொரு காரியமும் நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும்போது தானாக அந்தக் காரியம் நிறைவேறும்.
அந்த நேரம் வரும்போது தர்காவில் இருப்பவர்கள், தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவர் நிகழ்த்திய அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
அந்த நேரம் வரும்போது கோவிலில் இருப்பவர்கள் அந்த சாமியின் அற்புதம் என நினைத்துக் கொள்கின்றனர்.
அந்த நேரம் வரும்போது சர்ச்சுகளில் இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேரியின் அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
இவர்கள் தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும் இவர்களது காரியம் கைகூடி இருக்கும். உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு விநாடி முந்தவும், பிந்தவும் செய்யாது என்று 7:34, 10:49, 16:61 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.