நபியின் மனைவியரை மணக்க அனுமதியில்லை என்பது ஆதாரமாகுமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அவர்களின் மனைவியரை மற்றவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.
அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது. – திருக்குர்ஆன் 33:53
ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரது மனைவியை மணந்து கொள்ளக் கூடாது என்பதை அனைவரும் அறிவோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரை யாரும் மணந்து கொள்ளக் கூடாது என்றால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதுதான் காரணம் என தீய கொள்கை உடையவர்கள் வாதிடுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதையும், அவர்கள் இவ்வுலகில் நடப்பதை அறிந்து கொள்ளக் கூடிய நிலையில் இல்லை என்பதையும் தெளிவான சான்றுகள் மூலம் முன்னர் தெளிவுபடுத்தியுள்ளோம்.
நபிகள் நாயகத்தின் மனைவியரை மற்றவர்கள் மணக்கக் கூடாது என்ற சட்டம் தான் மேற்கண்ட வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இருப்பது தான் அதற்குக் காரணம் என்று சொல்லப்படவில்லை.
இவர்களின் இந்த வாதம் தவறு என்பதை இன்னொரு சட்டத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு மனிதனின் தந்தை, அவனது தாய் அல்லாத இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தந்தை இறந்த பின்னர் அவரது மனைவியை மகன் மணந்து கொள்ளக் கூடாது என்று திருக்குர்ஆன் 4:22 வசனம் கூறுகிறது.
தந்தைக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை இதனால் கெடும் என்பது தான் இந்தத் தடைக்குக் காரணம் என்று அறிவுடைய மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.
இல்லை. அந்தத் தந்தை செத்த பின்பும் உயிரோடு இருக்கிறார் என்பதற்காகத் தான் அவரது மனைவியை அவரது மகன் மணக்க்க் கூடாது என்று சட்டம் போடப்பட்டுள்ளது என்று அறிவுடைய மக்கள் புரிய மாட்டார்கள்.
நபிகள் நாயகம் இறந்து விடுவார்கள். அவரது இறப்பிற்குப் பிறகு யாரும் அவர்களது மனைவியர்களை மணக்கக் கூடாது என்பது தான் இதன் பொருள்.
நபிகள் நாயகம் இறந்து விட்டார்கள். உயிருடன் இல்லை என்பதை எந்த வசனம் தெளிவாகப் பறை சாற்றுகின்றதோ அதையே நபிகள் நாயகம் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு இவர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள் எனில் இவர்கள் எந்த அளவுக்கு மூடர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.