தொழுகையில் மனக்குழப்பம் ஏற்பட்டால்?
நான் தொழ ஆரம்பித்தால் எனக்குத் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படுகின்றன. சிறுநீர் கழித்தால் ஆடையில் பட்டிருக்குமோ என்ற சந்தேகம். தண்ணீர் பட்டாலும் அது சிறுநீராக இருக்குமோ என்ற சந்தேகம். தூங்கி எழுந்தால் விந்து வெளியாகி இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இதனால் தொழ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் இக்குழப்பத்தால் தொழ முடியாமல் போகின்றது. இதற்கு என்ன செய்வது?
பதில்:
صحيح البخاري
137 – حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، ح وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «لاَ يَنْفَتِلْ – أَوْ لاَ يَنْصَرِفْ – حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا»
தொழும்போது ஏதோ ஏற்படுவதாகத் தனக்குத் தோன்றுகின்றது என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், '(காற்றுப் பிரியும்) சப்தத்தைக் கேட்காமல், அல்லது அதன் நாற்றத்தை உணராமல் தொழுகையை விட்டுச் செல்ல வேண்டாம்' என்று பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி 137, 177, 2056
தொழுது கொண்டிருக்கும் போது திட்டவட்டமாகத் தெரியாமல் வீண் சந்தேகத்தின் அடிப்படையில் தொழுகையை முறிக்கக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.
சிறுநீர் ஆடையில் பட்டது உறுதியாகத் தெரிந்தால் அதைக் கழுவி விட்டுத் தொழ வேண்டும்.
சிலருக்குத் தூக்கத்தின் போது விந்து வெளிப்படுவதுண்டு. சில நேரங்களில் விந்து வெளிப்படுவது போன்ற கனவுகள் ஏற்படும். ஆனால் விழித்துப் பார்த்தால் விந்து வெளிப்பட்டதற்கான எந்த அடையாளமும் ஆடையில் இருக்காது.
விந்து வெளிப்பட்டது உறுதியாகத் தெரிந்தால், ஆடையில் அதற்கான அடையாளம் இருந்தால் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத் தொழ வேண்டும்.
விந்து வெளிப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு அதற்கான எந்த அடையாளமும் தெரியாவிட்டால் குளிப்பது கடமையில்லை.
صحيح البخاري
3328 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ أُمَّ سُلَيْمٍ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الحَقِّ فَهَلْ عَلَى المَرْأَةِ الغَسْلُ إِذَا احْتَلَمَتْ؟ قَالَ: «نَعَمْ، إِذَا رَأَتِ المَاءَ» فَضَحِكَتْ أُمُّ سَلَمَةَ، فَقَالَتْ: تَحْتَلِمُ المَرْأَةُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَبِمَ يُشْبِهُ الوَلَدُ»
'அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசுவதில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?' என்று உம்மு ஸுலைம் (ரலி) என்ற பெண்மணி கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'விந்து வெளிப்பட்டதை அவள் கண்டால் குளிப்பது அவசியம்' என்று விடை அளித்தார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: புகாரி 3328, 130, 282, 6091, 6121
கனவிலோ. விழிப்பிலோ விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பது கடமை என்பதையும், விந்து வெளிப்படுவது போல் தோன்றினால் குளிப்பது கடமையில்லை என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
எதையெடுத்தாலும் சந்தேகம் ஏற்படுவதாகக் கூறியுள்ளீர்கள். இது போன்ற மனக் குழப்பங்கள் ஷைத்தானால் ஏற்படுவதாகும். இதிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு தேட வேண்டும் என்று அல்லாஹ் தனது திருமறையின் 114வது அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது போன்ற மனக் குழப்பங்கள் ஏற்படும் போது ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
صحيح البخاري
3276 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ: مَنْ خَلَقَ كَذَا، مَنْ خَلَقَ كَذَا، حَتَّى يَقُولَ: مَنْ خَلَقَ رَبَّكَ؟ فَإِذَا بَلَغَهُ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ وَلْيَنْتَهِ "
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்? என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், உன் இறைவனைப் படைத்தவர் யார்? என்று கேட்கின்றான். இந்தக் கட்டத்தை அவன் அடையும் போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். விலகிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3276